Super User

Super User

 
2021.02.04

 

நம் தாய் நாடான இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை நாம் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். என்றாலும் இலங்கை உட்பட முழு உலகிற்கும் பெரும் சவாலாக காணப்படும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் 73வது சுதந்திர தினத்தை அடைந்துள்ள நாம் இத்தினத்தை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மிகுந்த பொறுப்புணர்வுடன் நினைவுகூறுவது அவசியமாகும்.

இந்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன, மத பேதங்களுக்கு அப்பால் நம் மூதாதையர் உழைத்தனர். பேதங்களின்றி ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதும் அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டனர்.

சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுபட்டு பெற்றுத் தந்த இந்த சுதந்திர நாட்டில் வன்செயல்கள் நிகழ்வதையும் மத நிந்தனை இடம்பெறுவதையும் இந்நாட்டின் எந்தப் பிரஜையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனை அனுமதிக்கவும் மாட்டார்கள். இந்நாட்டு பிரஜைகளாகிய நாம் இச்சுதந்திரத்தின் அர்த்தத்தை உண்மைப்படுத்தும் வகையில் ஒன்றுபட்டு ஐக்கியத்துடனும் புரிந்துனர்வுடனும் நாட்டின் அபிவிருத்திற்கு பணியாற்ற முன்வர வேண்டும்.

நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழவும் நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்படவும் சகல வளமும் பெற்று சுதந்திர தேசமாக இலங்கை மிளிரவும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலிலிருந்து நாடு விரைவாக மீட்சி பெற்றிடவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றது.

 அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 


2021.01.18
1442.06.04

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


யஃஜூஜ், மஃஜூஜ் என்பவர்கள் யாவர்? அவர்கள் வெளியாகிவிட்டனரா? உலக அழிவு நெருங்கிவிட்டதா? என்பன தொடர்பான கேள்விகள், பலர் மூலம் தொடராக வினப்படுகின்றன.


இவற்றைப்பற்றி அல் குர்ஆன் அஸ் ஸூன்னாவின் ஒளியில் தெளிவு பெறுவது பொருத்தமானதாகும். யஃஜூஜ், மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவது மறுமையின் இறுதியாக நிகழும் பெரிய அடையாளங்களில் ஓர் அடையாளமாகும் என்பது அல்குர்ஆனில் சுருக்கமாகவும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் தமது பகுத்தறிவு வாதங்களை முன்வைத்து, யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்ற தவறான ஒரு பிரச்சாரத்தை முன்வைத்து, சமூகத்தில் வீணான குழப்பங்களை உண்டுபண்ணுகின்றனர். இவர்களின் இந்தப் போங்கு ஆதாரபூர்வமான பல நபிமொழிகளை மறுக்கும் நிலையை ஏற்படுத்தி, சமூகத்தை ஒரு பேராபத்தின் பக்கம் இட்டுச்செல்ல வழிவகுக்கும்.


யஃஜூஜ், மஃஜூஜ்; கூட்டத்தினர் மனிதர்களில் உள்ள ஒரு பிரிவினராவர். நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவரான யாபிஸ் என்பவரது சந்ததியினராவர். அவர்கள் உலகில் பெரும் குழப்பங்களில் ஈடுபட்டதன் காரணமாக துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம், அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெளிவர முடியாமல் பெரும் சுவர் கட்டப்பட்டு தடுக்கப்பட்டுள்ளனர்.


இதனை பின்வரும் அல் குர்ஆன் வசனம் உறுதி செய்கின்றது :

قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَـنَا وَبَيْنَهُمْ سَدًّا‏ (سورة الكهف : 94)


(யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரால் துன்புறுத்தப்பட்ட) அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது (குழப்பம்) செய்கிறார்கள்;. ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். (அல் கஹ்ஃப் : 94).

فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏ قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ‌ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ‌ ۚ وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا ‏ (سورة الكهف : 97-98)


எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை; அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை; இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும். (மறுமைநாள் ஏற்படும் என்ற) என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே என்று (துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள்) கூறினார். (அல் கஹ்ஃப் : 97-98).


இவ்வசனத்தில் (மறுமைநாள் பற்றிய அல்லாஹ்வுடைய) வாக்குறுதி நிறைவேறும்போது அச்சுவர் தரைமட்டமாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அல் அன்பியாஃ என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:


حَتّٰٓى اِذَا فُتِحَتْ يَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَّنْسِلُوْنَ‏ وَاقْتَـرَبَ الْوَعْدُ الْحَـقُّ فَاِذَا هِىَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِيْنَ كَفَرُوْا ؕ يٰوَيْلَنَا قَدْ كُنَّا فِىْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُـنَّا ظٰلِمِيْنَ‏. (سورة الأنبياء : 97)


யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தினர்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவும் படியாக, அவர்களுக்கு வழி திறக்கப்பட்டுவிட்டால், உண்மையான வாக்குறுதி (அதாவது மறுமை நாள்) நெறுங்கி விடும். (அதைக்காணும்) காஃபிர்களின் பார்வைகள் திறந்தபடியே நிலைகுத்தி நின்றுவிடும்; (அன்றியும் அவர்கள்) எங்களுக்கு கேடுதான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப் படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; அது மட்டுமல்ல, நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம் (என்று கூறுவார்கள்). (அல்-அன்பியாஃ : 96,97).


இவ்வசனத்தில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர், பூமியில் பரவும்படியாக அவர்களது தடுப்புச் சுவர் திறக்கப்பட்டுவிட்டால், அப்போது ‘உண்மையான வாக்குறுதி (அதாவது மறுமைநாள்) நெருங்கிவிடும்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதன்மூலம் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர், வெளிவந்தவுடன், மிக அவசரமாக மறுமைநாள் வந்துவிடும் என்பது தெளிவாகின்றது.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “உண்மையான வாக்குறுதி” மறுமைநாள் தான் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மற்றும் தப்ஸீர் கலை வல்லுனர்களின் விரிவுரைகள் தெளிவுபடுத்துகின்றன.


இந்த விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு முன் மார்க்கத்தின் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

1. அல்லாஹ் அல் குர்ஆனை அரபுமொழியில் அருளியுள்ளான்; அரபுமொழி என்பது மிகவும் கருத்தாழமும் பொருற் செரிவும் கொண்ட வார்த்தைகளை உள்ளடங்கிய மொழியாகும்.

2. அல் குர்ஆனுக்கு சரியான தெளிவை வழங்க நபியவர்களின் (சொல், செயல், அங்கீகாரம்) எனும் ஸூன்னா ஆக்கப்பட்டுள்ளது.


وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ. (سورة النحل : 44)


(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அந்நஹ்ல் : 44).


3. அல் குர்அன் மற்றும் அஸ் ஸூன்னா ஆகியவை வஹிய்யாக இருப்பதனால், அவற்றில் ஒன்று மற்றறொன்றிற்கு மாற்றமாக இருக்க முடியாது; வெளிரங்கத்தில் ஏதேனும் ஒன்று மற்றொன்றிற்கு மாற்றமாக இருப்பது போன்று தென்பட்டால், அல் குர்ஆனின் ஒரு வசனம் மற்ற வசனத்திற்கு விளக்கமாக இருக்கும். அல்லது ஒரு வசனத்திற்கு ஹதீஸ்கள் விளக்கமாக இருக்கும்; ஹதீஸ்களிலும் அதுபற்றிய தெளிவு கிடைக்கப்பெறாவிட்டால், மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஏனைய மூலாதாரங்களின் ஊடாக அவற்றிற்குப் பொருத்தமான கருத்தை உறுதிமிக்க மார்க்க அறிஞர்களது கருத்தில் இருந்து விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

4. அல் குர்ஆன் வசனங்களுக்கு விரிவுரை செய்யும்போது கவனிக்க வேண்டிய பல நிபந்தனைகள் இருப்பதால், பிந்திய கால மார்க்க அறிஞர்கள் அத்தியாவசிய நிலையிலன்றி முஸ்லிம் உம்மத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சஹாபாக்கள், தாபிஈன்கள், மற்றும் ஆரம்பகால தப்ஸீர்கலை வல்லுனர்களின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டே விளக்கம் கொடுத்து வந்துள்ளனர்.

5. மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்த ஓர் ஆதாரமுமின்றி ஒருவர் தனது சுயசிந்தனை மற்றும் மனோஇச்சைப்படி அல் குர்ஆன், அஸ் ஸூன்னாவிற்கு கருத்துக் கூறுவதும், விளக்கமளிப்பதும் மார்க்கத்திற்கு முற்றிலும் முரணானதும் ஆபத்தானதும் தடுக்கப்பட்டதுமாகும்.

6. உறுதி மிக்க மார்க்க அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல் குர்ஆன் விரிவுரைகளில் முக்கிய இடம்வகிக்கும் தப்ஸீர் அல் குர்துபீ, தப்ஸீர் இப்னு கஸீர், தப்ஸீர் அல்கபீர், தப்ஸீர் அல் பைழாவி மற்றும் தப்ஸீர் ஸாதுல் மஸீர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றை அடிப்படையாகக் கொண்டே பிற்காலத்தில் பல அல் குர்ஆன் விளக்கவுரைகள் எழுதப்பட்டுள்ளன.


எனவே, மேற்கூறப்பட்ட அடிப்படைகளைக் கருத்திற் கொண்டே மேற்கண்ட வசனங்களுக்கும் தெளிவுபெற வேண்டும்.
அந்தடிப்படையில், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை பற்றிய உறுதியான நபி மொழிகளில், அவர்கள் உலக முடிவு ஏற்பட நெருங்கும் போது, நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பூமிக்கு வருகை தந்து, நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொட்டும் நபி ல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வரைக்கும் எச்சரிக்கப்பட்டு வந்த தஜ்ஜாலின் குழப்பங்கள் முடிவுற்ற பின்னரே இக்கூட்டத்தார் வெளிவருவர் என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அவ்வாறான சில ஹதீஸ்கள் பின்வருமாறு :
முதலாவது : ஸஹீஹூ முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்.


عن النواس بن سمعان ، قال : ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال ذات غداة ، فخفض فيه ورفع ، حتى ظنناه في طائفة النخل، فلما رحنا إليه عرف ذلك فينا ، فقال : " ما شأنكم؟ " قلنا : يا رسول الله ، ذكرت الدجال غداة ، فخفضت فيه ورفعت.... فيطلبه حتى يدركه بباب لد فيقتله ، ثم يأتي عيسى ابن مريم قوم قد عصمهم الله منه ، فيمسح عن وجوههم ، ويحدثهم بدرجاتهم في الجنة ، فبينما هو كذلك إذ أوحى الله إلى عيسى : إني قد أخرجت عبادا لي لا يدان لأحد بقتالهم ، فحرز عبادي إلى الطور . ويبعث الله يأجوج ومأجوج ، وهم من كل حدب ينسلون….. (صحيح مسلم – رقم الحديث: 2937 - بَابُ ذِكْرِ الدَّجَّالِ وَصِفَتِهِ وَمَا مَعَهُ – تبويب الإمام النووي رحمه الله)


பின்னர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள்; இறுதியில், பாபு லுத்து எனும் இடத்தில் அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார். இதற்கிடையே, ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ், நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை தூர் மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள் என்று வஹீ அறிவிப்பான். பின்னர், அல்லாஹ் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள்.
(ஸஹீஹ{ முஸ்லிம் :2937 – பாடம் : தஜ்ஜால்).


குறித்த ஹதீஸில், ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களினால் தஜ்ஜால் அழிக்கப்பட்ட பின்னர், அவர்கள் உலகில் வசிக்கும் காலத்தில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகுவார்கள் என்பது தெளிவாகின்றது.


இரண்டாவது : முஸ்னத் அஹ்மதில் இடம்பெறும் ஹதீஸ்.


عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لَقِيتُ لَيْلَةَ أُسْرِيَ بِي إِبْرَاهِيمَ، وَمُوسَى، وَعِيسَى "، قَالَ: " فَتَذَاكَرُوا أَمْرَ السَّاعَةِ، فَرَدُّوا أَمْرَهُمْ إِلَى إِبْرَاهِيمَ، فَقَالَ: لَا عِلْمَ لِي بِهَا، فَرَدُّوا الْأَمْرَ إِلَى مُوسَى، فَقَالَ: لَا عِلْمَ لِي بِهَا، فَرَدُّوا الْأَمْرَ إِلَى عِيسَى، فَقَالَ : أَمَّا وَجْبَتُهَا، فَلَا يَعْلَمُهَا أَحَدٌ إِلَّا اللهُ، ذَلِكَ وَفِيمَا عَهِدَ إِلَيَّ رَبِّي عَزَّ وَجَلَّ أَنَّ الدَّجَّالَ خَارِجٌ، قَالَ: وَمَعِي قَضِيبَينِ ، فَإِذَا رَآنِي، ذَابَ كَمَا يَذُوبُ الرَّصَاصُ، قَالَ: فَيُهْلِكُهُ اللهُ، حَتَّى إِنَّ الْحَجَرَ، وَالشَّجَرَ لَيَقُولُ: يَا مُسْلِمُ، إِنَّ تَحْتِي كَافِرًا، فَتَعَالَ فَاقْتُلْهُ، قَالَ: فَيُهْلِكُهُمُ اللهُ، ثُمَّ يَرْجِعُ النَّاسُ إِلَى بِلَادِهِمْ وَأَوْطَانِهِمْ، قَالَ: فَعِنْدَ ذَلِكَ يَخْرُجُ يَأْجُوجُ، وَمَأْجُوجُ، وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ، فَيَطَئُونَ بِلَادَهُمْ، لَا يَأْتُونَ عَلَى شَيْءٍ إِلَّا أَهْلَكُوهُ، وَلَا يَمُرُّونَ عَلَى مَاءٍ إِلَّا شَرِبُوهُ، ثُمَّ يَرْجِعُ النَّاسُ إِلَيَّ فَيَشْكُونَهُمْ، فَأَدْعُو اللهَ عَلَيْهِمْ، فَيُهْلِكُهُمُ اللهُ وَيُمِيتُهُمْ، حَتَّى تَجْوَى الْأَرْضُ مِنْ نَتْنِ رِيحِهِمْ، قَالَ: فَيُنْزِلُ اللهُ عَزَّ وَجَلَّ الْمَطَرَ، فَتَجْرُفُ أَجْسَادَهُمْ حَتَّى يَقْذِفَهُمْ فِي الْبَحْرِ " قَالَ أَبِي: " ذَهَبَ عَلَيَّ هَاهُنَا شَيْءٌ لَمْ أَفْهَمْهُ، كَأَدِيمٍ "، وَقَالَ يَزِيدُ يَعْنِي ابْنَ هَارُونَ: " ثُمَّ تُنْسَفُ الْجِبَالُ، وَتُمَدُّ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ " ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ هُشَيْمٍ، قَالَ: " فَفِيمَا عَهِدَ إِلَيَّ رَبِّي عَزَّ وَجَلَّ: أَنَّ ذَلِكَ إِذَا كَانَ كَذَلِكَ، فَإِنَّ السَّاعَةَ كَالْحَامِلِ الْمُتِمِّ، الَّتِي لَا يَدْرِي أَهْلُهَا مَتَى تَفْجَؤُهُمْ بِوِلَادَتِهَا لَيْلًا أَوْ نَهَارًا ". (مسند أحمد : 3556)


இஸ்ராவுடைய இரவில் நான் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம், மூஸா அலைஹிஸ் ஸலாம், மற்றும் ஈஸா அலைஹிஸ் ஸலாம் ஆகியோரை சந்தித்தேன். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மறுமைநாள் விடயமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த விடயத்தை இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள், எனக்கு அது சம்பந்தமான அறிவு கிடையாது என்று கூற, பின்னர் அதனை மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் எனக்கு அது சம்பந்தமான அறிவு கிடையாது என்று கூறினார்கள்.
பின்னர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அது எப்போது உண்மையாக நிகழும் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; அவ்விடயத்தில் அல்லாஹூ தஆலா எனக்கு வாக்குறுதியளித்ததாவது, நிச்சயமாக தஜ்ஜால் வெளியாகக்கூடியவன்; என்னிடம் இரண்டு தடிகள் இருக்கும்; அவன் என்னைக் கண்டால், ஈயம் கரைவதைப் போன்று கரைந்துவிடுவான் என்று ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ் அவனை அழித்துவிடுவான்….
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள்: அந்த நேரத்தில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் எல்லாப் பக்கங்களிலிருந்தும் மேட்டுப் பகுதியிலிருந்து வெளியாகுவார்கள். அவர்கள் அவர்களது ஊர்களை கடந்து செல்வார்கள்; அவர்கள் செல்லக்கூடிய இடங்களில் இருக்கக்கும் அனைத்தையும் அழித்துவிடுவார்கள். மேலும், தண்ணீரைக் கடந்து சென்றால், அதனையும் குடித்துவிடுவார்கள். பின்னர் மனிதர்கள் என்பக்கம் திரும்பி அவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வார்கள்; நான் அல்லாஹூ தஆலாவிடத்தில் அவர்களுக்கு எதிராக துஆ செய்வேன்; அல்லாஹூ தஆலா அவர்களை அழித்துவிடுவான். மேலும், அல்லாஹூ தஆலா, அவர்களை இறக்கச் செய்வான். அவர்களது துர்வாடை காரணமாக பூமி துர்நாற்றமுடையதாக ஆகிவிடும்.


அதன்பிறகு அல்லாஹூ தஆலா மழை பொழியச் செய்து, அவர்களது உடம்புகளை அம்மழை இழுத்துச் சென்று கடலில் போட்டுவிடும் என்று ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு ஹாரூன் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்; பின்னர் மலைகள் தூசியாக மாற்றப்பட்டு, பூமி ஒரு தோலைப் போன்று நீட்டப்படும்.


இவ்வடையாளங்கள் எனக்கு அல்லாஹ் வாக்குறுதியளித்தவற்றில் உள்ளவைதான். இவ்வாறு நிகழ்ந்துவிடும் போது, மறுமைநாள் நிகழ்வது முற்றிலும் நெருங்கியிருக்கும்; அந்நேரம் நிறைமாதக் கற்பிணி, இரவிலா அல்லது பகலிலா எப்பொழுது குழந்தையை ஈன்றெடுப்பாள் என்று கூடத் தெரியாதவளாக இருப்பாள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்னத் அஹமத் : 3556).


இந்த ஹதீஸிலும், யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர், ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களினால், தஜ்ஜால் கொல்லப்பட்டதன் பின்னரே வெளியாவர் என்றும் இவை நடந்து முடிந்தவுடன் நிறைமாதக் கற்பிணி தீடீரென குழந்தை பிரசவிப்பது போன்று கியாமம் திடீரென ஏற்பட்டு விடும் என்பது தெளிவாகின்றன.
மேற்குறித்த இரண்டு நபிமொழிகளும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் இன்னும் வெளியாகவில்லை; மாறாக அவர்கள் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வானிலிருந்து இறங்கிய பின்னரே வெளியாவர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரபூர்வமானவையாகும்.


இவ்வாறான நபி மொழிகளை அடிப்படையாகக் கொண்டு, அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் கூறப்பட்டும், “எனது இரட்சகனின் வாக்கு” என்பது மறுமை நாளையே குறிக்கின்றது என மேற்குறிப்பிட்ட அல் குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுவே அல் அன்பியாஃ எனும் அத்தியாயத்திலும் தெளிவாக வந்துள்ளதெனவும் உறுதியிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இமாம் இப்னு கஸீர் றஹிமஹூல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்:


(فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي) أي : إذا اقترب الوعد الحق. (تفسير ابن كثير)


இரு அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள "வாக்கு" என்பது ஒரே தினத்தையே குறிக்கின்றது.
மேலும், பிரபல தஃப்ஸீர் கலை வல்லுனர் இமாம் அபூ ஜஃபர் அத்தபரீ றஹிமஹூல்லாஹ் அவர்கள் இதனைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:


حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَاقْتَـرَبَ الْوَعْدُ الْحَـقُّ وذلك وعد الله الذي وعد عباده أنه يبعثهم من قبورهم للجزاء والثواب والعقاب. ( تفسير الطبري)


யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் திறக்கப்பட்டால் உண்மையான வாக்கு நெருங்கி விட்டது. அதுதான் அல்லாஹ் அடியார்களை கேள்விகணக்குக்காக எழுப்பும் மறுமைநாளாகும்.


فأما الْوَعْدُ الْحَقُّ فهو القيامة ( زاد المسير في علم التفسير)


உண்மையான வாக்குறுதி என்பது, மறுமைநாளாகும்; என்று இமாம் இப்னுல் ஜவ்ஸீ றஹிமஹூல்லாஹ் அவர்கள் "ஸாதுல் மஸீர் பீஇல்மித் தப்ஸீர்" என்ற தப்ஸீரில் குறிப்பிடுகின்றார்கள்.


இலங்கையிலும் உலகத்தில் பல நாடுகளிலும் மத்ரஸா மாணவர்களுக்கு தப்ஸீர் பாடத்தில் பிரதானமான நூலாகிய, தப்ஸீர் அல் ஜலாலைன் என்ற நூலில் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டடுள்ளது:


فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي بخروجهم القريب من البعث جعله دكا. ( تفسير الجلالين)


மக்கள் மண்ணறைகளில் இருந்து எழுப்பப்படும் மறுமைக்கு நெருக்கமாக அவர்கள் வெளியாகுவதைக் கொண்டு எனது இரச்சகனின் வாக்கு வந்து விட்டால் அதனைத் தரைமட்டமாக்கிவிடுவான்.


இக்கருத்தே உறுதியான எல்லா தப்ஸீர்களிலும் கூறப்பட்டுள்ள கருத்தாகும். இதற்கு மாற்றமாக யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்றும் அவர்கள் குறித்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சிலர் கூறுவது இவ்வசனங்களின் கருத்தை தவறாகப் புரிந்து கொண்டமையாகும்.


யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்று கூறுபவர்களுக்கு இவ்வாறான சந்தேகம் ஏற்படுவதற்கான காரணங்களாக பின்வரும் விடயங்களைக் காணலாம் :


1. அல் அன்பியாஃ என்ற அத்தியாயத்தில் வந்துள்ள “புதிஹத் யஃஜூஜூ” என்பதற்கு முன்னுள்ள வசனத்திற்கு பிழையாகக் கருத்துக் கொடுத்தமை, அவ்வசனம் பின்வருமாறு.


وَ حَرٰمٌ عَلٰى قَرْيَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا يَرْجِعُوْنَ‏. (سورة الأنبياء : 95)


நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
இங்கு கூறப்பட்டுள்ள ஊர் என்பது இஸ்ரேல் என்பதாக பொருள் கொண்டு அவ்வூர் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது. யஃஜூஜ், மஃஜூஜ் திறக்கப்படும் வரை அவர்களால் திரும்ப முடியாது. இப்போது அவர்கள் திரும்பி வந்துள்ளனர். எனவே, யஃஜூஜ், மஃஜூஜ் வந்து விட்டனர் என வாதிடுகின்றனர்.


இது முற்றிலும் பிழையான வாதமாகும். இந்த வசனத்தில் இஸ்ரேலைப்பற்றியோ யூதக் குடியேற்றத்தைப் பற்றியோ எக்குறிப்பும் கூறப்படவில்லை; மாறாக இதற்கு இப்னு இப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறும் விளக்கம் பின்வருமாறு:


حرام علي قرية قال ابن عباس رضي الله عنه : وجب يعني قد قدر أن أهل كل قرية أهلكوا أنهم لايرجعون الي الدنيا قبل يوم القيامة (تفسير ابن كثير)


ஏவ்வூர் மக்களை அல்லாஹ் அவர்களின் பாவத்தின் காரணமாக அழித்து விட்டானோ, அவர்கள் மறுமைநாள் வரை திரும்பவும் உயிர் பெற்று உலகிற்கு வர முடியாது.
எனவே, யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வந்து, உலகம் முடிந்த பின்னரேயே அவர்கள் (அவ்வூர் மக்கள்) கேள்வி கணக்குக்காக வருவார்கள் என்பதே இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் எனப் பொருள் கொள்வது முற்றிலும் பிழையாகும்.


2. பின்வரும் நபிமொழியையும் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.


عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، رَضِيَ اللَّهُ عَنْها أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ» (صحيح البخاري - بَابُ قِصَّةِ يَأْجُوجَ، وَمَأْجُوجَ. رقم الحديث : 3346)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் றழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் 'இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?” என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்..” என்று பதிலளித்தார்கள்.
(ஸஹீஹூல் புகாரி - யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிய பாடம். ஹதீஸ் இலக்கம் : 3346)


இந்த நபிமொழியில் யஃஜுஜ், மஃஜூஜ் மீது கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து இச்சிறிய அளவு துவாரம் நபியுடைய காலத்திலேயே ஏற்பட்டுவிட்டதெனில் இப்போது அது பெரிதாகி அவர்கள் வெளிப்பட்டிருக்க வேண்டுமென சுயவியாக்கியானம் கூறுகின்றனர்.


எனினும், இதற்கு ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும் கருத்தாவது:


المراد أنه يكن في ذلك الردم ثقبة الي اليوم وقد انفتحت فيه اذ انفتاحها من علامات قرب الساعة فاذا اتسعت خرجوا وذلك بعد خروج الدجال (مرقاة المفاتيح شرح مشكاة المصابيح - بَابُ الْبُكَاءِ وَالْخَوْفِ)


இமாம் முல்லா அலி காரீ ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கூறுவதாவது; அந்நேரத்தில் ஏற்பட்ட அச்சிறிய துவாரம் இன்று வரை அப்படியே இருக்கிறது. அது விசாலமானால் அவர்கள் வெளியாவார்கள்; அது தஜ்ஜால் வெளியான பின்னர் ஏற்படும்.
(மிர்காத்துல் மபாதீஹ் ஷர்ஹூ மிஷ்காத்தில் மஸாபீஹ்)


பிற்காலத்தில் வந்த மார்க்க அறிஞர்களில் சிலர், பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துக்கு மாற்றமாக, அவ்வணைக்கட்டு உடைந்துவிட்டது என்ற கருத்தில் இருந்தாலும் கூட, ஹதீஸில் மறுமைநாளின் இறுதிப் பெரிய அடையாளமாகக் கூறப்பட்டிருக்கும் யஃஜுஜ், மஃஜுஜ் இன்னும் வெளியாகவில்லை; அவர்கள் தஜ்ஜாலின் வருகைக்குப் பின்னரே வெளியாவர் என்றே உறுதியாகக் கூறுகின்றனர். எனவே, அவ்வணைக்கட்டு உடைந்துவிட்டது என்று கூறும் ஓரிரு அறிஞர்களின் கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு, இக்காலத்தில் சிலர் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்று நம்புவது அல்லது வாதம்புரிவது முற்றிலும் தவறானவையாகும்.


3. மனிதன் முன்னேறி, பூமியின் மூளைமுடுக்கெல்லாம் அவனது விரல் நுனியில் இருக்கும் காலத்தில், இவ்வாறான ஓர் அணை கண்டுபிடிக்கப் படவில்லையெனில் அது உடைந்துபோய் இருக்க வேண்டும் என வாதிடுகின்றனர்.
இவர்களின் இக்கூற்று யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறானதாகும்.


மனிதர்களது அறிவு ஆற்றலில் எவ்வளவுதான் உயர்ந்திருந்தாலும், மனித பலவீனத்துடனேயே அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முந்தைய விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாமற்போன பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள் பிறகு வந்தவர்களால் கண்டுபிடிக்கப் படுகின்றமையானது, மனித பலவீனத்திற்கு மிகத் தெளிவான சான்றாகும். கடல் மற்றும் சமுத்திரங்களில் விமானங்கள், கப்பல்களை இழக்கின்றனர். கடுமையான முயற்சிகள் மேற் கொண்ட போதிலும் அவர்களால் எத்தடயங்களையும் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடுகின்றன. அதே போன்று அமெரிக்கா போன்ற நாடும் கூட கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரம் வருடங்கள் கூட ஆகவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முற்காலத்தில் வரண்டுபோய் காணப்பட்ட எத்தனையோ நிலங்கள் இன்று நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. அன்று காணப்பட்ட எத்தனையோ நகரங்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு இன்று அழிந்து விட்டன.இவ்வாறான நிலையில் நாம் அதனைக் காணவில்லை என்பதற்காக அதனை மறுப்பது அறிவுடமையாகாது.
மேற்குறித்த இந்த விடயங்களில் இருந்து தெளிவாவது யாதெனில், யஃஜுஜ், மஃஜுஜ் வெளியாகுவது மறுமையின்; பெரிய அடையாளங்களில் பிரதானமான ஒன்றாகும். அவர்கள் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வெளியாகி, தஜ்ஜால் அழிக்கப்பட்டதன் பின்பே தோன்றுவர். தற்போது யஃஜுஜ், மஃஜுஜ் தோன்றிவிட்டனர்; அவர்கள் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு பிரதேசத்தை அல்லது ஒரு கூட்டத்தினரைக் குறிப்பிட்டுக் கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறு யூகம் கூறுவதானது, அல் குர்ஆன், அஸ் ஸூன்னா மற்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் தெளிவான விளக்கங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.


ஆகவே, குறித்த விடயம் வஹிய்யுடன் சம்பந்தப்பட்டதாகவும், எமது மட்டுப்படுத்தப்பட்டள்ள சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதனால், இது போன்ற விடயங்களில் பகுத்தறிவுவாதத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்து, அல் குர்ஆன், ஹதீஸ்களில் கூறப்பட்டவற்றை அதற்குரிய நம்பத்தகுந்த உறுதிமிக்க அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் விளங்கிக் கொள்வதும் நம்புவதும் அவசியமாகும் என்பதுடன், எமது ஈமானுக்கும் பெரும் பாதுகாப்பாக இருக்கும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்                

செயலாளர், பத்வாக் குழு                        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா          

      

 அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

 மேற்பார்வையாளர் - பத்வாக் குழு

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

ACJU/SCR/2021/001

06 ஜனவரி 2021

அதி மேதகு கோடாபய ராஜபக்ஷ
ஜனாதிபதி

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
முதலமைசச்சர்

கௌரவ பவித்ரா வன்னியாரச்சி
சுகாதார அமைச்சர்

டாக்டர் அஸேல குணவர்தன
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்


கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பானது


கொவிட்-19 தொற்று நோய் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பையும் அதனால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளமையும் யாவரும் அறிவோம்.


இந்நிலையில் மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ள ஒரு விடயம் பற்றி நாம் தங்களுக்கு எழுத முனைந்தோம். கொவிட்-19 தொற்று காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்யும் வழமை தொடர்வது பற்றிய எமது ஆளமான கவலையை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கை உலகின் பல சர்வதேச சுகாதார அமைப்புக்களின் வழிகாட்டல் படியே உள்ளதையும் உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பதையும் நாம் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


கொவிட்-19 காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்தால் அது நில நீரை மாசுபடுத்தி விடும் என்றும் மேலும் பல காரணங்களை காட்டியும் அடக்கத்திற்கு தடை விதித்து தகனம் மட்டுமே இந்த தொற்று நோயால் மரணிப்பவரக்ளின் உடலை அப்புறப்படுத்துவதற்கான ஒரே வழி என கட்டாயப்படுத்தி வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். ஆனால், கொவிட்-19 ஏற்பட்டது முதல் ஏறத்தாள உலகின் அனைத்து நாடுகளும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை (தகனம் போன்றே) அடக்கம் செய்து வருவதையும், அதை மேற்கொண்டு வருவதால் எந்த நாடும் தாம் பாதிக்கப்பட்டதாகவும் கூறவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


ஸ்ரீலங்கா பிரஜா மருத்துவர்கள் கல்லூரி (CCPSL)
கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதை ஆதரிக்கும் மிக சமீபத்திய அறிக்கையொன்றை ஸ்ரீலங்கா பிரஜா மருத்துவர்களின் கல்லூரி வெளியிட்டுள்ளது. அவர்கள், இறந்த உடல்களை அடக்கம் செய்வது கொவிட் -19 இன் பரவலை அதிகரிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், ஒவ்வொரு குடிமகனையும் அவரவர் மற்றும் அவரின் குடும்பத்தின் விருப்பத்தின் படி தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

https://www.newsfirst.lk/2020/12/31/victims-can-be-buried-or-cremated-as-per-familys-wish/

ஸ்ரீ லங்கா மருத்துவச் சங்கம் (SLMA):
தற்போதுள்ள விஞ்ஞானத் தரவுகளின் அடிப்படையில் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியும் என ஸ்ரீ லங்கா மருத்துவச் சங்கமும் பரிந்துரை செய்துள்ளது. ஒரு உயிருள்ள உடலிலேயே வைரஸ் பெருக முடியுமென்றும் உயிரற்ற உடலில் குறிப்பிடுமளவு நீண்ட காலத்திற்கு வைரஸ்கள் வாழ முடியாது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

https://www.newsfirst.lk/2021/01/03/sri-lanka-can-bury-covid-19-victims-slma/

பேராசிரியர் மலிக் பீரிஸ்
உலகப் பிரசித்தி பெற்ற நோய் நிர்ணய மற்றும் வைரஸ் நிபுணர் ஒருவரான, தற்போது ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் வைரஸ் பிரிவின் தலைவராக பணியாற்றும் இலங்கை பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்களும் அடக்கம் காரணமாக கொவிட்-19 வைரஸ் பரவுவதன் சாத்தியப்பாடு மிக மிகக் குறைவு என்றும் உக்கிப்போகாத பொருளால் (மெடீரியல்) சுற்றி அடக்கம் செய்வது அதிகம் பாதுகாப்பானது எனவும் அவர் சிபாரிசு செய்துள்ளார்.

https://island.lk/dr-malik-suggests-burying-covid-19-victims-in-impermeable-wrapping/

டாக்டர் நிஹால் அபேசிங்ஹ
வைரஸ் நிபுணர் மற்றும் முன்னாள் அரச தொற்று நோய்ப்பிரிவின் தலைவர் டாக்டர் நிஹால் அபேசிங்ஹ அவர்களும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் ஒரு அடக்கஸ்தளத்தின் நிலநீரிலிருந்து கிருமிகள் வெளியாகி சுகாதார அச்சுறுதல் ஏற்படும் என்ற கேள்விக்கே இடமிள்ளை எனவும் கூறியுள்ளார்.

http://www.ft.lk/opinion/Cremating-Muslim-corona-dead-bodies-Sri-Lanka-is-FOht-Whole-world-is-wrong/14-710412

உலக சுகாதார அமைப்பு (WHO)
2020 செப்டெம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பு ‘நோய் பரவல் தடுப்பு மற்றும் கொவிட்-19 பின்னணியில் உடல்களை அடக்கம் செய்தல்’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிட்ட சில வழிமுறைகளை பேணும் பட்சத்தில் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கலாம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தொற்று நோய் காரணமாக மரணிப்பவரின் உடலை தகனம் செய்ய வேண்டும் என ஒரு பொதுவான நம்பிக்கை இருந்தாலும், இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளது என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

https://apps.who.int/iris/bitstream/handle/10665/331538/WHO-COVID-19-lPC_DBMgmt-2020.1-eng.pdf

அமெரிக்க சுகாதார மற்றும் மானிட சேவைகள் திணைக்களத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் (CDC)
அமேரிக்காவிலுள்ள மேற்படி அமைப்பும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் நோய் பரவும் அபாயம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே மரணித்தவரின் குடும்பத்தினர்களின், இறுதிக்கிரியை தொடர்பான விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/daily-life-coping/funeral-guidance.html

இவை தவிர, இவ்விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. அடக்கம் செய்யப்பட்ட பின்னர் நீர் மாசுபடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது என்பதை நிரூபிக்க எந்த விஞ்ஞானபூர்வ ஆதாரமும் இல்லை என்றும் அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


இஸ்லாமிய போதனைகளின்படி, மரணிப்பவரின் உடலை அடக்கம் செய்வது இறந்த நபருக்கு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எனவே இந்த உரிமையை மறுப்பது முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையையும் மிகுந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தீங்கு விளைவிக்கும் அல்லது இந்த நோய் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதற்கு நம்பகமான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால், கட்டாய தகன நடைமுறை வழிமுறைகளை திருத்தி, அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுபற்றி அறிவுறுத்துமாறும் தங்களை நாம் வேண்டிக்கொள்கின்றோம்.


பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இலங்கையர்களை ஒற்றுமைப்படுத்தி தேசத்தை வலுப்படுத்த இவ்வரசாங்கம் செயற்படும் என அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.


நமது இலங்கைத் திருநாட்டில் ஒற்றுமை மற்றும் சுபீட்சம் மலர எல்லாம் வல்ல இறைவன் அருள்புறிவானாக,

இப்படிக்கு

 

அஷ்-ஷைக் முஃப்தி M.I.M. ரிஸ்வி
தலைவர் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் M.S.M. தாஸீம்
பதில் பொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

கையொப்பதாரர்கள்:

அஷ்-ஷைக் A.C.M. அகார் முஹம்மத் - பிரதித் தலைவர்

அஷ்-ஷைக் A.L.M. கலீல் - பொருளாலர்

அஷ்-ஷைக் H. உமர்தீன் - உப தலைவர்

அஷ்-ஷைக் A.L.M. ரிழா - உப தலைவர்

அஷ்-ஷைக் M.J. அப்துல் ஹாலிக் - உப தலைவர்

அஷ்-ஷைக் A.L.M. ஹாஷிம் - உப தலைவர்

அஷ்-ஷைக் S.H. ஆதம் பாவா - உப தலைவர்

அஷ்-ஷைக் M.M.M. முர்ஷித் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் M.L.M. இல்யாஸ் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் M.F.M. ஃபாஸில் - நிறைவேற்று குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் K.M. முக்ஸித் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் அர்கம் நூராமித் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் ஹஸன் ஃபரீத் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் முஃப்தி M.H.M. யூசுப் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் A.C.M. ஃபாஸில் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் S.L. நவ்பர் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் M.K. அப்துர் ரஹ்மான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் S.A.M. ஜவ்பர் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் A.R. அப்துர் ரஹ்மான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் M.H.M. புர்ஹான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

கலாநிதி அஸ்வர் அஸாஹிம் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் ஸகி அஹமட் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் M. நூமான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

கலாநிதி M. L. M. முபாரக் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் M.S.M. ஃபரூத் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் M.A.A.M. பிஷிர் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

குறியெண்: ACJU/SCR/2021/003
12 ஜனவரி 2021

கௌரவ உதய கம்மன்பில அவர்கள்
எரிசக்தி அமைச்சர்
எரிசக்தி அமைச்சு
ஸ்ரீ லங்கா ஜனனாயக சோ~லிஸ குடியரசு


மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே,


அடக்கம் செய்தல் பற்றி திருக்குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என தாங்கள் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கூற்று தொடர்பானது


அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களை அடக்கம் செய்வது பற்றி திருகுர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் கூறிய தவறான கூற்று குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகுந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினரும், ஒரு முக்கிய அமைச்சரும், ஒரு வழக்கறிஞருமான உங்களிடமிருந்து இதை விட விவேகமான அணுகுமுறையை நாம் எதிர்பார்த்தோம். 2021 ஜனவரி 8ஆம் திகதி பாராளமன்றத்தில் நீங்கள் கூறியுள்ள கூற்றானது முற்றிலும் தவறானதாகும்.


இஸ்லாமிய மார்க்க தீர்வுகளை பெறுவதானது திருகுர்ஆனின் வசனங்களையும் அதனுடன் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களுடைய வழிகாட்டல்களாகிய ஹதீஸ் கலைகளையும் நன்கு கற்ற இஸ்லாமிய அறிஞர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.


எவ்வாறாயினும், திருக்குர்ஆனை நீங்கள் இருதடவை வாசித்துப் பாரத்ததையிட்டு எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதே வேளையில், கட்டாயம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதில் எங்கும் இல்லை என்று சொல்வது முற்றிலும் தவறானதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்லாமீய மத போதனைகளுடன் தொடர்புடைய மார்க்கத் தீர்ப்புகளைப் பெறும் முறை தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விரும்புகிறது.


இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பின்வரும் நான்கு மூலங்களில் இருந்தே பெறப்படும்:


1. திருக்குர்ஆன்
2. நபிமொழி (சுன்னா)
3. இஜ்மா (அறிஞர்களின் இணக்கப்பாடு)
4. கியாஸ் (ஒத்த சந்தர்ப்பங்கள்)


திருகுர்ஆன் என்பது இறை வசனமாவதோடு, மனித குலத்திற்கான முழுமையான வழிகாட்டியாகவும் உள்ளது. இது உலகத்தாருக்கு வழிகாட்டியாக இறக்கப்பட்டதுடன் விடயங்களை கருத்தியல் ரீதியாகவும் உரையாற்றுகிறது. இதற்கு கால அல்லது பிராந்திய வரம்புகள் எதுவும் கிடையாது. இருப்பினும் சட்ட திட்டங்களுக்காக திருக்குருஆனை மட்டும் நோக்குவது சாத்தியமல்ல. ஏக இறைவனின் இறுதித் தூதரின் முன்மாதிரி மற்றும் அறிவுரைகளையும் நாம் சேர்த்தே நோக்க வேண்டும்.


உதாரணமாக, இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகிய தொழுகை பற்றி குர்ஆன் மிக விளக்கமாக எதுவும் கூறவில்லை. ஐவேளை தொழுகைகளின் பெயர்கள், அவற்றிற்கான நேரங்கள், தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் அது எவ்வாறு உடல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன திருக்குருஆனில் விரிவாக விவரிக்கப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்பதை காரணம் காட்டி முஸ்லிம்கள் அதை நிறைவேற்றத் தேவையில்லை என எவரும் வாதிட முடியாது.


அதேபோல், உலகெங்கிலும் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ரமலான் மாதத்தின் நோன்பு, வசதியுள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டிய ஸகாத் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவற்றை திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது திருக்குர்ஆனில் விரிவாக விளக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அப்பொறுப்புக்களைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஒருவர் வாதிட முடியாது. ஏனென்றால், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்காக திருக்குர்ஆனை மட்டும் நோக்குவது நமக்கான வழிமுறையல்ல.
எனவே, இஸ்லாத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட விரிவாகப் புரிந்துகொள்வதற்கு மேற்கூறிய அடிப்படை ஆதாரங்களை கூட்டாகக் குறிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு இஸ்லாமிய மார்க்க சட்டம் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், திருக்குர்ஆன் என்பது முதல் மற்றும் முக்கிய ஆதாரமாக இருந்த போதிலும், அதனுடன் சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஏனைய பிற மூலங்களும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய ஒருவருக்கு சிறப்பு கலைகளின் அறிவும் திறமையும் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


அதன்படி, ஒரு முஸ்லிம் இறந்ததும், அவரை குளிப்பாட்டி, வெள்ளைத் துணியால் கஃபன் செய்து, தொழுகையை நிறைவேற்றி அதன் பின் மண்ணில் அடக்கம் செய்வது என்ற வரிசையான செயன்முறையை, ஒருவர் திருக்குர்ஆனை ஒராயிரம் தடவைகள் புறட்டினாலும் காண மாட்டார்.


மேலும், அடக்கம் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதும் முற்றிலும் தவறாகும். உண்மையில், திருக்குர்ஆன் சுமார் பத்து இடங்களில் அடக்கம் செய்வது பற்றி பேசியுள்ளது. ஏனைய இஸ்லாமிய கடமைகள் போலவே, அடக்கம் தொடர்பான முழுமையான செயன்முறையும் நாம் நபியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலமாகவும், மார்க்க அறிஞர்களின் உதவியுடனேயே அறிந்து கொள்கின்றோம்.


ஒவ்வொரு மதத்திற்கும் அதன் போதனைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான முறைகள் இருப்பதை புரிந்து கொள்வது முக்கியமாகும், இது அந்தந்த மத அறிஞர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.


குறிப்பிட்ட விடயத்தில் அதிகாரப்பூர்வ அறிவு உள்ளவர்களின் சரியான ஆலோசனை இல்லாமல் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் இத்தகைய அறிக்கைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.


இஸ்லாம் மற்றும் புனித குர்ஆன் அல்லது வேறு எந்த மதத்தையும்; எந்தவொரு அரசியல் தேவைக்கும் பயன்படுத்துவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு மரியாதைக்குரிய உங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறது. எங்கள் தாய்நாட்டில் உள்ள சமூகங்களுக்குள் தேவையற்ற பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் மற்றும் தவறான புரிதல்கள் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய மேற்கூறிய தவறான அறிக்கைகளை சரிசெய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


இவ்விடயம் பற்றி மேலும் விரிவான விளக்கங்களைப் பெற நீங்கள் விரும்பினால் தங்களை நேரில் சந்தித்து தெளிவுரைகளை தரவும் நாம் தயாராக உள்ளோம்.
நம் அனைவரையும் அல்லாஹ் நேர் வழியில் நடாத்துவானாக, ஆமீன்!

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2021.01.16

1442.06.02

 

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய நான்கும் இஸ்லாத்தின் சட்டவாக்க மூலாதாரங்களாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே புனித இஸ்லாம் மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் அமையப்பெறுகின்றன.

  • அல் குர்ஆன் என்பது அல்லாஹூ தஆலாவினால் இறக்கி வைக்கப்பட்ட வேதநூல்களில் இறுதி நூலாகும் என்பது முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடாகும்.
  • அல் ஹதீஸ் என்பது நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், மற்றும் அங்கீகாரம் என அன்னாரின் வழிகாட்டல்களாகும்.
  • அல் இஜ்மாஃ என்பது அல் குர்ஆன் மற்றும் அல் ஹதீஸின் ஒளியில் பெறப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின், கருத்து வேற்றுமை காணப்படாத ஏகோபித்த தீர்வாகும்.
  • அல் கியாஸ் என்பது அவ்வப்போது ஏற்படும் நவீன விடயங்களை அல் குர்ஆன், அல் ஹதீஸின் ஆதாரங்களுடன் ஒப்பீடு செய்து தீர்வுகளை காணும் முறையாகும்.


இஸ்லாமிய மார்க்க சட்டவாக்கத்தைப் பொறுத்தவரையில், அல் குர்ஆன் முதலிடத்தை வகிக்கின்றது. அல் குர்ஆனின் சில வசனங்கள் மற்றைய சில வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. அதே போல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களும் அல்குர்ஆனுக்கு விளக்கமாகும். அல் குர்ஆனில் விரிவாக சொல்லப்படாத விடயங்கள் ஹதீஸ்களின் மூலமாகவே விளங்கிக் கொள்ளல் வேண்டும். உதாரணமாக, அல் குர்ஆன் தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ்ஜு ஆகியவற்றை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளது; எனினும், அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற விரிவான விளக்கமும் அவற்றுடன் தொடர்புபடும் உட்பிரிவு சட்டங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்படவில்லை; ஹதீஸ்கள் ஊடாகவே அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும். இதனைப் பின்வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன:


وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ. (سورة النحل :44


அவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே!) உங்களுக்கு இறக்கி வைத்தோம்; மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக விளக்கப்படுத்துவதற்காக (இறக்கிவைத்தோம்). (அந்நஹ்ல் : 44).


وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ (سورة الحشر : 07)


மேலும், (நம்)தூதர் உங்களுக்கு எதைக் கொண்டுவந்தாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல் ஹஷ்ர் : 07).يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا ((سورة النساء : 59)


நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்;; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புபவர்களாக இருப்பின், அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்; இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
(அந்நிஸா : 59).

அல் குர்ஆனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பினை நபி முஹம்மத் ஸல்லல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சாட்டப்பட்டுள்ளது என்பதுடன், அவர்களது ஏவல்களை எடுத்துநடத்தல்; அவர்களது விலக்கல்களை தவிர்ந்துநடத்தல் வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.


மேற்சொல்லப்பட்ட சட்டவாக்க மூலாதாரங்களின் அடிப்படையில், நேரடியாக அல் குர்ஆனில் ஒரு விடயத்திற்கான தீர்வு கிடைக்கப்பெறாத போது, அல் ஹதீஸில் பெற்றுக்கொள்ளப்படும். அதில் கிடைக்கப்பெறாத போது, முறையே அல் இஜ்மாஃ, அல் கியாஸ் போன்ற துணை மூலாதாரங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்; இதுவே, சட்டவாக்க முறைமையாகும். எந்த ஒரு விடயத்தையும் இம்முறைகளைப் பேணியே ஆரம்பகாலம் தொட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றது.


அந்த வகையில், மரணித்த ஒருவரின் உடலை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதையே அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய மூலாதாரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.


அடக்கம் செய்வது பற்றிய அல் குர்ஆனின் வசனங்கள் :


1.   مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ ( سورة طه : 55)


இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம். (தாஹா : 55).
இவ்வசனத்தில் “நீங்கள் மரணித்ததும் நாம் உங்களை பூமியினுள்ளே மீட்டுவோம்” என்று அல்லாஹ் கூறுவதன் மூலம், மரணித்த அனைவரும் பூமியின் பக்கம் மீட்டப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லாஹூ தஆலா குறிப்பிடுகின்றான்.


இக்கருத்தையே பின்வரும் வசமும் தெளிவுபடுத்துகின்றது :


2. قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْن (سورة الأعراف : 25) 


“அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், இன்னும் அதிலேயே நீங்கள் இறப்பீர்கள், (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப்படுவீர்கள்” என்று கூறினான். (அல் அஃறாப் : 25)


3. فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْأَةَ أَخِيهِ (المائدة:31 )


பின்னர் தம் சகோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக, அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். (அல் மாஇதா : 31).
இவ்வசனத்தில் அல்லாஹூ தஆலா, முதல் மனிதரும் முதலாவது நபியுமான ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் மரணித்த பொழுது, அவரது பிரேதத்தை என்ன செய்வது என்று அறியாமல் தவித்த அவரது சகோதரனுக்கு, மரணித்தவரின் உடலை பூமியில் அடக்கம்செய்ய வேண்டும் என்ற முறையை ஒரு காகத்தை அனுப்பி கற்றுக் கொடுத்துள்ளான். இதன்மூலம், உலகில் மரணித்த முதல் மனிதரே பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.


4. ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ (سورة عبس : 21)


“பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில் ஆக்குகிறான்”. (அபஸ : 21).
இந்த வசனத்தில் அல்லாஹூ தஆலா, ஒரு ஜனாஸா கப்ரில் அடக்கம் செய்யப்படுவதை, மரணித்தவருக்குச் செய்யும் ஒரு அருட்கொடையாகக் குறிப்பிடுகின்றான். உண்மையில் மரணித்தவருடைய உடலை பறவைகளுக்கோ, ஐவாய் மிருகங்களுக்கோ இரையாக ஆக்காமல் அல்லது அதன் துர்வாடையைக் கொண்டு மனிதர்கள் நோவினை பெறாமல், கப்ரில் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்ற கருத்தை தப்ஸீர்கலை வல்லுனர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.


5. أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا أَحْيَاءً وَأَمْوَاتًا. (سورة المرسلات : 25. 26)


“உயிருள்ளோரையும் மரணித்தோரையும் அரவணைக்கக் கூடியதாக நாங்கள் பூமியை ஆக்கவில்லையா?” அல்லாஹூ தஆலா பூமியின் மேற்பகுதியை உயிருள்ளவர்கள் வசிக்கும் இடமாகவும், அதன் கீழ்பகுதியை மரணித்தவர்களின் ஒதுங்கும் தளமாகவும் ஆக்கியுள்ளான்.
இந்த வசனமும் மரணித்தவரை பூமியில் நல்லடக்கம் செய்யவேண்டும் என்ற அவசியத்தையே வலியுறுத்துகின்றது.


அடக்கம் செய்வது பற்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் :


6. (عن أبي سعيدٍ الخُدْريِّ رضِيَ اللهُ عنه، أنَّ رسولَ اللهِ صلَّى الله عليه وسلَّم قال: اذهبوا، فادْفِنوا صاحِبَكم. (صحيح مسلم : 2236)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், நீங்கள் சென்று உங்களது தோழரை நல்லடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2236)


7. (عن جابرٍ رَضِيَ اللهُ عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال: ادفِنوا القَتْلى في مصارِعِهم. (سنن أبي داود : 8557)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் என்ற இடத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களைக் குறித்து தம்தோழர்களிடம், அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட இடங்களிலேயே அவர்களை நல்லடக்கம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள்.
(ஸூனன் அபீ தாவூத் : 8557)

 

8. عَنْ عَلِيٍّ رضي الله عنه، قَالَ: لَمَّا مَاتَ أَبُو طَالِبٍ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ إِنَّ عَمَّكَ الشَّيْخَ الضَّالَّ قَدْ مَاتَ، قَالَ: " اذْهَبْ فَوَارِهِ قُلْتُ: إِنَّهُ مَاتَ مُشْرِكًا، قَالَ: اذْهَبْ فَوَارِهِ وَلَا تُحَدِّثْ شَيْئًا حَتَّى تَأْتِيَنِي «، فَوَارَيْتُهُ ثُمَّ أَتَيْتُهُ فَقُلْتُ قَدْ وَارَيْتُهُ فَأَمَرَنِي فَاغْتَسَلْتُ» (سنن النسائي : 193)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், அலி றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் நீங்கள் சென்று, உங்கள் தந்தை அபூ தாலிப் அவர்களை அடக்கம் செய்வீராக என்று கூறினார்கள். (ஸூனன் நஸாஈ : 193)


மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள், மரணித்த ஒருவரை பூமியில் கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.


அல் குர்ஆனில், ஒருவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு எம்முறைகளும் கூறப்படவில்லை. அதேபோன்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் தெளிவாகவும் நேரடியாகவும் “அடக்கம் செய்யுங்கள்” என்ற ஏவலே வந்துள்ளது.


பொதுவாக ஒரு விடயத்தை செய்யுமாறு ஏவப்படுவது, அதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதையே குறிக்கின்றது. எனவே, இவ்விருமூலாதாரங்களை வைத்தே மார்க்க அறிஞர்கள் அடக்கம் மாத்திரமே செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு மாற்றமாக வேறு ஒரு முறையை கையாள்வது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்ட (ஹராம்) ஆகும் என்றும் கூறியுள்ளனர்.


ஒரு விடயத்தைப் பற்றி ஏவல் வந்து விட்டால், அதற்கு எதிரான விடயம் தடுக்கப்பட்டது என விபரமாக வரவேண்டும் என்பது சட்டவாக்கத்தில் அவசியம் கிடையாது. ஏனெனில், அந்த ஏவலில், அதற்கு மாற்றமான விடயம் தடுக்கப்பட்டது என்பது உள்ளடங்கியுள்ளது.


அடக்கம் செய்வது பற்றி இஜ்மாஃ (இஸ்லாமிய அனைத்து மார்க்க அறிஞர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு) :


மரணித்தவரை பூமியில் நல்லடக்கம் செய்வது கட்டாயம் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என இமாம் இப்னுல் முன்திர், இமாம் அந் நவவி, இமாம் அல் மர்தாவீ, இமாம் இப்னுல் முலக்கின் மற்றும் இப்னுல் ஆபிதீன் றஹிமஹ{முல்லாஹ் போன்றோர் குறிப்பிட்டுள்ளார்கள்.


மேற்கண்ட மூலாதாரங்களின் அடிப்படையில், ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால், அவரது உடலை பூமியில் அடக்கம் செய்வது அவசியமாகும் என்பது தெளிவாகின்றது. அடக்கம் செய்வதற்கு மாற்றமாக, அதனை எரிப்பதோ அல்லது எங்காவது வீசிவிடுவதோ மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பாவமான காரியமாகும்.


ஏனெனில், மனிதன் உயிருடன் இருக்கும் போது எவ்வாறு கண்ணியமானானோ, அதே போன்று மரணித்த பின்பும் அவன் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவனாவான். அல்லாஹூ தஆலா அல் குர்ஆனில் 'நாம் மனிதர்களைக் கண்ணியப்படுத்தியுள்ளோம்' என்று கூறுகின்றான். (அல் இஸ்ரா : 70)


'மரணித்தவரின் எலும்பை முறிப்பது, உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போன்றாகும்.” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸூனனு அபீதாவூத் : 3207)


அந்த அடிப்படையில், முஸ்லிமான ஒருவர் மரணித்துவிட்டால், அவரது உடலைக் குளிப்பாட்டி, கபன்செய்து, தொழுகைநடாத்தி, முஸ்லிம்களது மையவாடியில் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது ‘பர்ளு கிபாயா’வாகும். இக்கடமைகளை முஸ்லிம்களில் சிலராவது கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். மார்க்கம் அனுமதித்திருக்கும் நிலைகளிலே தவிர இக்கடமைகளில் ஏதேனுமொன்று விடப்படுமேயானால், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் அனைவருமே அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார்கள்.


எனவே, ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரை பூமியில் அடக்கம் செய்வதே இஸ்லாம் உலகில் தோன்றிய காலம் முதல் இன்றுவரை, இறுதிகாலம் வரைக்கும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் நடைமுறையாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்              

செயலாளர், பத்வாக் குழு                        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா         

      

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,    

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்    

பதில் பொதுச் செயலாளர்,   

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

                          

 

___________________________________________________________________________________________________________________________________________________________________________________________

[1]  قال ابن المنذر رحمه الله : (وأجمعوا على أنَّ دَفْنَ المَيِّت لازِمٌ واجِبٌ على النَّاسِ لا يَسَعُهم تَرْكُه عند الإمكانِ، ومن قام به منهم سقط فَرْضُ ذلك على سائِرِ المُسلمين). ((الإجماع)) (ص: 44).

قال النووي رحمه الله: (دَفْنُ المَيِّت فرضُ كفايةٍ بالإجماعِ). ((المجموع)) (5/282). وقال: (واعلَمْ أنَّ غُسلَ الميِّت، وتكفينَه، والصَّلاةَ عليه، ودفنَه- فروضُ كفايةٍ بلا خلافٍ). ((المجموع)) (5/128).

قال المَرداويّ رحمه الله ُ: (قوله: (غُسل الميِّت، وتكفينُه، والصَّلاة عليه، ودفنُه- فرضُ كفايةٍ) بلا نزاعٍ). ((الإنصاف)) (2/330). وقال أيضًا: (حَمْله ودفْنه، فرضُ كفايةٍ إجماعًا). ((الإنصاف)) (2/378).

قال ابن الملقِّن رحمه الله : (الكَفَن للميِّت واجبٌ، وهو إجماعٌ، وكذا غُسلُه، والصَّلاةُ عليه، ودَفْنه). ((الإعلام)) (4/455).

قال ابن عابدين رحمه الله : (قوله (وحفْرُ قَبرِه... إلخ) شروعٌ في مسائِلِ الدَّفْن، وهو فرضُ كفايةٍ إن أمكَنَ، إجماعًا.حِلْيَة. واحترز بالإمكان عمَّا إذا لم يُمكِن؛ كما لو مات في سفينةٍ كما يأتي، ومُفادُه: أنَّه لا يُجزئ دفنُه على وَجْه الأرضِ ببناءٍ عليه، كما ذكره الشافعيَّة، ولم أرَه لأئمَّتنا صريحًا). ((الدر المختار وحاشية ابن عابدين)) (2/233).

[1]   دفن الميت فرض كفاية بالإجماع، وقد علم أن فرض الكفاية إذا تعطل أثم به كل من دخل في ذلك الفرض دون غيرهم، .....قال الشافعي رحمه الله: لو أن رفقة في سفر مات أحدهم فلم يدفنوه نظر إن كان ذلك في طريق آهل يخترقه المارة أو بقرب قرية للمسلمين فقد أساءوا ترك الدفن وعلى من بقربه دفنه، قال وإن تركوه في موضع لا يمر أحد أثموا وعصوا الله تعالى وعلى السلطان أن يعاقبهم على ذلك (المجموع شرح المهذب)

[1]  وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ (سورة الإسراء : 70) 

[1]  عن عائشة رضي الله عنها: أن رسول الله ﷺ قال: كسر عظم الميت ككسره حيًّا.( سنن أبي داود 3207)  

22.04.2020

28.08.1441

அன்புடையீர்,


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே: சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


மரணித்த ஒரு முஸ்லிமின் உடலை எந்நிலையிலும் தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.


ஒரு முஸ்லிம் மரணித்த பின்னர், அந்த உடலை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, கௌரவமான முறையில் முஸ்லிம்களது மையவாடியில் அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மீது பர்ழு கிபாயாவாகும். மேற்குறித்த கிரியைகளில் ஏதேனும் ஒன்று மார்க்கம் அனுமதித்த காரணம் இன்றி நிறைவேற்றப்படாவிட்டால், மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.


அதனடிப்படையில், மரணித்தவரின் உடலை கட்டாயமாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயமானதொன்றாக, நபி ல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரை, நான்கு மத்ஹப்களின் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் ஏகோபித்த இஸ்லாமிய தீர்ப்பாகக் கருதப்படுகின்றது. கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் மரணிப்பாராயின் அவரது உடலைக் கூட நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலம் ஒன்றை அடைவது சாத்தியமற்ற நிலையில், குறித்த உடலை பாரம் ஒன்றை கட்டி கடலுக்குள் இறக்கி விட வேண்டும். இந்த விதிவிலக்கை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.
அந்த வகையில் Covid-19 இன் காரணமாக மரணிப்பவரின் உடலை அடக்கம் செய்வது கட்டாயமாகும். இவ்விடயத்தில் எவராலும், இந்நிலைப்பாட்டில் இருந்து மாறுபட முடியாது, ஏனெனில், இது புனித அல்-குர்ஆனின் கட்டளையாகும்.


“பின், அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.” (சூறா அபஸ: 21)


“இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;. அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம். இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம்.” (சூறா தாஹா: 55)


மேலும், ஒருவர் உயிர் வாழும் பொழுது எவ்வாறு கண்ணியப்படுத்தப்படுகின்றாறோ, அவர் இறந்த பின்னரும் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதனை இறைத் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று வலியுறுத்துகின்றது:


“மரணித்தவரின் எலும்பை முறிப்பது, உயிருள்ள நிலையில் அதை முறிப்பதைப் போன்றதாகும்.” (ஸூனன் அபூதாவுத்: 3207).


இதனடிப்படையில், உடலின் எப்பாகத்துக்கேனும் (தகனம் அல்லது முறித்தல்) போன்றவற்றின் மூலம் தீங்கு விளைவிப்பது, இஸ்லாத்தின் போதனைகளின்படி ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.


ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது, அவரது கை கால்கள் போன்ற உறுப்புக்கள் துண்டிக்கப்படுமாயின் அவற்றிலும் இச்சட்டமே பேணப்படல் வேண்டும்.


இவற்றின் பின்னணியில், அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பதானது, இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு, அவர்களின் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கு முரணான ஒரு விடயமாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்                

செயலாளர், பத்வாக் குழு                        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா          

      

 அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

 மேற்பார்வையாளர் - பத்வாக் குழு

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

 தலைவர்,    

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

                          

2021-01-03

தலவைர்/செயலாளர்
பிரதேச/மாவட்டக் கிளைகள்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நற்பணிகளையும் பொருந்திக் கொள்வானாக!


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு இவ்வருடத்திற்கான வேலைத் திட்டங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றது. அவ்வகையில் தங்களது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தலைமையகத்தின் சமூக சேவைப் பிரிவு வேண்டி நிற்கின்றது. 


மேலும் இவ்வருடத்திற்கான உதவித் திட்டங்களில் அங்கவீனர்களுக்கும், மூத்த உலமாக்களுக்குமான வேலைத் திட்டம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றது. இத் திட்டத்தின் முதற்கட்டமாக அங்கவீனர்களில் 30 நபர்களும், மூத்த ஆலிம்களில் 50 நபர்களும் இணைக்கபடவுள்ளனர்.


எனவே அவர்கள் சம்பந்தமான தகவல் திரட்டுவதற்காக விண்ணப்பப்படிவங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவ்விண்ணப்பப்படிவங்களை தங்களது பிரதேசங்களில் உள்ள பொருத்தமானவர்களுக்கு வழங்கி எதிர்வரும் (வெள்ளிக்கிழமை) 2021-01-08 ஆம் திகதிக்கு முன்னர் இங்கு குறிப்பிடும் இலக்கத்திற்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பிவைக்குமாறு வேண்டிக் கொள்வதோடு மூலப் பிரதியினை தபாலில் அல்லது நேரடியாக ஒப்படைக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.


அங்கவீனர் விடயத்தில் கவனிக்கப்பட வேண்டியவை:


01. மூளை வளர்ச்சி குன்றியவராக இருத்தல்
02. சுயமாக தன்னுடைய காரியங்களை செய்ய முடியாதவராக இருத்தல்
03. உதவிகள் பெற தகுதியானவராக இருத்தல்
மூத்த ஆலிம்கள் விடயத்தில் கவனிக்கப்பட வேண்டியவை:
01. 60 வயதை தாண்டியவர்களாக இருத்தல்
02. சேவைiயில் இருந்து ஓய்வு பெற்றவராக இருத்தல்
03. அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், ஹிப்ழு மத்ரஸாக்களில் கற்பித்தவராக இருத்தல்
04. வருமானம் குறைந்தவர்களாக இருத்தல்
05. நோயாளிகளாக இருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்


மேலதிக விபரங்களுக்கும், வட்ஸ்அப் பாவனைகளுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்

சமூக சேவைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் - 0777 571 876


வஸ்ஸலாமு அலைக்கும்.


அஷ்-ஷைக். கே.எம். அப்துல் முக்ஸித்
செயலாளர் - சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அங்கவீனர்களுக்கான உதவி நிகழ்ச்சி : https://drive.google.com/file/d/1R2kEt9fdvIuQDcq9vvSgTqon3AaeEoPj/view?usp=sharing 

தக்ரீமுல் உலமா நிகழ்ச்சி : https://drive.google.com/file/d/1GisNkaqx7lKIkI9fbk7LPScEYQ6tpp5H/view?usp=sharing 

 

ACJU/MED/2021/001

 

02.01.2021 (17.05.1442)


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற, அதன் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய மிகப் பழமையான அமைப்பு என்பதை யாவரும் அறிவர். இந்த அமைப்பு அதன் நூற்றாண்டு காலப் பூர்த்தியை அண்மித்திருக்கும் சந்தர்ப்பம் இது (1344-1442).


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தனது இலட்சிய பயணத்தை தொய்வில்லாமல் மேற்கொண்டு வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். இனிவரும் காலங்களிலும் அல்லாஹ்வின் பேரருளால் அதன் பணிகள் சீராகவும், சிறப்பாகவும் தொடரும் என்ற ஆழமான நம்பிக்கை நமக்குண்டு. வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் இப்பணியை தொடர அருள்பாளிப்பானாக!


அல்குர்ஆன், அஸ்ஸூன்னா, இஜ்மா, கியாஸ் ஆகியவற்றின் அடிப்படையிலும் எமது முன்னோர்களின் வழிகாட்டலின் அடிப்படையிலும் தீனின் மேம்பாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் சமூக ஒற்றுமை மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்காகவும் (https://cutt.ly/UjeCIrX) ஜம்இய்யா தன்னாலான பங்களிப்புக்களை செய்து வருகின்றமையை நீங்கள் அறிவீர்கள்.


ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு அதன் மத்திய சபையின் ஒத்துழைப்புடன் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம், அன்பு, கலந்தாலோசித்தல், பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, நல்லெண்ணம், தாராளத்தன்மை, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைப் பேணி மிகவும் கட்டுப்பாடாகவும் கட்டுக்கோப்புடனும் இயங்கி வருகின்ற ஒரு முன்மாதிரி அமைப்பாகும். அங்கு வீணான வாதங்கள் முன்வைக்கப்படுவதில்லை. பேதங்கள் பாராட்டப்படுவதில்லை. சண்டை, சச்சரவுகள் இல்லை. எந்தவொரு விவகாரத்திலும் மார்க்கம் சொல்லும் கருத்து வேறுபாடுகளின் போது பேண வேண்டிய ஒழுக்கங்களையும், தர்மங்களையும் பேணி அனைவரும் தத்தமது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் சுதந்திரமாக முன்வைப்பர்;. இறுதித் தீர்மானம் மிகவும் சுமுகமாகப் பெறப்படும். இதுதான் இன்று வரை பேணப்பட்டு வரும் ஜம்இய்யாவின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாகும். (https://cutt.ly/UjeCSYB)


ஜம்இய்யத்துல் உலமா மீது அபிமானமும் நம்பிக்கையும் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை வீணாக்கி விடாமல் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதில் அது உறுதியாக உள்ளது. எனவே, ஜம்இய்யாவுக்குள்ளும் அதன் நிறைவேற்றுக் குழு மட்டத்திலும் பரஸ்பர நல்லெண்ணமும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இன்று வரை வலுவாக இருக்கின்றன என்ற உண்மையை இங்கு சமூகத்திற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றோம். என்றும் போல் ஜம்இய்யத்துல் உலமா அதன் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை அல்லாஹ்வின் துணைக் கொண்டு அதன் சக்திக்கு உட்பட்ட வகையில் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது என்பதை இத்தால் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். (அல்லாஹ்வின் அனுகூலமேயன்றி வேறெதுவும் இல்லை).


குறிப்பாக, சமூகம் காலத்திற்குக் காலம் எதிர்நோக்கி வந்துள்ள எல்லா வகையான சவால்களின் போதும் ஜம்இய்யா தனக்கே உரிய பாணியில் அவற்றை எதிர் கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதில் பின் நின்றதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த வகையில் தற்போது சமூகம் எதிர் கொண்டுள்ள கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் ஜனாஸாக்களை எரிக்கும் சுகாதாரத் துறையின் நிலைப்பாட்டை மாற்றி அவற்றை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியில் ஜம்இய்யா தனிப்பட்ட முறையிலும் பிற அமைப்புக்களுடன் இணைந்தும் ஆரம்பம் முதல் இன்று வரை பெருமுயற்சி செய்து வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. (https://cutt.ly/njeVu8G)


ஆகவே, சமூகம் பல்வேறு சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகங் கொடுத்துள்ள இன்றைய கால கட்டத்தில் வீணான சந்தேகங்களைக் கிளப்புதல், வதந்திகளைப் பரப்புதல், வீணான தர்க்கங்களில் ஈடுபடுதல் போன்ற அல்லாஹ்வின் அருளிலிருந்து சமூகத்தை தூரமாக்கும் செயற்பாடுகளிலிருந்து முற்றாக விலகி அவனின் அருளைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் ஈடுபடுமாறும் பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒற்றுமையாக செயற்படுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி                          
கௌரவத் தலைவர்

                                                           

அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்                               
கௌரவ பிரதித் தலைவர் 

 

அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

கௌரவ பதில் பொதுச் செயலாளர்

                                               

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல் 

கௌரவ பொருளாளர்

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்                                                  
கௌரவ உப தலைவர் 

                                                      

 அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்

கௌரவ உப தலைவர்

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். றிழா                                              
கௌரவ உப தலைவர்     

                                                   

 அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம்

கௌரவ உப தலைவர்

 

அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா                                   
கௌரவ உப தலைவர்     

                                                    

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் 

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்                                   
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

                       

  அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்                                       
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                     

 அஷ்-ஷைக் எம். ஹஸன் பரீத்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் அர்கம் நூராமித்                                               
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                      

 அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூஸூப்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். பாழில்                                               
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 


அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்                                
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                        

அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர்

 கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்                        
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்   

                       

அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்                                         
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                         

அஷ்-ஷைக் ஸகீ அஹ்மத்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

கலாநிதி அஷ்-ஷைக் அஹ்மத் அஸ்வர்                               
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்   

                        

அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். நுஃமான்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

கலாநிதி அஷ்-ஷைக் எம்.எல்.எம். முபாரக்                         
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்   

                       

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பரூத்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.ஏ.ஏ.எம். பிஷ்ர்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


30.12.2020

நாளை (31.12.2020 அன்று) கொழும்பில் ஊவுது அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாம் அழைக்கப்பட்டுள்ளதாக சமூக வளைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.


என்றாலும் பின்விளைவுகளையும், சுகாதார வழிகாட்டல்களையும் கருத்திற் கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை ஜம்இய்யா தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமாகக் கருதவில்லை. எனவே, ஊவுது அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலந்து கொள்வதில்லை என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் பாலித்து நிலைமைகளை சீராக்கித் தருவானாக.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா