பதுக்கல் செய்து வியாபாரம் செய்வது இஸ்லாத்தில் கூடுமா?  

ACJU/FTW/2021/020-435

 

01.09.2021

22.01.1443

 

அன்புடையீர்!

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

 

வியாபாரத்தின் போது பதுக்கல் செய்வது தொடர்பான மார்க்க விளக்கம் 

 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

 

இஸ்லாம் வியாபாரம் செய்வதை ஹலாலானதாக ஆக்கியுள்ளதோடு அதனை நாணயமாகவும் நேர்மையானதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

அல் குர்ஆனில் அல்லாஹு  தஆலா பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

 

وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا (سورة البقرة : 275)

 

அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். (அல்-பகரஹ் : 275)

 

عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ. (سنن الترمذي : 1209)

 

“நம்பிக்கையும் வாய்மையும் கொண்ட வியாபாரி மறுமையில் நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், ஷஹீதுகளுடனும் இருப்பார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                                                      (ஸுனன் அத்-திர்மிதீ : 1209)

 

வியாபாரம் செய்யும் பொழுது நேர்மைக்கும் வாய்மைக்கும் மாற்றமாக அளவை நிறுவையில் மோசடி செய்தல், பொய்ச் சத்தியம் செய்தல், ஏமாற்றுதல், குறைகளை மறைத்து விற்பனை செய்தல், கலப்படம் செய்தல் மற்றும் பதுக்கல் செய்தல் போன்ற மோசமான செயற்பாடுகளை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என இஸ்லாம் கூறியுள்ளது.

 

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பதுக்கல் என்பது உணவுப் பொருள்களை வாங்கி கடும் தேவை உள்ள நேரத்தில் அதிக இலாபம் வைத்து விற்பனை செய்வதற்காக சேமித்து வைப்பதாகும்.

 

الاحتكار : هُوَ أَنْ يَشْتَرِيَ الطَّعَامَ فِي وَقْتِ الْغَلَاءِ لِلتِّجَارَةِ وَلَا يَبِيعُهُ فِي الْحَالِ بَلْ يَدَّخِرُهُ ليغلوا ثَمَنُهُ. (شرح النووي على مسلم)

 

وَمِنْ الْمَنْهِيِّ عَنْهُ أَيْضًا احْتِكَارُ الْقُوتِ بِأَنْ يَشْتَرِيَهُ وَقْتَ الْغَلَاءِ وَالْعِبْرَةُ فِيهِ بِالْعُرْفِ لِيَبِيعَهُ بِأَكْثَرَ مِنْ ثَمَنِهِ لِلتَّضْيِيقِ حِينَئِذٍ. (تحفة المحتاج في شرح المنهاج)

 

 இவ்வாறு மக்களுக்கு அப்பொருட்களின் பக்கம் கடுமையான தேவையிருக்கும் நிலையில், விலையேற்றம் கருதிப் பொருட்களைப் பதுக்கி வைப்பதை இஸ்லாம் ஹராமாக ஆக்கியுள்ளது. இது மனித நேயத்திற்கும் மாற்றமானதாகும்.

 

வியாபாரத்தில் பதுக்கல் செய்பவர்கள் பாவிகள் எனவும் சபிக்கப்பட்டவர்கள் எனவும் ஹதீஸ்களில்  எச்சரிக்கப்பட்டடுள்ளன.

 

عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللهِ رضي الله عنه عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ. (صحيح مسلم : 1605)

 

“பாவியே பதுக்கல் செய்வான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக மஃமர் இப்னு அப்துல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                      (ஸஹீஹஹு முஸ்லிம் : 1605) 

 

இதன்படி பெரும்பாலும் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் எப்பொருளையும் பதுக்கல் செய்வது ஹராமாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

وَمِنْ الْمَنْهِيِّ عَنْهُ أَيْضًا احْتِكَارُ الْقُوتِ بِأَنْ يَشْتَرِيَهُ وَقْتَ الْغَلَاءِ وَالْعِبْرَةُ فِيهِ بِالْعُرْفِ لِيَبِيعَهُ بِأَكْثَرَ مِنْ ثَمَنِهِ لِلتَّضْيِيقِ حِينَئِذٍ. (تحفة المحتاج في شرح المنهاج)

 

(وَ) يَحْرُمُ (حَكْرُ) بِفَتْحِ الْحَاءِ أَيْ احْتِكَارُ (قُوتٍ) كَتَمْرٍ وَزَبِيبٍ وَشَعِيرٍ لِلتَّضْيِيقِ وَلِخَبَرِ مُسْلِمٍ: «لَا يَحْتَكِرُ إلَّا خَاطِئٌ» أَيْ آثِمٌ وَذَلِكَ بِأَنْ (اشْتَرَاهُ فِي) وَقْتِ (الْغَلَا) وَحَبَسَهُ (لِبَيْعِهِ الضَّعْفَا) بِفَتْحِ الضَّادِ وَإِسْكَانِ الْعَيْنِ جَمْعُ ضَعِيفٍ بِأَكْثَرَ مِمَّا اشْتَرَاهُ بِهِ (إذَا السِّعْرُ غَلَا) (الغرر البهية في شرح البهجة الوردية)

 

தற்போது முழு உலகும் குறிப்பாக எமது தாய்நாடும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதோடு, பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, வியாபாரிகள் இக்கட்டான இந்நிலையில் மக்களுக்கு நெருக்கடி கொடுக்காது அவர்களின் நலன்கருதி அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை பதுக்கி வைக்காது நியாய விலையில் விற்பனை செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 

பொதுவாக வியாபாரத்தில் இலாபமீட்டிக் கொள்வது மார்க்கத்தில் அனுமிக்கப்பட்ட  ஒன்றாகும். என்றாலும், அந்த இலாபம் பொருத்தமான அளவில் இருக்க வேண்டும் என்பதுடன் எல்லை கடந்து மக்களுக்கு சிரமம் உண்டாகும் முறையில் இருப்பது கூடாது. ஏனெனில், மக்களின் மனவிருப்பம் இன்றி கிடைக்கும் பணம் சுத்தமான பணமாக இருக்கமாட்டாது.

 

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை அவர்கள் வேறு வழியில்லாமல் கூடுதலான பணத்தைக் கொடுத்து பூரண மனவிருப்பம் இன்றியே வாங்குகின்றனர். அவ்வாறு ஒருவரின் மனவிருப்பம் இன்றி அவரது பணத்தை எடுத்துக் கொள்வது ஹலாலாக அமைய மாட்டாது.

 

இவ்விடயத்தை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

عَنْ أَبِي حُرَّةَ الرَّقَاشِيِّ، عَنْ عَمِّهِ، عن النبي صلى الله عليه وسلم لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ. (مسند أحمد : 20695)

           

ஒருவரது பொருளை அவரது பூரண மனவிருப்பம் இன்றி எடுத்துக்கொள்வது ஹலாலாகமாட்டாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹ{ர்ரா அர்ரகாஷீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரது தந்தையின் சகோதரன் ஹனீபா என்பவரைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்.                (முஸ்னத் அஹ்மத் : 20695)

 

அல்லாஹு தஆலா நிலைமைகளை சீராக்கி வெகுவிரையில் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவானாக.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்        

செயலாளர், பத்வாக் குழு                       

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா         

 

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு   

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் 

பொதுச் செயலாளர்,                              

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா          

 

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா