ACJU/FRL/2020/13-230
24.08.2020
04.01.1442
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
நிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக
கடந்த 16.06.2020 அன்று கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டிருந்தது. குறித்த வழிகாட்டலில், ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தது.
அந்த அடிப்படையில், எந்தெந்த மஸ்ஜித்களில் சுகாதார அதிகாரிகளின் இடைவெளி பேணல் முறையை அமுல்படுத்தும் போது குறித்த நேரத்திற்கே மஸ்ஜிதுக்கு சமுகமளித்திருக்கும் அனைவரையும் அனுமதிக்க முடியாதுள்ளனவோ, அத்தகைய மஸ்ஜித்கள் குறித்த கோவிட் 19 உடைய அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு நிர்ப்பந்தமான இந்நிலையில், இரண்டாவது ஜுமுஆவை நடாத்தும் விடயத்தில் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொண்டு மார்க்க வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Ref: ACJU/GEN/2020/022
11.08.2020 / 20.12.1441
நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்
இறுதியாக நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியதையிட்டு நம் நாட்டு ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கும், பிரதமர் திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவான அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜம்இய்யா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நெருக்கடியானதொரு சூழலில் தேர்தலை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருப்பதானது நம் நாட்டின் இயலுமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான எமது மக்களின் ஈடுபாடு என்பவற்றை பறைசாட்டுகின்றது.
நடந்து முடிந்த தேர்தலானது எமக்கு ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை கற்றுத் தந்துள்ளது. வன்முறையற்ற தேர்தல் மற்றும் சுதந்திரமான முறையில் வாக்களித்தல் போன்றன எமக்கு ஒரு திருப்திகரமான அரசியல் கலாச்சாரத்தைக் காண்பிக்கின்றன.
மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். அரசாங்கத்தின் வெற்றியுடன் சேர்த்து அதன் மீது பொறுப்புக்களும் வந்து சேர்கின்றன. ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு நம் நாட்டைப் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம்; போன்றவற்றின்பால் இட்டுச் செல்லும் இயலுமையை இந்த புதிய அரசாங்கம் கொண்டிருப்பதாக நாம் நம்புகின்றோம்.
நம் நாட்டை அபிவிருத்தி, நல்லிணக்கம் கொண்ட ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு இப்புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துவிதமான காத்திரமான நடவடிக்கைகளுக்கும் அரசியல், இன, மத வேறுபாடுகளை புறந் தள்ளிவிட்டு ஒன்றுபட்டு ஒத்துழைக்க எதிர்க்கட்சி, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.
அல்லாஹுதஆலா எமது தாய் நாட்டை அமைதியும், அபிவிருத்தியும் நிறைந்த ஒரு நாடாக ஆக்குவானாக. மேலும் அனைத்துவிதமான தீங்குகள், நோய்களை விட்டும் பாதுகாப்பானாக.
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/MED/2020/010
01.08.2020 / 10.12.1441
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
கொவிட் 19 இன் தாக்கம் உலகளாவிய ரீதியில் முழுமையாக நீங்காத ஒரு சூழலில் இன்று சனிக்கிழமை தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வருடம் குறிப்பிட்ட அளவு மக்களே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டிருப்பதால் எமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிருந்தும் ஹஜ்ஜுக்காக செல்ல நாட்டமிருந்த பலருக்கும் அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயமாக அதற்காக நாட்டம் வைத்த அனைவருக்கும் மற்றும் ஏனையோருக்கும் அல்லாஹுதஆலா பூரண நன்மைகளைத் தந்தருள வேண்டுமென இத்தினத்தில் பிராத்தனை செய்கின்றோம்.
இன்றைய நாளை சிறந்த முறையில் கழிப்பதுடன் இன்று செய்ய வேண்டிய சுன்னத்தான அமல்களான தக்பீர் சொல்லுதல், குளித்தல், புத்தாடை அணிதல் அல்லது தம்மிடம் காணப்படும் சிறந்த ஆடையொன்றை அணிதல், வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளல், உணவருந்தாமல் தொழுகைக்கு சமூகமளித்தல், பெருநாள் தொழுகையை நிறைவேற்றுதல், வசதியுள்ளவர்கள் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல் போன்ற அமல்களில் ஈடுபட வேண்டும்.
இத்திருநாளில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவு படுத்தாமல் இருக்க முடியாது. அக்குடும்பத்தின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். இம்முன்மாதிரிகளை நாம் ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப வாழ்கையில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
இறைவனின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தை பறைசாட்டும் உழ்ஹிய்யாவுடைய அமலை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்ட வகையிலும் நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன்வர வேண்டும்.
அதே நேரம் தியாகத் திருநாள் கற்றுத் தரும் தியாக மனப்பாங்கை எம்மில் வளர்த்தல், மார்க்க விடயங்களில் பேணுதலாக இருத்தல், ஏனையோருக்கு உதவிகள் செய்தல், அனைவருடனும் அன்பாக பழகுதல், சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளல் போன்ற நல்ல பண்புகளையும் எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டு மட்டத்திலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணைபுரிய வேண்டுமெனவும் உலகளாவிய முஸ்லிம்கள் பொதுவாகவும், இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்! ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Ref No. ACJU/PRO/2020/004
2020.07.29 (07.12.1441)
ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்
கொவிட் 19 வைரஸின் தாக்கம் மற்றும் நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வருட ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/MED/2020/009
24.07.2020 (1441.12.02)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி
ஹெம்மாதகமையைச் சேர்ந்த அஷ்ஷைக் முஹம்மத் லெப்பை ஆலிம் (கபூரி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகளில் பங்காற்றிய அஷ்ஷைக் முஹம்மத் லெப்பை ஆலிம் (கபூரி) அவர்கள் நேற்று (23.07.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹெம்மாதகமைக் கிளையின் உறுப்பினராக நீண்ட நாட்களாக பணிபுரிந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்கு பணியாற்றியவராவார். அன்னாரின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Ref No. ACJU/PRO/2020/003
15.07.2020 (23.11.1441)
இவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.
உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.
இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வதுடன், எமது நாட்டில் நடைமுறையிலுள்ள விலங்குச் சட்டம் (Animal Act No.29 of 1958) கூறும் விடயங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.
கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வருடம் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றும் பொழுது, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும்.
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஒடட்கம் கிடைக்கப்பெறாமையினால் ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும்; அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது. ஓர் ஒட்டகம் அல்லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் மாத்திரமே கூட்டுச்சேர முடியும்.
பிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமைகள் வித்தியாசப்படுவதனால், வீண் சர்ச்சைகள் எதுவுமின்றி தத்தமது பிரதேசங்களில் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியுமா என்பதை, தமது பிரதேச ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் நிர்வாகம்;, ஏனைய முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்து, பொருத்தமான முடிவொன்றை எடுத்துக் கொள்ளுமாறும், அம்முடிவிற்கு ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
உழ்ஹிய்யாக் கொடுப்பது சிரமம் எனக் காணப்படும் பிரதேசங்களில் உள்ளவர்கள், அதனை நிறைவேற்ற உறுதி கொண்டால், பொருத்தமான வேறு பிரதேசங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:
பள்ளிவாயல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
வஸ்ஸலாம்
அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவி பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜுமுஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணைய தளமான www.acju.lk இல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.
ACJU/MED/2020/008
10.07.2020 (18.11.1441)
ஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பெயரை மாசுபடுத்தும் வகையில் பல பிழையான தகவல்களை மக்கள் மயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரல் நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு அறியக் கிடைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஏனைய சில விடயங்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை பிழையாக தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு பொதுமக்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு செயற்பாடு நடைபெற்று வருகின்றது.
பொறுப்பற்ற இச்செயற்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் பிழையான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
07.07.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவும் மாளிகாவத்தை பிரஜா பொலிஸ் நிலையமும் இணைந்து மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு அருகாமையில் பொதுமக்களுக்கான முகக் கவசம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது பொது மக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன் முகக்கவசங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/MED/2020/007
06.07.2020 (14.11.1441)
சம்பத் வங்கிக் கணக்குகளை நீக்குமாறு ஜம்இய்யா கூறவில்லை
கடந்த வாரம் தெஹிவல பகுதியில் உள்ள சம்பத் வங்கிக் கிளையொன்றில் இடம் பெற்ற விவகாரம் தொடர்பில் ஜம்இய்யா தனது மனவருத்தத்தை தெரிவிக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இணைந்து சுமூகமாக தீர்த்துக் கொள்வது சிறந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பத் வங்கிக் கணக்குகளை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது எனும் தலைப்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றது.
முஸ்லிம்களின் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நாட்டில் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்குமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்பில் ஆங்காங்கே செய்திகள் வெளிவரும் போது அவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் www.acju.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக உறுதி செய்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களிடம் ஜம்இய்யா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்
சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் நேற்று 30.06.2020 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இஸ்லாம் தொடர்பான விடயங்கள், சமூக நல்லிணக்கத்தில் மதத்தலைவர்களின் வகிபாகம் என பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அல்குர்ஆன் சிங்கள மொழி மூலமான விரிவுரை மற்றும் ஜம்இய்யாவின் வெளியீடுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் உற்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா