03.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம் யூஸுபிய்யா ஜுமுஆ பள்ளி வாசலில் நடைப்பெற்றது. இதன் போது ரமலானை வரவேற்போம் எனும் தலைப்பில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

02.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளை மற்றும் இன்னும் சில நிறுவனங்களின் அனுசரனையுடன் " சர்வொதய" எனும் நிறுவனத்தின் ஏற்பாட்டில்   மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப் பொருளில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியீட்டு வைபவம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சுமார் எட்டு வருடங்களாக தயாரிக்கப்பட்ட புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியிலான விளக்கவுரை நூலின் வெளியீட்டு வைபவம் 2019.04.07 ஞாயிறு அன்று பண்டாரநாயக்க சர்வதேச வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

அஷ்-ஷைக் காரி எம்.எச்.எம் பிர்தௌவ்ஸ் அவர்களின் அழகிய கிராத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வாஞ்சையுடன் வாயார வாழ்த்தி வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சி அகார் முஹம்மத்  அவர்கள் நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு அன்றிலிருந்து இன்று வரை சட்ட ரீதியான ஆலோசனைகளைகளையும், ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்ற ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ பாயிஸ் முஸ்தாபா அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் சிறு குறிப்புக்களுடன் கூடிய எழிய மொழி நடையில் இந்த விளக்கவுரை தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும் என குறிப்பிட்டார்.

அந்நிகழ்வினை தொடர்ந்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீட பேராசிரியர்  கௌரவ தயா அமரசேகர அவர்களின் உரை இடம் பெற்றது. இவரது உரையில் இந்த விளக்கவுரை நிச்சயமாக பிற மதத்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்களை பற்றிய தப்பெண்ணங்களை களைத்தெறியும் என குறிப்பிட்டதுடன் நடை முறையில் சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளிற்கு புரிந்துணர்வினூடாகவே முற்றுப்புள்ள வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அவ்வுரையை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழி மூலமான விளக்கவுரை  தொடர்பான வீடியோ ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்புரை இடம் பெற்றது. அவ்வுரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர்கள் தனதுரையில் உலகலாவிய ரீதியில் புனித அல்குர்ஆனிற்காக பணியாற்றிய அனைவருக்கும் தாம் பிராத்திப்பதாக குறிப்பிட்டதுடன், சுமார் எட்டு வருடங்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த சவாலான பணியை செவ்வனே செய்வதற்கு பலரும் உதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அவ்வுரையுடன் வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வின் பிரதான அம்சமான முதல் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது. முதல் பிரதியை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்களினால் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அந்நிகழ்வினைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களின் உரை இடம் பெற்றது. இவரது உரையில் பன்மைத்துவம் மிக்க நாடுகளில் சகவாழ்வை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பிற மதத்தவர்கள் தொடர்பாக அறிந்து வைப்பது அவசியமாகும் என குறிப்பிட்டார்.

அந்நிகழ்வினை தொடர்ந்து இந்நிகழ்வின் விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காலத்திற்கு தேவையான விடயமொன்றையே செய்திருப்பதாகவும், இம்முயற்சியை தாம் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் நன்றியுரை இடம் பெற்றது. நன்றியுரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து தேசி கீதம் பாடப்பட்டது. இதனுடன் எமது நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் அன்றைய நிகழ்வின் நினைவாக அல்குர்ஆன் சிங்கள மொழி விளக்கவுரை இலவசமாக வழங்கப்பட்டதுடன், சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிகழ்விற்காக நாட்டின் நாலா புறத்திலிருந்தும் உலமாக்கள், கல்விமான்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக மாற்று மத சகோதரர்கள் என  பெரும் திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

07.04.2019 (01.08.1440)

இஸ்லாமிய வரையறைகளைப் பேணி விடுமுறை காலத்தைக் கழிப்போம்!

ஆரோக்கியமும் ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகள். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

عن عبدالله بن عباس رضي الله عنهما قال : قال النبي صلى الله عليه وسلم : نعمتانِ مغبونٌ فيهما كثيرٌ من الناس: الصحة والفراغ )رواه البخاري:6412(

“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகள் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர்.   1.ஆரோக்கியம். 2. ஓய்வு” என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 6412)

எம்மில் பலர் இவ்விரு அருள்களை பெரியளவில் அலட்டிக் கொள்வதில்லை. அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்வதுமில்லை. இதனால் எம்மில் பலர்  வாழ்வில் பல்வேறு கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர்.             

ஏப்ரல் மாத நடுப் பகுதியில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளிலும் பெரும்பாலான மத்ரஸாக்களிலும் விடுமுறை வழங்கப்படுவது வழமை. அந்த வகையில் சுமார் மூன்றரை மாதங்கள் தொடராக கல்விப் பணயத்தில் ஈடுபட்டு வந்த எமது மாணவர்கள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்காலப் பகுதியில் எம்மில் சிலர் தமது பிள்ளைகளுடன் குடும்பம் சகிதம் உல்லாசப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு விடுமுறையைக் கழிக்கும் நோக்கில் பயணங்கள் மேற்கொண்டு ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் தரிசிப்பது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. எனினும், இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி செயற்படுவது அவசியம்.

ஆடை அணிவது முதல் எமது உணவு, குடிபானங்கள் ஆகிய அனைத்திலும் ஹலால்- ஹராம் வரையறைகளை பேணி நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், போதைப்பொருட்களை பாவித்தல், வீதி ஒழுங்குகளை மீறி நெரிசலை ஏற்படுத்துதல், பிறருக்கு இடையூறு விளைவித்தல், அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல்… முதலான விடயங்களிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்த விடுமுறை காலத்தில் வழமை போன்று உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நற்பணிகளில் கால நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி நாட்டு மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்படுமாறும் முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு  வேண்டுகோள் விடுக்கிறது.

 

அஷ்ஷைக் எச். உமர்தீன்

செயலாளர்- பிரசாரக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ஊடகப்பிரிவு

 

21.03.2019 (13.07.1440)

நாடு வறட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படும் நிலை தேன்றியுள்ளது. இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.


அசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.
தண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.


நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்” என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள்

1169 اللَّهُمَّ اسْقِنا غَيثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعاً غَيْرَ ضارٍ، عَاجِلاً غَيْرَ آجِلٍ  رواه أبو داود 

“897اللَّهُمَّ أغِثْنَا ، اللَّهُمَّ أغِثْنا ، اللهٌمَّ أغِثْنا - “رواه مسلم

 “1176 اللهٌمَّ اسْقِ عِبَادَكَ ، وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ وَأحْيِ بَلَدَكَ المَيِّت - "رواه أبو داود

 

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.03.18 /1440.07.10


15.03.2019 அன்று நியுஸிலாந்தின் பள்ளி வாசலில் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. இவ்வாறான தாக்குதல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக உரிய தரப்பினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


இஸ்லாம் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற, பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத மார்க்கமாகும். இவ்வாறான மனிதபிமானமற்ற தாக்குதல்கள் உலகலாவிய ரீதியில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் சீர் குலைப்பவையாகவே இருக்கின்றது.


இப் பயங்கரவாதத் தாகுதல்களுக்கு இலக்காகி உயிர் நீத்த மக்களுக்காக அனைவரும் பிராத்திக்குமாறும், மறைவான ஜனாஸா தொழுகையை ( الصلاة على الميت الغائب) தொழுமாறும், இது விடயத்தில் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் கூடய கவனம் செலுத்துமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.


தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிராத்தனை செய்கின்ற அதே நேரம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 
அஷ்-ஷைக் எம்.எச் உமர்தீன்
பிரச்சாரக் குழு செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

02.03.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி  கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பிரதேசத்தில் உள்ள வர்தகர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

02.03.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வொன்று நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹக் பள்ளி வாசலில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத் சாலி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கான அனுமதி கோரி இன்று 2019.03.11 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் நிகழும் பற்றாக்குறைகள் தொடர்பாகவும், போதை ஒழிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

18.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் புதுக்கடை புஷ்ரா பெண்கள் அரபுக்கல்லூரியில்  நடை பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா