ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்

அன்புடையீர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் செய்வது சம்பந்தமாக இஸ்லாமிய வரையறைகள் பற்றி கடந்த 02.07.2014 நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலும், 20.11.2014 அன்று நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்திலும் மிகவும் விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் விடயங்கள் முடிவு செய்யப்பட்டன.


எந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிக்க முடியுமாக இருந்தால், அதனையே முற்படுத்துதல் வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது.


பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் தமது காரியங்களைச் சாதிக்க முடியாத பட்சத்தில், பிறருக்கு எவ்விதத்திலும் பாதிப்பு, இடையூறு இல்லாத வண்ணம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடையில்லை.


ஏனெனில், ஆர்ப்பாட்டம் என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட, பொதுவான கோரிக்கைகளை ஜனநாயக நாடுகளில் வென்றெடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு யுக்தியாகும்.


அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வதாயின், பின்வரும் விடயங்களைக் கவனிப்பது அவசியமாகும்.


01. ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படக்கூடிய பிரயோசனங்களை விட அதனால் ஏற்படும் கெடுதிகள் அதிகமாக இல்லாதிருத்தல்.
02. ஆர்ப்பாட்டத்தின் மூலம் உயிர்கள் மற்றும் உடமைகள் போன்றவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படாமலிருத்தல்.
03. ஆர்ப்பாட்டத்தின் மூலம் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான தொழில், கல்வி, பயணம் போன்றவைகள் ஸ்தம்பிதம் ஆகாமலிருத்தல்.
04. ஆர்பாட்டத்தின் மூலம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருத்தல்.
05. ஆர்ப்பாட்டத்தின் போது, பொது தனியார் அமைப்புக்கள் நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றிற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழையாதிருத்தல்.
06. ஆர்ப்பாட்டம் செய்வதற்கு விருப்பமில்லாதவர்களை ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைக்கும்படி வற்புறுத்தாமல் இருத்தல்.
07. ஆர்ப்பாட்டத்தின் மூலம் வன்முறைகள் உருவாகி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருத்தல்.
08. சில குறிப்பிட்ட நபர்களின் சொந்த இலாபங்கள், மறைமுகமான நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
09. பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருத்தல்.
10. கொடும்பாவி எரித்தல் போன்ற சன்மார்க்கத்திற்கு முரணான விடயங்களைத் தவிர்த்தல்.
11. ஆர்ப்பாட்டம் ஊருடைய பொது விடயம் சம்பந்தமாக இருந்தால், அவ்வூர் ஆலிம்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்தல்.
12. ஆர்ப்பாட்டத்திற்கென்று நாட்டில் உள்ள சட்டவரையறைகளை மீறாதிருத்தல்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ