கணவன்  தன் மனைவியை ஒன்று சேருவதற்கு அழைக்கும் போது மறுப்பதற்கு மார்;க்கத்தில் அனுமதியுண்டா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துணவர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும்  நடந்து கொள்ளுதல் வேண்டும். 'இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் : ஸஹீஹு முஸ்லிம் : 1469)


மேலும், கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருப்பது போன்று மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. அப்துல்லாஹ் இப்னு அம்ரு றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், இரவு முழுவதும் நின்று வணங்குவதில் ஈடுபட்ட காரணத்தினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உனது மனைவிக்குரிய கடமையும் உள்ளது' என்று அன்னாருக்குக் கூறினார்கள்.  
 
அதேபோன்று, சப்வான் இப்னு முஅத்தல் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவி  தொடர்ந்து சுன்னத்தான நோன்பு நோற்ற பொழுது அவர்கள் நோன்பு நோற்க வேண்டாம் என்று தண்டித்தார்கள். அதற்கு அப்பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறைப்பாடு செய்தார்கள். சப்வான் இப்னு முஅத்தல் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இது பற்றி விசாரித்த போது, அவர்கள் 'நான் வாலிபனாக இருக்கின்றேன். என்னால் உடலுறவை விட்டும் சகித்துக் கொள்ள முடியாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். அப்பெண்ணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்து, கணவனின் அனுமதியின்றி சுன்னத்தான நோன்பு நோற்க வேண்டாம் என்று கூறினார்கள்.

 
இவ்விரு சம்பவங்களிலும், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளில் பராமுகமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகின்றது. மேலும், மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடைமைகளில் ஒன்று கணவன் உடலுறவுக்கு அழைக்கும் போது அதற்கு இணங்குவதாகும்.  இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.


கணவன் மனைவியை தனது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அழைத்தால் மனைவி அடுப்பங்கரையில் இருந்தாலும், அதற்கு அவள் இணங்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று தல்க் பின் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : அத்திர்மிதி - ஹதீஸ் எண் : 1160)


மேலும், கணவன் மனைவியை உடலுறவுக்காக அழைக்கும் போது தகுந்த காரணம் இன்றி இணங்காமலிருப்பது அவள் மீது ஹராமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஒருவர் தனது மனைவியை உடலுறவுக்காக அழைத்து, அதற்கவள் மறுத்து, கணவன் அவள் மீது  கோபித்த நிலையில் இரவைக் கழித்தால், அதிகாலை வரை அவளை மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றனர் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல் : ஸஹீஹு முஸ்லிம்  - எண் : 1436)


இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் 'ஷரீஅத்தில் அனுமதியளிக்கப்பட்ட காரணங்களுக்காகவே அன்றி கணவன் மனைவியை உடலுறவுக்கு அழைக்கும் போது அவள் மறுப்பது ஹராம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.' என விளக்கம் கூறுகின்றார்கள்.  


ஆகவே, ஒரு பெண்ணுக்கு கடுமையான நோய், உடல் பலவீனம், போன்ற உடலுறவில் ஈடுபட முடியாத தகுந்த காரணங்கள் இருக்கும் நிலையில் கணவன் அழைத்தால் அவள் அதற்கு இணங்குவது கடமையாகாது.


என்றாலும், மனைவி தனது நிலைமையைக் கணவனுக்கு எடுத்துக்கூறி அவருடன் சுமுகமாகப் பேசி, முடியுமான அளவு உடலுறவு மற்றும் அதற்கு முன்னுள்ள விடயங்களில் ஒத்துழைப்பது அவளின் பொறுப்பாகும். அதேபோன்று கணவனும் மனைவியின் நிலைமைகளை விளங்கி அனுசரித்து புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு