2017.04.07 / 1438.07.09

சமூக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவோம்!

இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த சில காலங்களாக பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. இதன் தொடராகவே விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினையும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இம்மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்குகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண பலரும் தமது பங்களிப்பினை செய்து வருகின்றனர். இவர்களுடன் ஒத்துழைத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள 2017.04.01 ஆம் திகதி அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசியல் சார்பற்ற ஒரு சபை என்பதால் கடந்த காலங்களில் சமூக பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அனைவருடனும் ஒத்துழைப்புடன் பக்கச் சார்பின்றி நடுநிலையாக செயற்பட்டது போன்றே இவ்விடயத்திலும் செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் சமய, அரசியல், சிவில் அமைப்புகளும் இயக்கங்களும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில் ஒத்துழைப்புடன் ஒற்றுமையாக செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அருள்பாலிப்பானாக.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா