27.10.2020 / 09.03.1442
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார் 1991 முதல் 2003 வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவராகவும் 2003 முதல் 2010 வரை உப தலைவராகவும் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார்கள். 2010 முதல் இறுதி மூச்சு வரை கௌரவ பொதுச் செயலாளராக இருந்து ஜம்இய்யாவை வழி நடாத்திய ஒரு பெருந்தகையை இன்று நாம் இழந்திருக்கிறோம். சுமார் 33 வருடங்கள் தான் கல்வி கற்ற கபூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றி கல்விப் பணிக்காகவும் தீனின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்துள்ளார்கள்.
அன்னார் இந்நாட்டில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்கள். அன்னாரின் மறைவு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் பாரிய இழப்பாகும். இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு அடங்களாக அனைத்து உலமாக்கள் சார்ப்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளைப் பொறுத்து அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!
குறிப்பு : நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அவருக்காக துஆ செய்யுமாறும், முடியுமானவர்கள் காஇப் (غائب) ஆன ஜனாஸா தொழுகை தொழுதுகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கின்றது.
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/FRL/2020/19-236
2020.10.26
1442.03.08
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் (Covid- 19) பரவி அதன் மூலம் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். எமது நாட்டிலும் அந்தத் தாக்கம் காணப்படுகின்றது. அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
அல்லாஹூ தஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்றான். இச்சோதனைகள் நீங்குவதற்காக தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது தொழுகையில் குனூத் அன்னாஸிலாவை ஓதியுள்ள விடயம் பல ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூத் அன்னாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் (Covid- 19) தாக்கத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக அடுத்து ஒரு மாத காலத்திற்கு ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அன்னாஸிலாவை ஓதுவதற்கு மஸ்ஜித்களில் ஏற்பாடு செய்யுமாறும் மற்றும் வீடுகளில் தொழுபவர்களும் அதனை ஓதிவருமாறும் கேட்டுக் கொள்வதோடு, மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூத் அன்னாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ. (سنن أبي داود)
اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. (صحيح البخاري)
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ. (صحيح مسلم)
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
கொவிட்-19 அசாதாரண சூழ்நிழையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் வழிகாட்டல்கள்
1. நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோவிட்-19 உடைய பரவலை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.
2. மஸ்ஜித்களின் விடயங்களில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.
3. இச்சோதனைகள் நீங்குவதற்காக துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களின் பக்கம் திரும்புவதோடு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
4. ஆலிம்கள் இது தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புனர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.
“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ் ஷைக் அர்ஷத்
“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ்ஷைக் அர்கம் நூராமித்
மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக்
2020.09.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி புதுக்கடை மீரானியா ஜுமுஆ மஸ்ஜிதில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. இதில் இலங்கை அரபுக் கல்லூரிகள் சம்மேளனத்தின் 8 பிராந்தியத்திலிருந்து அதன் ஒருங்கிணைப்பாளர் உட்பட 3 பேர் விகிதமும் கொழும்பு மாவட்டத்திலுள்ள அரபுக் கல்லூரிகளிலிருந்து 2 உஸ்தாத்மார்கள் விகிதமும் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் 4 பிரதேசக் கிளைகளிலிருந்து 3 உலமாக்கள் விகிதமும் அழைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக் மற்றும் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் கலந்துகொண்டனர். மேலும், வருகைத் தந்த அனைவருக்கும் நூலின் இலவச பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
Ref: ACJU/GEN/2020/025
10.09.2020/21.01.1442
நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக
2020.09.09ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அறியத் தந்துள்ளார். ஜம்இய்யாவும் அவரது குறித்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இத்தால் அறியத் தருகின்றோம்.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
கௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்
புதிய அரசாங்கத்தின் நீதியமைச்சர் கௌரவ முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும், அமைச்சருக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது. இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித்தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதில் பொறுப்புக்கள் இஸ்லாமியப் பார்வையில் அமானிதமானதாகும் என்பதை நினைவுபடுத்தியதுடன், எமது மூதாதயர்களான பதீயுதீன் மஹ்மூத் போன்றவர்களின் சேவைகளை போன்று வரலாறு கூறும் சேவைகளை செய்வதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறும் வேண்டிக் கொண்டார்.
தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவரின் உரை இடம் பெற்றது. இதன் போது தங்களை போன்ற ஒருவருக்கு இவ்வாறானதொரு அமைச்சு வழங்கப்பட்டதையிட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், தொடர்ந்தும் முன்மாதிரிமிக்க முறையில் முன்னோக்கி செல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
தலைவரின் உரையை தொடர்ந்து கௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் உரையாற்றினார்கள். அதில் தமக்கு இவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், நாட்டை கட்டியெழுப்புவதில் முஸ்லிம்கள் கைகொடுத்து செயற்பட வேண்டும் என்பதாவும் குறிப்பிட்டார்.
இறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் பொருளாலர் அஷ்-ஷைக் எ.எல்.எம் கலீல் அவர்கள் பிராத்தனையுடன் நன்றியுரையை நிகழ்த்தி நிகழ்வை நிறைவு செய்தார். இந்நிகழ்வு 05.09.2020 அன்று இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/FRL/2020/13-230
24.08.2020
04.01.1442
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
நிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக
கடந்த 16.06.2020 அன்று கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டிருந்தது. குறித்த வழிகாட்டலில், ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தது.
அந்த அடிப்படையில், எந்தெந்த மஸ்ஜித்களில் சுகாதார அதிகாரிகளின் இடைவெளி பேணல் முறையை அமுல்படுத்தும் போது குறித்த நேரத்திற்கே மஸ்ஜிதுக்கு சமுகமளித்திருக்கும் அனைவரையும் அனுமதிக்க முடியாதுள்ளனவோ, அத்தகைய மஸ்ஜித்கள் குறித்த கோவிட் 19 உடைய அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு நிர்ப்பந்தமான இந்நிலையில், இரண்டாவது ஜுமுஆவை நடாத்தும் விடயத்தில் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொண்டு மார்க்க வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா