கூட்டு உழ்ஹிய்யா பற்றிய மார்க்க விளக்கம்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

உழ்ஹிய்யா எனும் இபாதத்தை நிறைவேற்றுபவர், அது சம்பந்தமான சட்டதிட்டங்களை அறிந்தவராக இருப்பின், நாட்டின் சட்டங்களையும் பின்பற்றி, அவராகவே அதை நிறைவேற்றுவதும், முடியுமாக இருந்தால் அவரது வீட்டில், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் இருப்பதும் சிறந்தது. 

தற்காலத்தில் சில இடங்களில் உழ்ஹிய்யாவுடைய அமலைக் கூட்டாக நிறைவேற்றும் வழமை உள்ளது. பொதுவாக ஸகாத், நேர்ச்சை, அகீக்கா, உழ்ஹிய்யா போன்ற அமல்களை தானே முன்னின்று நிறைவேற்றுவதைப் போன்று, பிறரையும் பொறுப்பாக்கி, அவற்றை நிறைவேற்ற அனுமதியுள்ளது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உழ்ஹிய்யாவின் சில பிராணிகளை அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் உழ்ஹிய்யாக் கொடுத்திருக்கின்றார்கள். உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு பொருப்பாக்கப்படுபவர் தனி நபராக அல்லது ஒரு நிறுவனமாக  இருக்கமுடியும். என்றாலும், உழ்ஹிய்யா ஒரு வணக்கமாக இருப்பதால், அதைக் நிறைவேற்றுவதற்குப் பொருப்பேற்பவர்கள் உழ்ஹிய்யா சம்பந்தமான மார்க்க சட்டங்களை அறிந்தவராக இருத்தல் வேண்டும் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். 

மேலும், இலங்கையில் பிராணிகளை அறுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள பிரத்தியேக அரசாங்க சட்டங்களையும் உழ்ஹிய்யாக் கொடுப்பவர்கள் கவனத்தில் கொள்வது இலங்கை நாட்டுப் பிரஜை என்ற வகையில் அவசியமாகும். தனியாக ஒவ்வொருவரும் உழ்ஹிய்யாவுடைய அமலை நிறைவேற்றும்போது இச்சட்டங்களைப் பின்பற்றி நிறைவேற்றுவது குறிப்பாக நகர்ப்புறங்களில் கடினமான விடயமாகும்.

இவ்வடிப்படையில், உழ்ஹிய்யா சம்பந்தமான மார்;க்க அறிவுடனும், அரசாங்க சட்டங்களைப் பின்பற்றியும் தனியாக உழ்ஹிய்யாவைக் கொடுக்க முடியுமாக இருந்தால், தனியாகக் கொடுப்பதே சிறந்தது. அவ்வாறு தனியாகக் கொடுப்பது சிரமமாக இருக்கும் பட்சத்தில்; தனி நபரையோ அல்;லது நிறுவனத்தையோ உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு நியமிக்க முடியும்.

நியமிக்கப்படுவர்கள், முழு அமானிதத்துடன் இதை முறையாக நிறைவேற்ற முடியுமாக இருந்தால் தான், இப்பொறுப்பை ஏற்கவேண்டும். அவ்வாறு பொறுப்பேற்பவர்கள் குறித்த உழ்ஹிய்யாப் பிராணிக்கு அல்லது அதன் பங்கிற்கு எவ்வளவு பெறுமதியோ அந்தத் தொகையையும், அதனுடன் சம்பந்தமான இதர செலவுகளை மாத்திரமே அறவிடுதல் வேண்டும். உழ்ஹிய்யா மற்றும் உழ்ஹிய்யா சம்பந்தமான இதர செலவுகள் கழிந்ததன் பின்னர், ஏதேனும் மீதமானால், அதை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தல் வேண்டும்.

மேலும், பிறரை நியமிக்கும் சந்தர்ப்பங்களில், உழ்ஹிய்யாக் கொடுப்பவரும், உழ்ஹிய்யாக் கொடுக்கும் இடத்தில், முடியுமாயின் சமுகமளித்திருப்பது விரும்பத்தக்கது. நியமிக்கப்பட்டவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் பொழுது, நியமித்தவர் உழ்ஹிய்யாவுடைய நிய்யத்தை வைப்பது போதுமானது.

உழ்ஹிய்யாவுக்காகப் பிறரை நியமிக்கும் பொழுது, நியமிப்பவர், நியமிக்கப்பட்டவரை, உழ்ஹிய்யாவுடைய நிய்யத்தை நீங்களே வைத்து உழ்ஹிய்யாவை நிறைவேற்றுங்கள் என்று கூறிப் பொறுப்பாக்கவும் முடியும்.

இந்நிலையில், நியமிக்கப்பட்டவர்கள் உழ்ஹிய்யாக் கொடுக்கும் போது, குறிபிட்ட பிராணி அல்லது அதன் பங்குகள் யாருடையது என்பதை முடிவு செய்து, அவருடைய நிய்யத்தை வைப்பது அவசியமாகும்.

அவ்வாறே, சில இடங்களில், பல மாடுகளை உழ்ஹிய்யாக் கொடுக்க நியமிக்கப்பட்டவர்கள் மூலம், சில மாடுகளைக் குர்பான் செய்து, ஏழைகளுக்கு எப்பகுதியையும் ஒதுக்காமல் உழ்ஹிய்யாக் கொடுத்தவர்களுக்கு மத்தியில் மாத்திரம் பங்கு பிரிக்கப்படுகிறது. இம்முறை தவறானதாகும். ஏனெனில், உழ்ஹிய்யாவுடைய பிராணி அல்லது பங்கில், சிறிதளவேனும் ஏழைகளுக்கு சதகா செய்வது அவசியம் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு வகீலாக்கப்பட்டவர், தான் உழ்ஹிய்யாக் கொடுக்கும் பகுதியில் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கான நேரம் நுழைந்திருப்பது அவசியமாகும். உதாரணத்திற்கு சஊதி நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் இலங்கையில் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு ஒருவரை நியமித்தால் இலங்கையில் உழ்ஹிய்யாவுடைய நேரம் நுழைந்திருப்பது அவசியமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு