22.04.2020

28.08.1441

அன்புடையீர்,


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே: சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


மரணித்த ஒரு முஸ்லிமின் உடலை எந்நிலையிலும் தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.


ஒரு முஸ்லிம் மரணித்த பின்னர், அந்த உடலை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, கௌரவமான முறையில் முஸ்லிம்களது மையவாடியில் அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மீது பர்ழு கிபாயாவாகும். மேற்குறித்த கிரியைகளில் ஏதேனும் ஒன்று மார்க்கம் அனுமதித்த காரணம் இன்றி நிறைவேற்றப்படாவிட்டால், மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.


அதனடிப்படையில், மரணித்தவரின் உடலை கட்டாயமாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயமானதொன்றாக, நபி ல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரை, நான்கு மத்ஹப்களின் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் ஏகோபித்த இஸ்லாமிய தீர்ப்பாகக் கருதப்படுகின்றது. கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் மரணிப்பாராயின் அவரது உடலைக் கூட நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலம் ஒன்றை அடைவது சாத்தியமற்ற நிலையில், குறித்த உடலை பாரம் ஒன்றை கட்டி கடலுக்குள் இறக்கி விட வேண்டும். இந்த விதிவிலக்கை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.
அந்த வகையில் Covid-19 இன் காரணமாக மரணிப்பவரின் உடலை அடக்கம் செய்வது கட்டாயமாகும். இவ்விடயத்தில் எவராலும், இந்நிலைப்பாட்டில் இருந்து மாறுபட முடியாது, ஏனெனில், இது புனித அல்-குர்ஆனின் கட்டளையாகும்.


“பின், அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.” (சூறா அபஸ: 21)


“இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;. அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம். இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம்.” (சூறா தாஹா: 55)


மேலும், ஒருவர் உயிர் வாழும் பொழுது எவ்வாறு கண்ணியப்படுத்தப்படுகின்றாறோ, அவர் இறந்த பின்னரும் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதனை இறைத் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று வலியுறுத்துகின்றது:


“மரணித்தவரின் எலும்பை முறிப்பது, உயிருள்ள நிலையில் அதை முறிப்பதைப் போன்றதாகும்.” (ஸூனன் அபூதாவுத்: 3207).


இதனடிப்படையில், உடலின் எப்பாகத்துக்கேனும் (தகனம் அல்லது முறித்தல்) போன்றவற்றின் மூலம் தீங்கு விளைவிப்பது, இஸ்லாத்தின் போதனைகளின்படி ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.


ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது, அவரது கை கால்கள் போன்ற உறுப்புக்கள் துண்டிக்கப்படுமாயின் அவற்றிலும் இச்சட்டமே பேணப்படல் வேண்டும்.


இவற்றின் பின்னணியில், அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பதானது, இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு, அவர்களின் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கு முரணான ஒரு விடயமாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்                

செயலாளர், பத்வாக் குழு                        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா          

      

 அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

 மேற்பார்வையாளர் - பத்வாக் குழு

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

 தலைவர்,    

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா