Ref: ACJU/NGS/2021/053
2021.04.13 (1442.08.30)
السلام عليكم ورحمة الله وبركاته
'யா அல்லாஹ், இந்தப் பிறையை பாதுகாப்பைக் கொண்டும், நம்பிக்கையைக் கொண்டும், ஈடேற்றத்தைக் கொண்டும், சாந்தியைக் கொண்டும் தோன்ற வைப்பாயாக. (சந்திரனே!) உன்னுடைய இரட்சகனும், என்னுடைய இரட்சகனும் அல்லாஹ் ஆவான். இந்தப் பிறை வழிகாட்டலையும், நல்லதையும் கொண்டு வர வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
சங்கையான மாதமான ரமழான் உங்களிடம் வந்துள்ளது. அதில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நோன்பு நோற்குமாறு உங்களை கட்டளையிட்டுள்ளான். அம்மாதத்தில் சுவர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு அனைத்து ஷைத்தான்களும் சங்கிலியிடப்பட்டுள்ளன. அதில் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை வைத்திருக்கின்றான். எவர் அதன் நன்மையை இழக்கின்றாரோ உண்மையில் அவர் இழக்கப்பட்டவராவார்.
இந்தப் புனிதமான மாதத்தில் நாம் நோய்வாய்ப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டுள்ள, ஒடுக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ் மிகவும் நீதியானவனும் மிக்க கருணையாளனும் ஆவான்.
இந்தப் புனித மாதத்தின் அருள்களை எல்லோருடனும் கருணை மற்றும் தாராள மனப்பான்மையுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உண்மையிலேயே, ஒருவன் தனக்காக நேசிப்பதை தனது சகோதரனுக்காக நேசிக்கும் வரை அவனுடைய ஈமான் முழுமையடையமாட்டாது.
இந்த ஆண்டு பிரயோசனமான முறையில் ரமழானைப் பயன்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எமக்கு உதவி புரிவானாக.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
கடந்த 2019 (ஹிஜ்ரி 1440) புனித ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசிய மட்டத்தில் இரண்டு கட்டுரைப் போட்டிகளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடாத்த தீர்மானித்து, அதற்கான அறிவித்தலை வெளியிட்டது. அதில் 2020.01.31 ஆம் திகதிக்கு முன்னர் போட்டியாளர்களின் கட்டுரைகள் யாவும் பதிவுத் தபால் மூலம் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனையிடப்பட்டிருந்தது.
அதற்கமைய தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் 4500 - 5000 இடைப்பட்ட சொற்களைக் கொண்ட 81 ஆய்வுக் கட்டுரைகளும் 1500 - 2000 இடைப்பட்ட சொற்களைக் கொண்ட கட்டுரைப் போட்டிக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 390 கட்டுரைகளும் கிடைக்கப் பெற்றன.
கட்டுரைகள் யாவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையா என ஏற்பாட்டுக் குழுவினால் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் அதில் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் இக்குழுவால் நியமிக்கப்பட்ட திருத்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா சென்ற 2021.04.12 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் கொழும்பு 10 யில் அமைந்துள்ள இஸ்லாமிக் சென்டர் மண்பத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயளாலர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அஷ்ஷைக் எம். மின்ஹாஜ் அவர்களுடைய கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப பொருளாளர் கலாநிதி அஷ்-ஷைக் ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகமொன்று (PPT) அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான் அவர்களால் நடாத்தப்பட்டது. அதில் ஜம்இய்யாவின் சேவைகள் மற்றும் பணிகள் பற்றி மிக சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டது.
அதனையடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அதில் எழுத்தாளர்களால் செய்யப்பட்ட சாதனைகள் பற்றியும், எழுத்தாளர்களின் எழுத்துக்களின் தாக்கம் பற்றியும் குறிப்பிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழுடன் காசோலையும், ஆறுதல் பரிசுக்குரியவர்களுக்கான சான்றிதழுடன் காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இப்போட்டி பற்றிய பின்னூட்டல் கருத்துக்கள் போட்டியில் கலந்து கொண்டவர்களினால் முன்வைக்கப்பட்டது.
இறுதியாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவருமான அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் கப்பாரத்துல் மஜ்லிசுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ACJU/NGS/2021/044
2021.04.06 (1442.08.23)
இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும், செயற்பாடையும் நோக்கினால் இதில் மனிதனின் உயிருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
நோன்பைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, 'நோன்பு நோற்று ஆரோக்கியம் பெறுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்:
1. எமது இப்தார் மற்றும் ஸஹ்ர் உடைய நேரங்களில் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றல்.
2. கொவிட் 19 வைரஸ் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதனால் இந்த ரமழான் மாதத்தில் கூட்டு அமல்களில் ஈடுபடும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றுதல்.
3. ரமழான் காலத்தில் ஆரோக்கியமான தூக்க பழக்கவழக்கங்களை பின்பற்றல்.
4. எமது வீட்டிலுள்ள சிறார்களும் எம்முடன் இணைந்து நோன்பு நோற்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். எனவே, அவர்கள் நோன்பு நோற்கும் விடயத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளல்.
5. கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் ஆகியோர் நோன்பு நோற்பதில் சில சலுகைகள் இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது. அவைகளை பின்வரும் இணையதள இணைப்பினூடாக பார்வை இடலாம்.
https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/758-2016-08-04-09-11-28
6. நேன்பு நோற்க சக்தியற்ற வயோதிபர்களுக்கும் நிரந்தர நோயாளிகளுக்கும் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது. அதேநேரம் அந்த ஒவ்வொரு நோன்புக்காகவும் அவர்கள் ஒரு مُد (முத்து) அரிசியை ஃபித்யாவாக கொடுக்க வேண்டும். ஒரு مُد (முத்து) என்பது 600 கிராம் ஆகும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்த ரமழான் மாத நோன்பை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் நோற்பதற்கு அருள் புரிவதோடு, நமது நாட்டையும் உலக மக்களையும் கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக.
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் தத்தம் பிரதேசத்தில் காணப்படும் மஸ்ஜித்களில் மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரக்கூடிய ஜும்ஆ தினத்தில் பொது மக்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ACJU/NGS/2021/044
2021.04.06 (1442.08.23)
ரமழான் மாதம் ஒரு மனிதன் தன்னுடைய இச்சைகளையும், ஆசைகளையும் அடக்கி பிறரது உணர்வுகளை மதிக்கும் பயிற்சியை மனிதனுக்கு வழங்கும் மாதமாகும். இக்காலப் பகுதியில் நாம் சமூகம் சார் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, இக்காலப்பகுதியில் மனிதர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் விடயங்களை மேற்கொள்வதுடன் எம்மால் யாருக்கும் தீங்கு நிகழாத வண்ணம் எமது தனிப்பட்ட விடயங்களையும், குடும்ப விடயங்களையும், சமூக விடயங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ரமழானில் கடைபிடிக்க வேண்டிய சமூக வழிகாட்டல்கள்:
01. றமழான் மாதம் தான, தர்மங்கள் அதிகமாக வழங்கும் மாதமாக இருப்பதனால் ஏழைகள் மற்றும் அயலவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகம் கவனம் செலுத்துதல்.
02. எமது வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.
03. வீடுகளில் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடும்போது, குறிப்பாக ஸஹர் நேரத்தில் பிறருக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்து வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மாத்திரம் கேட்கும்படி வைத்துக் கொள்ளல்.
04. மஸ்ஜித்களில் அமல்களை ஏற்பாடு செய்யும் போது கண்டிப்பாக மஸ்ஜிதுக்குச் சூழ இருக்கும் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல்.
05. மஸ்ஜிதுக்கு வாகனங்களில் வருபவர்கள் அதனை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு நடந்து கொள்ளல்.
06. மஸ்ஜித்களில் இபாதத்கள் மற்றும் கஞ்சி, உலர் உணவு பொதிகள் வினியோகித்தல் போன்ற சமூகம் சார் விடயங்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார வழிகாட்டல்களைப் பேணுவதுடன், இது குறித்து வக்ப் சபையினால் வழங்கப்படும் வழிகாட்டல்களையும் அறிவித்தல்களையும் மஸ்ஜித் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்யாது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் குறித்த பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது விடயத்தில் மஹல்லாவாசிகள் பொறுப்பாக நடந்து கொள்வதுடன் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு தங்களது ஒத்துழைப்பையும் வழங்குதல்.
07. இக்காலப்பகுதியில் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் வீணாக விழித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வழிகாட்டுவதில் உலமாக்கள், பிரதேச மக்கள் என அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அவர்களது கால நேரம் அல்லாஹ்வுக்கு விருப்பமான முறையில் அமைவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.
08. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானமாக நடந்து கொள்ளல்.
இது விடயம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனத்தை தவறாமல் அனைவரும் வாசிப்பதுடன் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.
ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட 'சமூக ஒற்றுமை: காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை' எனும் நூலை வாசித்து பயன்பெறல்.
09. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளல்.
இந்த ரமழானை இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அருளான ரமழானாக ஆக்கிக் கொள்வோமாக.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2021/044
2021.04.06 (1442.08.23)
நாம் ஷஃபான் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இது அருள்மிகு ரமழான் மாதத்திற்குத் தயாராகும் காலப் பகுதியாகும்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹுதஆலா சங்கையான அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வொரு அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும் சதகாவினதும் மாதமாகும்.
ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக வழிகாட்டல்கள்:
1. ரமழான் மாதத்தின் அனைத்து நோன்புகளையும் பேணுதலுடன் நோற்றல்.
2. பர்ளான, சுன்னத்தான இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்தல். குறிப்பாக, சமூக வலைத்தளங்களிலும் வேறு அனாவசியமான விடயங்களிலும் நேரத்தை வீணடிப்பதை முற்றாக தவிர்த்தல்.
3. இரவு நேர வணக்கங்களிலும் முடியுமான அளவு ஈடுபடுதல். அதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்த்துக் கொள்ளல்.
4. அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடனான இறுக்கமான தொடர்பை அதிகரித்தல் வேண்டும். மேலும் அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் போதனைகளை எமது வாழ்வில் எடுத்து நடப்பதும், பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுவதும் அல்குர்ஆன் மீதான எமது கடமைகள் ஆகும். ஓவ்வொரு தனி நபரும் அதிகமதிகம் அல்குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு 'ஜுஸ்உ'வையாவது ஓத முயற்சித்தல்.
5. தன்னைத் தான் சுயவிசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பமாக இந்த ரமழானை ஆக்கிக் கொள்ளுதல்.
6. ரமழானின் இறுதி 10 தினங்களில் இஃதிகாப் எனும் அமல் முக்கியத்துவம் பெறுகின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள் இந்த அமலை ஊர் மக்கள் நிவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் போது பொது சுகாதார அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றுக் கொள்ளல்.
7. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் உலகளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிமிக்க சூழல் நீங்கி முழு நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பவும், அவர்கள் ஆரோக்கியத்துடனும், சுகாதாரத்துடனும், சுபீட்சமாக வாழவும், எமது தேவைகள் நிறைவேறவும் பிரார்த்தித்தல். நோன்பு திறக்கும் நேரம், ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரங்களை அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளல்.
இவ்வான்மீக வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோமாக!
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் ரமழான் மாதத்தை அடைந்து அவனது றஹ்மத்தையும், மஃபிரத்தையும், நரக விடுதலை என்ற பாக்கியத்தையும் பெற்ற கூட்டத்தில் எம்மனைவரையும் ஆக்கியருள்வானாக.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு: நோன்பு, ஸகாத் மற்றும் ஸகாத்துல் ஃபித்ர் போன்ற விடயங்கள் தொடர்பான மார்க்கத் தெளிவுகளை பெற விரும்புபவர்கள் ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவின் 0117-490420 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த புனித ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு கட்டுரைப் போட்டிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்டன.
அவற்றின் பெறுபேறுகள் பின்வருமாறு:
பிரிவு : 01 ஆய்வுக் கட்டுரை (தமிழ் மொழி)
முதலாமிடம் |
A.C. Fareeka – Polannaruwa |
இரண்டாமிடம் |
Ashkar Aroos – Beruwala |
மூன்றாமிடம் |
N.M. Rishad – Akurana |
பிரிவு - 02 கட்டுரை (தமிழ் மொழி)
முதலாமிடம் |
A.K.M. Musthaq - Eattala |
இரண்டாமிடம் |
S.A.I. Hasan – New Kattankudy |
மூன்றாமிடம் |
M.N.F.Nafeesha – Kurunegela |
பிரிவு : 01 ஆய்வுக் கட்டுரை (சிங்கள மொழி)
முதலாமிடம் |
M.R.M. Arkam – Kurunegala |
இரண்டாமிடம் |
Fathima Sara Muhammed -Makola |
மூன்றாமிடம் |
M.N.P. Faroosha – Ratnapura |
பிரிவு - 02 கட்டுரை (சிங்கள மொழி)
முதலாமிடம் |
A.R.M. Rasmy - Nikaweratiya |
இரண்டாமிடம் |
M.R.H. Fathima Hilma - Colombo 10 |
மூன்றாமிடம் |
M.R.A. Ayyash - Aranayaka |
ஆறுதல் பரிசு பெறுபவர்கள்
குறிப்பு: கொவிட்- 19 வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரனமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு வருந்துகின்றோம்.
பரிசளிப்பு நிகழ்வுகள் பற்றிய விபரம் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.
ஏற்பாட்டுக் குழு
02.04.2021 (19.08.1442)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவின் ஏற்பாட்டில் 'தேசிய உரிமைகளை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் காத்தான்குடி போன்ற இடங்களை மையமாக வைத்து அமைந்த 3 நாள் கல்விச்சுற்றுலா 17,18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மரியாதைக்குரிய கரவிலகொடுவே தம்மதிலக தேரரின் தலைமையில் 5 பிக்குமார்கள் கலந்து கொண்டதோடு ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவின் செயலாளர் அவர்களின் தலைமையில் 11 உலமாக்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச உரிமைகள், புராதனச் சின்னங்களை பார்த்து அதன் வரலாற்றை கற்பதே இக்கல்வி சுற்றுலாவின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது.
2021.03.16 (1442.08.02)
மூத்த ஆலிம்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டம் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு அண்மையில் ஆரம்பித்து வைத்தது. தக்ரீமுல் உலமா எனும் மகுடத்தின் கீழ் இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 2021.03.16 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
அஷ்ஷைக் எம்.ஏ.எம். அர்ஷத் அவர்களின் கிராஅத் பாராயணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சித் திட்டம் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்கள்,
'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வளர்ச்சியில் உங்களைப் போன்ற மூத்த ஆலிம்களின் அயாராத உழைப்பும் நீங்கள் சிந்திய வியர்வைத் துளிகளும் கனதியானவை. அவற்றை கருத்திற் கொண்டு அரபு மத்ரஸாக்கள், மஸ்ஜித்கள் மற்றும் அல்குர்ஆன் மத்ரஸாக்களில் நீண்ட காலமாக சன்மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த மூத்த ஆலிம்கள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தனவந்தர்களுடன் கலந்துரையாடினோம். அதன் பிரகாரம் முதற் கட்டமாக ஐம்பது ஆலிம்களுக்கு மாதாந்த உதவித் தொகை ஒன்றினை வழங்குவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப் பெற்றது.
இத்திட்டத்திற்கு தகுதியான ஆலிம்களை தெரிவு செய்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளினூடாக விண்ணப்பங்களையும் பகிர்ந்து கொடுத்தோம். பூர்த்தி செய்யப்பட்ட குறித்த விண்ணப்பப் படிவங்கள் குறிக்கப்பட்ட திகதிக்குள் ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்றதன் அடிப்படையிலும் குறித்த ஆலிம்களின் சேவைகள், குடும்ப நிலை, வருமானம், மருந்துச் செலவினம்... முதலான விடயங்களைக் கவனத்திற் கொண்டு முதற் கட்ட உதவித் திட்டத்திற்காக ஐம்பது மூத்த ஆலிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான உதவித் திட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வே இது. மேலும் உதவிகள் கிடைக்கப் பெறுகின்றபோது இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு தகுதியான ஆலிம்களை கட்டம் கட்டமாக உள்வாங்கும் முயற்சி தொடரும், இன்ஷா அல்லாஹ்' எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்கள், ஜம்இய்யத்துல் உலமாவின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட, அதன் வளர்ச்சிக்காக உழைத்த மூத்த ஆலிம்கள் அனைவரையும் நினைவுகூர்ந்ததோடு குறிப்பாக ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களையும் நினைவுகூர்ந்தவாறு தனதுரையை ஆரம்பித்தார். தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர் தனது உரையில்,
'இந்நாட்டு மக்கள் பல்வேறு இடர்கள், சோதனைகள், துன்பியல் நிகழ்வுகளை எதிர்கொண்டபோது மனிதநேயப் பணிகளில் முன்னின்று உழைத்த அமைப்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
கனி தருக்கின்ற மரத்துக்கு கல் எறியப்படுவது போல இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பல பக்க விமர்சனங்களுக்குட்பட்டுள்ளதை சகலரும் அறிவர்.
இன்று முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் குறிப்பாக ஜம்இய்யதுல் உலமாவை முன்னிறுத்தியும் பல முனைகளிலிருந்து விரல்கள் நீட்டப்படுகின்றன. எனினும், அல்லாஹுத் தஆலா எம்முடன் இருக்கின்றான் என்பதே எமது நம்பிக்கையாகும்.
வீதியில் இறங்கி குரல் கொடுப்பது எமது முன்னோர் காட்டித் தந்த வழிமுறையல்ல. ஜம்இய்யத்துல் உலமா தனி மனிதனுக்குச் சொந்தமானதல்ல. அது ஒட்டு மொத்த சமூகத்துக்கும் சொந்தமானது. அந்த வகையில் கால சூழலைக் கவனத்திற்கொண்டு தேவைகளுக்கேற்ப துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி அதன் பிரகாரமே இயங்கி வருகின்ற ஒரு நிறுவனமே ஜம்இய்யத்துல் உலமா.
நாம் எமது தாய்நாடான இலங்கையை நேசிக்கின்றோம். அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம். நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படுவது கட்டாயமானது. ஒவ்வொருவரும் தத்தமது பிரதேசங்களிலுள்ள சகோதர இன மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுடன் நேசம் பாராட்ட வேண்டுமென மார்க்கம் வலியுறுத்துகிறது. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் நல்லவர்கள். வெகு சிலரே இனவாதத்துடன் செயல்படுகிறார்கள். எனவே, அந்த பெரும்பாலானவர்களுடன் நல்லுறவு பேணி நடந்து கொள்வது அவசியம். இவ்விடயம் பற்றியெல்லாம் உங்களது பிரதேசத்திலுள்ள ஆலிம்களுக்கு தெளிவூட்டுவது உங்களது பொறுப்பு' எனத் தெரிவித்தார்.
நிகழ்வில் பங்கேற்ற மூத்த ஆலிம்களுள் அஷ்ஷைக் அப்துல் ஜப்பார், அஷ்ஷைக் எம். ஹஸ்புல்லாஹ் பஹ்ஜி, அஷ்ஷைக் எம். மர்ஜான் மற்றும் அஷ்ஷைக் எம். கலீல் ஆகியோர் குறித்த நிகழ்வு பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
நிகழ்ச்சியின் பிரதான அம்சமான மூத்த ஆலிம்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சமுகமளித்த மூத்த ஆலிம்களுக்கான அடையாள காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாளர் அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்களின் நன்றியுரையுடனும் துஆவுடனும் நிகழ்வு நிறைவுற்றது.
ACJU/NGS/2021/038
2021.03.20 (1442.08.06)
அஷ்ஷைக் முஹம்மத் அலி பின் ஜமீல் அஸ்ஸாபூனி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அல்குர்ஆன் விளக்கம் மற்றும் இஸ்லாமிய வராஸத் (சொத்துப் பங்கீடு) பற்றிய ஆழ்ந்த அறிவுமிக்க, பன்னூல் ஆசிரியரும் உலகமறிந்த தலை சிறந்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் முஹம்மத் அலி பின் ஜமீல் அஸ்ஸாபூனி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் வெள்ளிக்கிழமை, 2021.03.19ம் திகதி அன்று வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் 'ஹல்புஷ்ள ஷஹ்பா' எனும் நகரத்தில் 1930ம் ஆண்டில் பிறந்தார்கள். சிறு வயதிலே அல்குர்ஆனை மனனம் செய்த அவர்கள் ஆரம்ப மார்க்கக் கல்வியை தனது தந்தையிடமே கற்றுக் கொண்டார்கள். பின்னர் ஷரீஆக் கற்கைநெறியையும், உயர் கற்கை நெறியையும் எகிப்தில் அமைந்துள்ள ஜாமிஆ அஸ்ஹரிலே பெற்றுக் கொண்டார்கள். பின்னர் பல வருடங்கள் சிரியா நாட்டிலே இல்மைக் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் மக்கா நகரில் உள்ள ஜாமிஆ உம்முல் குராவில் சுமார் 25 ஆண்டுகளை கல்வி கற்றுக் கொடுப்பதிலே கழித்தார்கள்.
அன்னார் சிரியா நாட்டில் உள்ள 'ராபிதத்துல் உலமா அஸ்ஸூரிய்யீன்'; என்ற அமைப்பின் முதலாவது தலைவராகவும் அவ்வமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர்களுமாவார்கள். அவர்கள் இந்த உம்மத்திற்காக பல கிரந்தங்களை எழுதிய ஒரு எழுத்தாளரும் ஆவார்கள். ஒரு விடயத்தை கையாளும் போது அவருடைய எழுத்துக்கள் நிதானமானதாகவும், நடுநிலைப்போக்கை கொண்டதாகவும் அமைந்திருக்கும்.
இந்நாட்டு உலமாக்கள் மற்றும் ஷரீஆக் கற்கைநெறியை கற்கும் மாணவர்கள் அவருடைய கிரந்தங்களிலிருந்து அன்று முதல் இன்று வரை பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், உலகளாவிய ரீதியில் உள்ள உலமாக்களுக்கும் அக்கிரந்தங்கள் உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2021/026
2021.03.18
1442.08.04
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு
வழிதவறிய சிந்தனைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், பல நூற்றாண்டுகளாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கையைப் பின்பற்றி, இந்நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, நாட்டின் சட்டங்களைப் பேணி, ஏனைய சமூகங்களுடன் சகவாழ்வைப் பேணி வாழ்ந்து வந்த சமூகமாகும்.
அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமான வழிதவறிய சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவும் போது அவை தொடர்பான விழிப்புணர்வை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டியது சன்மார்க்க அறிஞர்களின் கடமையாகும். அவ்வாறே பொது மக்களும் மார்க்க ரீதியான புதிய சிந்தனைகள் ஏதேனும் வரும்போது, அவை தொடர்பாக ஆலிம்களை அணுகி தெளிவுகளை பெற்றுக் கொள்வதும் அவர்களது பொறுப்பாகும்.
இதனடிப்படையில், சுபர் முஸ்லிம் சிந்தனை பல தெளிவான அல்-குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமானவையாக இருப்பதுடன், அல்-குர்ஆனிலும், அஸ்-ஸுன்னாவிலும் மறுமை நாளின் அடையாளங்கள் தொடர்பாக வந்துள்ள பல விடயங்கள் பற்றிய சன்மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் மாற்றமாக, பகுத்தறிவைப் பயன்படுத்தி சொந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் காணமுடிகின்றது. அண்மைக்காலமாக இச்சிந்தனை இலங்கையிலும் சிலரிடம் பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பான மார்க்கத் தீர்ப்பினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 2020.10.08 ஆம் திகதி வெளியிட்டுள்ளது. அதனைப் பின்வரும் இணையதள இணைப்பில் பார்க்க முடியும்.
https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/2087-letter-on-2020-07-31
ஆகவே, வழிதவறிய இச்சிந்தனை தொடர்பான விடயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதையும், அவற்றை பிரசாரம் செய்வதையும் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன், இச்சிந்தனையுடையவர்கள் இந்நாட்டு மக்களினதும் முஸ்லிம்களினதும் பிரதான நீரோட்டத்திலிருந்து விலகிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் அச்சம் காணப்படுகின்றது. எனவே உரிய அரச அதிகாரிகளுக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூகப் பொறுப்புதாரிகள் இவ்வாறான கொள்கையில் உள்ளவர்களை நேரான வழியின் பக்கம் நளினமாகவும், அன்பாகவும் நெறிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இவ்வாறான வழிதவறிய சிந்தனைகளிலிருந்து நம்அனைவரையும் பாதுகாப்பானாக.
அஷ்ஷேக் எம். அர்கம் நுராமித்,
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.