001/ACJU/FTW/2014/184 –C

1438.11.18
2017.08.11

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ்.

மேற்படி விடயம் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


தலைமைத்துவப் பொறுப்பு என்பது ஒர் அமானிதமாகும். ஒருவருக்கு எத்தகைய பொறுப்பு கிடைத்தாலும் அது ஓர் அமானிதமான சுமையாகவே கருதப்படும். அதைப்பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்படும்.


பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவுபடுத்துகின்றது.1


'நீங்கள் அனைவர்களும் பொறுப்புடையவர்கள். கியாமத் நாளில் உங்கள் பொறுப்பிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.' நூல்: சஹீஹ் அல்-புகாரி - 893
இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸின் விரிவுரையில் பின்வருமாறு விளக்கம் கூறுகின்றார்கள்.2

'பொறுப்புடையவர் என்பவர் நம்பிக்கைக்குரிய, பாதுகாக்கக்கூடிய, தான் பொறுப்பெடுத்த விடயத்தின் நலவுக்;காகச் செயற்படக்கூடியவராவார். தன்னுடைய கண்காணிப்புக்குக் கீழ் எது இருந்தாலும் அதிலே நீதமாகவும், இம்மை மறுமைக்கான நலவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் வேண்டப்படுவார்.'


இவ்வடிப்படையில், மஸ்ஜிதைப் பரிபாலிக்கும் பொறுப்பும் முக்கியம் வகிக்கின்றது. அல்லாஹ்வின் புனித இல்லமாகிய மஸ்ஜிதை நிர்வகிப்பது என்பது ஒரு பாக்கியமாக இருந்தாலும் அது மிகவும் பாரமான சுமையாகும் என்பதை நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். அல்லாஹ்வுடைய மாளிகையான மஸ்ஜிதில் இபாதத் செய்பவர்களுக்கான வசதிகளை சுய நலம் பாராமல் ஏற்படுத்திக் கொடுப்பது என்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.


என்றாலும், அது ஒரு பொறுப்பு மிக்கது என்பதனால் அதற்கென்று சில விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் மஸ்ஜிதை நிர்வாகம் செய்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறான்3 :


எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைபிடித்து ஸகாத்தும் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜித்களை பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். (அத்-தௌபா : 18)


எனவே, அல்-குர்ஆனில் அல்லாஹு தஆலா குறிப்பிட்ட முஃமினான, தொழுகையை நிலை நாட்டும், (வசதி இருந்தால்) ஸக்காத் கொடுக்கும், அல்லாஹ்வை மாத்திரம் பயப்படும் தன்மை கொண்டவர்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே அடிப்படையாகும்.


அத்துடன் ஆணாக இருத்தல், பருவ வயதை அடைந்திருத்தல் போன்ற பொதுவான தன்மைகளுடன் நேர்மையாக நடந்துகொள்ளும் தன்மை உடையவராக இருத்தல் என்பதும் இன்றியமையாத ஒரு விடயமாகும். இது இவ்விடயத்தில் மட்டுமின்றி ஏனைய பொறுப்புகளைச் சுமப்பவர்களிடமும் இருக்கவேண்டிய பண்பாகும்.


நேர்மையாக இருப்பது என்பது பற்றி மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.


இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் 'மின்ஹாஜுத் தாலிபீன்' இன் 'ஷஹாதா' வுடைய பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.


நேர்மையாக இருப்பதற்கு பெரிய பாவங்கள், விடாப்பிடியாக இருக்கும் சிறிய பாவம் போன்றவற்றிலிருந்து தவிர்ந்திருத்தல் நிபந்தனையாகும்.4


இமாம் மாவர்தி றஹிமஹுல்லாஹ் அல்-அஹ்காமுஸ் ஸுல்தானியாவில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


'நேர்மை என்பது பேச்சில் உண்மையாளராக, நம்பிக்கையாளராக, ஹராமானவைகளை விட்டும் தன்னை பாதுகாத்தவராக, பாவங்களை விட்டும் தற்காத்துக்கொண்டவராக, சந்தேகத்திற்கிடமானதை விட்டும் தூரமானவராக, கோபத்திலும் பொருத்தத்திலும் நம்பப்படக்கூடியவராகவும் .......இருத்தல் வேண்டும்.'5


அதேபோன்று தன்பொறுப்பிற்கு தேவையான மார்க்க அறிவுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.


உடல் மற்றும் ஆத்மீக வலிமை பெற்றவராக இருப்பதும் தலைமைத்துவ பண்புகளில் மிக முக்கியமானதாகும்.


அபூதர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைப் பொறுப்பாக்குமாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, நபியவர்கள் அவரது தோளில் தட்டி 'நீங்கள் பலவீனமானவர். அந்தப் பொறுப்பு அமானிதமானது. அதை முறையாக எடுத்து முறையாக நிறைவேற்றுபவரைத் தவிர மற்றோருக்கு கியாமத் நாளில் கேவலமும், அழிவுமாக அமையும்' என்று கூறினார்கள். நூல்: சஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண் : 4746 )6


தான் செய்யும் கடமைகளை உலக இலாபங்களின்றி அல்லாஹ்வுக்காக மட்டும் செய்யக் கூடிய இறையச்சம் உள்ளவர்களாக இருப்பதும் அவசியமாகும்.


இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ளவர்களையே மஸ்ஜித் நிர்வாகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவேண்டும். அத்தகையவர்களே பொறுப்புக்களை ஏற்றுச் செய்யத் தயாராக வேண்டும்.


மேலும், மஸ்ஜிதை நிர்வாகம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்படுவோர் தமது வருமான வழிகளையும் ஹலாலான வழியில் ஈட்டிக் கொள்பவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது தெரிவு செய்பவர்களது கடமையாகும்.


அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்                      அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
செயலாளர் பத்வாக் குழு                                  மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா              அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)              அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
பொதுச் செயலாளர்                                         தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா              அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

______________________________________________________________________________________________

[1]  عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا ، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ) قَالَ : وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ : ( وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ) . (رواه البخاري - بَابُ الجُمُعَةِ فِي القُرَى وَالمُدُنِ - 893)

[2]  " قَالَ الْعُلَمَاء : الرَّاعِي هُوَ الْحَافِظ الْمُؤْتَمَن الْمُلْتَزِم صَلَاح مَا قَامَ عَلَيْهِ , وَمَا هُوَ تَحْت نَظَره , فَفِيهِ أَنَّ كُلّ مَنْ كَانَ تَحْت نَظَره شَيْء فَهُوَ مُطَالَب بِالْعَدْلِ فِيهِ , وَالْقِيَام بِمَصَالِحِهِ فِي دِينه وَدُنْيَاهُ وَمُتَعَلِّقَاته " (شرح مسلم للنووي - بَاب فَضِيلَةِ الأمير الْعَادِلِ وَعُقُوبَةِ الْجَائِرِ وَالْحَثِّ عَلَى الرِّفْقِ (بِالرَّعِيَّةِ وَالنَّهْيِ عَنْ إِدْخَالِ الْمَشَقَّةِ عَلَيْهِمْ)

[3]  "إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين" التوبة : 18

[4]  "وَشَرْطُ الْعَدَالَةِ اجْتِنَابُ الْكَبَائِرِ، وَالْإِصْرَارِ عَلَى صَغِيرَةٍ"  (كتاب الشهادات, منهاج الطالبين)   

[5] الْعَدَالَةُ، وَهِيَ مُعْتَبَرَةٌ فِي كُلِّ وِلَايَةٍ، وَالْعَدَالَةُ أَنْ يَكُونَ صَادِقَ اللَّهْجَةِ ظَاهِرَ الْأَمَانَةِ، عَفِيفًا عَنِ الْمَحَارِمِ، مُتَوَقِّيًا الْمَآثِمَ، بَعِيدًا مِنَ الرَّيْبِ، مَأْمُونًا فِي الرِّضَا وَالْغَضَبِ، مُسْتَعْمِلًا لِمُرُوءَةِ مِثْلِهِ فِي دِينِهِ وَدُنْيَاهُ، فَإِذَا تَكَامَلَتْ فِيهِ فَهِيَ الْعَدَالَةُ الَّتِي تَجُوزُ بِهَا شَهَادَتُهُ، وَتَصِحُّ مَعَهَا وِلَايَتُهُ، وَإِنْ انْخَرَمَ مِنْهَا وَصْفٌ مُنِعَ مِنَ الشَّهَادَةِ وَالْوِلَايَةِ، فَلَمْ يُسْمَعْ لَهُ قَوْلٌ وَلَمْ يَنْفُذْ لَهُ حُكْمٌ. (الباب السادس في ولاية القضاء, الأحكام السلطانية)

[6]  عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، أَلاَ تَسْتَعْمِلُنِي ؟ قَالَ : فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي ، ثُمَّ قَالَ : يَا أَبَا ذَرٍّ ، إِنَّكَ ضَعِيفٌ ، وَإِنَّهَا أَمَانَةُ ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ ، إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا ، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا. رواه مسلم.