புனித அல்-குர்ஆன் எந்த சூழ்நிலையிலும் ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறுகிறது.
மேற்கண்ட அல் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள், அல்லாஸூ தஆலா நபி முஹம்மத் ஸல்லல்லாஸூ அலைஹி வஸல்லம் அவர்களை கருணை காட்டுபவராக இவ்வையகத்துக்கு அனுப்பியுள்ளான் என்பதையும், இஸ்லாம் தீவிரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பதையும், எந்நிலையிலும் நடுநிலையாகவும், நிதானமாகவும், மிதமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிறருக்கு அநியாயம் இழைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன. தற்கொலையை பெரும்பாவமென கூறி முற்றிலும் அதை தடைசெய்துள்ள இஸ்லாம், அந்தப் பாவச் செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை மறுமையில் உண்டு எனவும் எச்சரித்துள்ளது. இவ்விடயம் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாம் வசிக்கும் நாட்டின் சட்டத்தை பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் பொறுப்பாகும் என்பதுடன், தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்துவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
தற்காலத்தில் “மூளைச் சலவை செய்யப்பட்ட” முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான தீவிரவாத சிந்தனையுடன் உலகளவில் செயல்பட்டுவருவதை பார்க்க முடிகிறது. அதனால், உலகம் முழுவதும் இஸ்லாம் பற்றிய அச்சம் ஏற்படுத்தப்படுகின்றது.
2015.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து இவ்வாறான தீவிரவாத சிந்தனைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற பிரகடனத்தை வெளியிட்டது. இதே அடிப்படையிலேயே சர்வதேச பத்வா அமைப்புக்களின் பத்வாக்களும் அமைந்திருக்கின்றன.
ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவனது சகாக்களால் உயிர்த்த ஞாயிறு 2019.04.21 அன்று மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டித்தோம். இம்மிலேச்சத்தனமான தாக்குதலால், அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டு இன்னும் பலர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டதோடு, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களும் சேதப்படுத்தப்பட்டன.
இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இந்த தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள், இஸ்லாத்திற்கு முரணானது என்ற காரணத்தினால் தான், அந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டோரின் உயிர்களை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க வேண்டாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வெளியிட்டது.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமும், அவனது சகாக்களும் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பிழையாக வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்களது செயற்பாடுகளை நியாயப்படுத்த அல்குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு அனுமதியும் கிடையாது. இது தொடர்பான பூரணமான விளக்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நெறி தவறிய தீவிரவாத சிந்தனைகளிலிருந்து முழு சமூகத்தையும் தேசத்தையும் பாதுகாத்துக் கொள்ள இவ்விடயத்தில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.