அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
கேள்வி 01 :
அந்நிய பெண்கள் (பிறமதத்தவர்கள்) தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு வரும்போது எங்கள் பள்ளிவாசலுக்கு முஸல்லா, மின்குமிழ், காபட் போன்ற அன்பளிப்புக்களை தருகின்றார்கள். அவைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா?
பதில் :
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்கு வழங்கும் அன்பளிப்புகள், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.
கேள்வி 02 :
தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று திரும்பிவரும் பெண்கள் (முஸ்லிம் உட்பட) தனிப்பட்ட ரீதியில் நமக்குத்தரும் அன்பளிப்புப் பொருட்களை நாம் ஏற்றுக்கொள்வது கூடுமா?
பதில் :
முதலாவது கேள்விக்கு அளிக்கப்பட்;ட பதில் போன்றே, அவர்களது அன்பளிப்புகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.
கேள்வி 03 :
மஸ்ஜித் மின்சக்தியால் (இமாம், முஅல்லிம், சேவையாளர்கள்) தவிர்ந்த ஏனையவர்கள் கைத்தொலைபேசிகளுக்கு மின்றேற்றுவது கூடுமா?
பதில் :
மஸ்ஜிதின் மின் சக்தியைப் பயன்படுத்திப் பொதுமக்கள் தொலைபேசிகளுக்கு மின் ஏற்றுவது, மஸ்ஜித்களைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்களது அனுமதியைப்பொருத்து வித்தியாசப்படும். ஏனெனில், மஸ்ஜித்களைப் பரிபாலனம் செய்வதற்கான செலவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஊர் மக்களினால் அவர்களே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர்.
மஸ்ஜித் நிர்வாகிகள், மஸ்ஜிதில் தொலைபேசிகளை மின்னேற்றுவது கூடாது என்று கூறியிருந்தால், அல்லது அது சம்பந்தமாக ஏதாவது அறிவித்தல்கள் மஸ்ஜிதில் தொங்கவிடப்பட்டிருந்தால், மஸ்ஜிதின் மின்சாரத்தைப் பாவிப்பதற்கு அனுமதியில்லை.
அவ்வாறு, மஸ்ஜிதின் மின்சாரத்தைத் தொலைபேசிக்கு மின்னேற்றுவதற்காக மஸ்ஜித் நிர்வாகிகள் அனுமதியளித்தால் பயன்படுத்தலாம். என்றாலும், மஸ்ஜிதில் மின்னேற்றுவதற்காக நியாயமான ஒரு தொகையை மஸ்ஜிதின் செலவுகளுக்காக உள்ள உண்டியலில் வைத்துவிடுவது நல்லது.
கேள்வி 04 :
எங்கள் கிராமத்துப் பள்ளிவாயலுக்குச் சொந்தமாக சிறு தொகுதி வெற்றுக்காணி உள்ளது அதில் தனிப்பட்ட ரீதியாக விவசாயம் செய்ய முடியுமா? அப்படியானால் ஒப்பந்தம், முதலீடு, இலாபப்பங்கீடு எவ்வாறு அமைய வேண்டும்.
பதில் :
மஸ்ஜிதுக்குச் சொந்தமான வெற்றுக் காணியை மஸ்ஜித் நிர்வாகிகளின் அனுமதியுடன் சந்தை விலைக்கு தனிப்பட்ட ஒரு நபர் வாடகை செலுத்தி விவசாயம் செய்வதற்கு அனுமதியுண்டு. செலுத்தப்படும் வாடகையே மஸ்ஜிதுக்கு இலாபமாக அமையப்பெறும். வாடகைக்கு கொடுக்கப்படும் காலம் மூன்று அல்லது அதைவிடக் குறைவான காலமாக இருப்பது சாலச்சிறந்தது. ஏனெனில் இதனால் ஏற்படும் பல சட்டப்பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளலாம்.
கேள்வி 05 :
பள்ளிவாசல்களில் ஏலம் விடப்படும் பொருட்களை விலைக்கு வாங்கி உபயோகிக்கலாமா?
பதில் :
ஒரு பொருளை ஏலம் முறையில் விற்பனை செய்வது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட முறைமைகளில் ஒன்றாகும். இதற்கு கீழ்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
حديث أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَاعَ حِلْسًا ( بساط للأرض أو كساء لظهر الدابة ) وَقَدَحًا وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَا الْحِلْسَ وَالْقَدَحَ فَقَالَ رَجُلٌ أَخَذْتُهُمَا بِدِرْهَمٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَزِيدُ عَلَىمٍ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ فَأَعْطَاهُ رَجُلٌ دِرْهَمَيْنِ فَبَاعَهُمَا مِنْهُ . رواه الترمذي دِرْهَ
“நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் விரிப்பொன்றையும் பாத்திரம் ஒன்றையும் விற்பதற்காக, இவற்றை யார் வாங்குவது என்று கேட்டார்கள். அதற்கு ஒரு மனிதர், நான் அவற்றை ஒரு திர்ஹத்திற்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் ஒரு திர்ஹத்தை விட அதிகமாக யார் எடுப்பது என்று கேட்டார்கள். இன்னுமொரு மனிதர் நான் இரண்டு திர்ஹங்களுக்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவருக்கு அவ்விரண்டையும் விற்றார்கள்.” (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக், நூல் : திர்மிதி)
மஸ்ஜிதுக்காக வக்ப் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடாது. என்றாலும், இத்துப்போன பாய்போன்ற, பாவனைக்கு உதவாத வக்ப் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஸதகாவின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களாக இருந்தால் அவற்றை விற்பனை செய்யலாம். அதன் வருமானத்தை மீண்டும் மஸ்ஜிதின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படல் வேண்டும்.
ஏலம் செய்யும் பொழுது மஸ்ஜிதிற்குள் இல்லாமல், அதன் வெளி வளாகத்தில் அல்லது வேறு இடத்தில் வைத்துக்ககொள்ளல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ