மக்தப் பற்றி

குழந்தைச் செல்வம் அல்லாஹ{தஆலாவினால் வழங்கப்படும் மாபெரும் அருட்கொடைகளில் ஒன்றாகும். இந்த அருட்கொடையின் பெறுமதியை விளங்கி அதற்குத் தகுந்தவாறு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லும் பிரகாரம் வாழ வழிவகுத்துக் கொடுப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகும்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். நாளைய சமூகம்  ஈமானிய உணர்வோடும் இஸ்லாத்தின் உன்னத வழிகாட்டல்களோடும் அறிவு நிறைந்த ஒளிமயமான  சமூகமாக, நாட்டின் நல்ல பிரஜையாக வாழவேண்டுமென்றால் இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சிறந்த கல்வி, ஒழுக்கம் என்பன வழங்கப்படல் வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் புனரமைப்புக் குழு இப்பாரிய நோக்கை இலக்காகக் கொண்டே செயற்பட்டுவருகின்றது.

மக்தப் என்ற எண்ணக்கரு இலங்கைக்கு ஒரு புதிய விடயம் அல்ல. 1969 ஆம் ஆண்டு கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சு வெளியிட்ட பிரசுரமொன்றில்ää கல்வி பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் எழுதிய ஒரு கட்டுரையில் மக்தப் கல்வித் திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது மக்தப் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம், அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை கற்பதற்கான ஆர்வத்தை முஸ்லிம் சிறார்களுக்குள் தோற்றுவிப்பதாகும். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது ஜம்இய்யத்துல் உலமாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த மக்தப் கல்வித் திட்டங்கள் பிரிட்டன், தாய்லாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.