அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.
اسم لمدة تتربص فيها المرأة لمعرفة براءة رحمها أو للتعبد أو لتفجعها على زوجها - (كتاب العدد - مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج )
இத்தா அனுஷ்டிப்பது ஒரு இறை கட்டளையாகும். மேலும், கர்பிணியாக உள்ளாரா என்பதை விளங்குதல் மற்றும் கணவனுடைய பிரிவிற்காக கவலைப்படுதல் போன்ற காரணங்களும் இதில் உள்ளன.
ஒரு பெண் தாம்பத்திய உறவின் பின், தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் கணவனைப் பிரிந்தால், அப்பெண் மாதவிடாய் ஏற்படும் வயதுடையவராக இருந்தால் மூன்று சுத்தங்கள் இத்தா அனுஷ்டிப்பது அவசியமாகும்.
அதாவது, ஒரு பெண், தனது சுத்த காலத்தில்; மேற்கூறப்பட்ட ஏதாவதொரு முறையில் கணவனைப் பிரிந்தால், அந்த சுத்த காலத்துடன் சேர்த்து அடுத்து வரும் இரண்டு சுத்த காலங்கள் நிறைவடையும் வரை இத்தா இருத்தல் வேண்டும். அப்பெண் மாதவிடாய் காலத்தில் கணவனை விட்டும் பிரிந்திருந்தால் தொடர்ந்து மூன்று சுத்தங்கள் பூர்த்தியாகும் வரை இத்தா இருத்தல் வேண்டும்.
فإن طلقت طاهرا، وقد بقي من الطهر لحظة (انقضت بالطعن في حيضة ثالثة) لإطلاق القرء على أقل لحظة من الطهر وإن وطئ فيه (كتاب العدد - تحفة المحتاج في شرح المنهاج
தலாக் கூறப்பட்ட பெண்ணின் இத்தா பற்றி பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
“தலாக் கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று சுத்தங்கள் நிறைவடையும் வரை எதிர்பார்த்தல் வேண்டும்.” (அல்-பகரா : 228)
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ (البقرة : 228)
குல்உ மற்றும் பஸ்கு மூலம் பிரிந்த ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலமும் தலாக்குடைய இத்தாவைப் போன்றதே என்று ஷாபிஈ மத்ஹப் உட்பட பொரும்பாலான மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.
وأكثر أهل العلم يقولون: عدة المختلعة عدة المطلقة؛ منهم سعيد بن المسيب، وسالم بن عبد الله، وعروة، وسليمان بن يسار، وعمر بن عبد العزيز، والحسن، والشعبي، والنخعي، والزهري، وقتادة, وخلاس بن عمرو، وأبو عياض, ومالك، والليث، والأوزاعي، والشافعي، (فَصْل كُلّ فُرْقَةٍ بَيْنَ زَوْجَيْنِ فَعِدَّتُهَا عِدَّةُ الطَّلَاقِ - المغني لابن قدامة )
சில அறிஞர்கள், ஒரு தடவை மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் இத்தா முடிந்துவிடும் என்று கூறுகின்றனர். என்றாலும், இது சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ் ஆதாரபூர்வமற்றதாகும்.
மேலும், வயோதிபத்தை அடைந்து, மாதவிடாய் ஏற்படும்; என்ற நம்பிக்கையை இழந்த ஒரு பெண்ணினதும், இதுவரை மாதவிடாய் ஏற்படாத ஒரு பெண்ணினதும் இத்தாவுடைய காலம் மூன்று சந்திர மாதங்களாகும்.
“உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாய் ஏற்படாது என நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாம்.” (அத்-தலாக் : 04)
وَاللائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلاثَةُ أَشْهُرٍ وَاللائِي لَمْ يَحِضْنَ [الطلاق: 4
மேலும், தாம்பத்திய உறவுக்கு முன் தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒரு முறையில் கணவனைப் பிரியும் பெண்ணுக்கு இத்தா இருப்பது கடமையாகாது.
يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهنَّ من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها. [ الأحزاب: 49]
கணவன் மரணித்த ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களுமாகும். இதற்கு தாம்பத்திய உறவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக திருமணத்திற்கான ஒப்பந்தம் நிகழ்ந்திருப்பது போதுமானது.
இதனை பின்ரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு மரணித்து விட்டால், அந்த மனைவிமார்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு "மரணத்திற்கான இத்தா" என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதில் குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்-பகரா: 234)
وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ. (البقرة: 234
ஒரு பெண், மேற்கூறப்பட்ட எந்தவகையான இத்தா கடமையை அனுஷ்டிப்பவராக இருந்தாலும், அப்பெண் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.
(عِدَّةُ الْحَامِلِ مِنْ حُرَّةٍ وَأَمَةٍ عَنْ فِرَاقِ حَيٍّ أَوْ مَيِّتٍ بِطَلَاقٍ رَجْعِيٍّ أَوْ بَائِنٍ (بِوَضْعِهِ) أَيْ الْحَمْلِ لِقَوْلِهِ تَعَالَى: {وَأُولاتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} [الطلاق: 4] (كتاب العدد - مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج
கணவன் மரணித்ததன் பின் இத்தா அனுஷ்டிக்கும் ஒரு பெண் அலங்காரங்களை விட்டும் தவிர்ந்திருப்பது கட்டாயமாகும். தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் கணவனைப் பிரியும் ஒரு பெண் இத்தா அனுஷ்டிக்கும் போது அலங்காரங்களை விட்டும் தவிர்ந்திருப்பது சுன்னத்தாகும்.
ஒரு பெண் இத்தா இருக்கும் காலத்திற்குள் தனது கணவன் அல்லாத வேறொருவரை மறுமணம் செய்ய முடியாது. அவ்வாறு மறுமணம் செய்து கொண்டால் அத்திருமண ஒப்பந்தம் செல்லுபடியற்றதாக ஆகிவிடும்.
அவளது கணவனையே மறுமணம் செய்து கொள்ள நாடினால் பின்வரும் ஒழுங்குகள் கவனிக்கப்படல் வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு தலாக்குகள் சொல்லப்பட்டவளாக இருந்தால், அவளது இத்தாவுடைய காலமாகிய மூன்று சுத்தங்கள் முடிவடைவதற்கு முன், தலாக் கூறிய அவளது கணவனுக்கு அவளை புதிய திருமண ஒப்பந்தம் எதுவுமின்றி மீட்டிக் கொள்ள முடியும். இத்தா முடிந்ததன் பின் மீட்டிக் கொள்வதாக இருந்தால் புதிய திருமண ஒப்பந்தம் அவசியமாகும்.
மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் அல்லது மூன்று தடவைகள் குல்உ செய்யப்பட்ட பெண் அதே கணவனை இத்தாவுடைய காலத்திலோ அல்லது இத்தா முடிந்ததன் பின்போ மறுமணம் செய்ய முடியாது. அவ்வாறு அவரை மீண்டும் மறுமணம் செய்வதாக இருந்தால், அப்பெண் இத்தாவை நிறைவு செய்ததன் பின்னர், வேறொருவரை உரிய முறையில் திருமணம் செய்து அவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதன் பின், விவாகரத்தின் மூலம் அல்லது கணவன் மரணிப்பதன் மூலம் பிரிந்தால், உரிய இத்தாவை நிறைவு செய்ததன் பின் மீண்டும் புதிய திருமண ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், முதலாவது அல்லது இரண்டாவது குல்உகள் செய்யப்பட்ட பெண் அல்லது பஸ்கு முறையில் கணவனை பிரிந்த பெண், இத்தாவுடைய காலத்திற்குள்ளும் அல்லது இத்தாவுடைய காலத்திற்குப் பின்னரும் அதே கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் புதிய திருமண ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமாகும்.
وأما البائن التي تحل للزوج فهي المختلعة إذا كانت في عدتها يجوز للزوج أن يصرح بخطبتها؛ لأنه يحل أن يتزوجها في عدتها، (الحاوي الكبير في فقه مذهب الإمام الشافعي
இவை இத்தா சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சில சட்டங்களாகும். இது சம்பந்தமான விரிவான சட்டதிட்டங்கள் இஸ்லாமிய சட்ட நூற்களில் தெளிவாக உள்ளன. தேவையேற்படும் போது மார்க்க சட்டக் கலையில் தேர்ச்சி பெற்ற உலமாக்களிடம் விளக்கங்களை பெற்றுக் கொள்வது நல்லது என ஆலோசனை கூறுகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.