19.03.2020

23.07.1441

 

ஜுமுஆவுடைய நேரத்தைக் கண்ணியப்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோம்

கொரோனா வைரஸ் (COVID19) தற்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று கூடுவது இந்நோய் இன்னும் பரவுவதற்கான பிரதான காரணியாகும் என்று உலக சுகாதார மையம் பிரகடனப்படுத்தியுள்ளதால் அரசாங்கம் மக்கள் ஒன்று கூடுவதை முற்றாகத் தடை செய்துள்ளதுடன், ஒன்று கூடுவது சட்டத்திற்கு முரணானது எனவும், மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

“தனக்கு தீங்கு விளைவித்துக்கொள்வதும் பிறருக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது” என்ற ஹதீஸ், பிக்ஹ் கலையில் மிக முக்கிய அடிப்படையாகும்.

 

மேலும், மார்க்கத்தில் ஜுமுஆ மற்றும் ஜமாஅத் தொழுகைகளை விடுவதற்கான தகுந்த காரணங்களாக நோய், பயம், பிரயாணம், நோயாளியைப் பராமரித்தல், வேகமான காற்று, மற்றும் மழை போன்ற பல விடயங்களை நிபந்தனைகளுடன் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

இவ்வாறான காரணங்களுக்காக ஜமாஅத் மற்றும் ஜுமுஆத் தொழுகைகள் விடுபடும் போது, அதனை நிறைவேற்றியதற்குரிய நன்மை கிடைக்கும் என்பது ஹதீஸின் கருத்தாகும்.

 

மேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு ஜுமுஆ தொழுகைக்காகவோ ஐவேளைத் தொழுகைகளுக்காகவோ மஸ்ஜிதில் ஒன்று சேர்வதைத் தவிர்த்து, தாம் இருக்கும் இடங்களில் தொழுது கொள்ளும்படி வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் அறிவித்துள்ளதை நாம் அறிவோம்.

 

மேலும், வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித நாளாகும். இந்நாளில், ஸ_ரத்துல் கஹ்ப் ஓதுதல், நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல், மற்றும் துஆ கேட்டல் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது முக்கிய அமல்களாகும்.

 

எனவே, நாளை வெள்ளிக் கிழமை, வழமை போன்று முஸ்லிம்கள் தமது வியாபார ஸ்தலங்களை மூடி, ழுஹ்ருடைய அதான் கூறியதும் தமது வீடுகளில் அல்லது தாம் இருக்கும் இடங்களில் ழுஹ்ருடைய நான்கு ரக்அத்கள் மற்றும் அதன் முன் பின் சுன்னத் தொழுகைகளை நிறைவேற்றி, இக்கொடிய நோயின் தீங்கிலிருந்து உலக மக்கள் அனைவரையும் குறிப்பாக இந்நாட்டு மக்களையும் பாதுகாக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

 

குறிப்பு: இந்நாளில் ஒரு நேரம் உள்ளது, அதில் கேட்கப்படும் துஆ கபூல் செய்யப்படும் என்று நபி  ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

இவ்வழிகாட்டலை சகல முஸ்லிம்களும் கடைபிடிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறோம்.

 

 

அஷ்-ஷைக் எம். எல். எம். இல்யாஸ்

செயலாளர்

பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15.03.2020

19.07.1441

 

நாட்டில் COVID 19 எனும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்கள்

1-            ஜுமுஆ மற்றும் ஜவேளைத் தொழுகை உட்பட அனைத்து ஒன்று கூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொது இடங்களில் தவிர்ந்துகொள்ளல்.

2-            உரிய நேரத்திற்கு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் சொல்ல வேண்டும். அதானின் முடிவில் “ஸல்லூ பீ ரிஹாலிகும்” (நீங்கள் இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளுங்கள்) (ஸஹீஹு முஸ்லிம் - 697) என்று அறிவித்தல்.

3-            மஸ்ஜிதில் இருக்கும் இமாம் மற்றும் முஅத்தின் போன்றவர்கள் மஸ்ஜிதிலேயே ஜமாஅத்தாகத் தொழுதுகொள்ளல்.

4-            வீட்டில் உள்ளவர்கள் ஐவேளைத் தொழுகைகளை உரிய நேரத்தில் ஜமாஅத்தாகத் தொழுதல். முன் பின் சுன்னத்தான தொழுகைகள் மற்றும் ஏனைய தஹஜ்ஜுத், ழுஹா, சதகா, நோன்பு போன்ற நபிலான வணக்கங்களில் கூடிய கவனம் செலுத்துவதோடு பாவமான காரியங்களிலிருந்து விலகி நிற்றல்.

5-            பிள்ளைகள் விடுமுறையில் இருப்பதனால், அவர்கள் சுற்றுலா செல்லுதல், பாதையில் கூடி விளையாடுதல் போன்ற விடயங்களைத் தவிர்த்து, குர்ஆன் ஓதுதல், துஆ, மற்றும் கற்றல், கற்பித்தல் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபடுத்துவதில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தல்.

6-            ஒருவர் மற்றவரை சந்தித்தால் ஸலாம் கூறுவதும் முஸாபஹா செய்வதும் சுன்னத்தாகும். எனினும், COVID 19 என்ற நோய் கைகள் மூலம் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது என்று வைத்திய நிபுணர்கள் கருதுவதால், ஒருவர் மற்றவரை சந்திக்கும் பொழுது முஸாபஹா செய்வதைத் தவிர்த்து ஸலாம் சொல்வதுடன் போதுமாக்கிக் கொள்ளுதல்.

7-            ஜனாஸாவின் கடமைகளை மார்க்க விதி முறைகளைப் பேணி நிறைவேற்றுவது எம்மீதுள்ள கடமையாகும். இக்கால சூழ்நிலையை கவனத்திற்கொண்டு அடக்கம் செய்யும் விடயத்தில் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகளுடன் சுருக்கிக்கொள்ளல்.

8-            COVID 19  என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாக சுகம் கிடைக்க பிரார்த்திப்பதுடன், அவர்களுடன் கனிவோடு நடந்துகொள்வதும், எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதும் எமது கடமையாகும்.

9-            இக்கொடிய நோய் இந்நாட்டை விட்டும், உலக நாடுகளை விட்டும் முழுதாக நீங்க அனைவரும் அல்லாஹ்விடம் மன்றாடுதல்.

10-          சமூக வலைத்தளங்களில் மார்க்கத்திற்கு முரணான மற்றும் ஊர்ஜிதமற்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்தல்.

குறிப்பு: தேசிய சுகாதார துறையின் வேண்டுகோளுக்கிணங்கவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை கவனத்திற் கொண்டும், சர்வதேச உலமாக்களினதும், உலமா அமைப்புக்களினதும் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் மேற்படி அறிவுறுத்தல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கின்றது.

 

அல்லாஹ்வே எமக்குப் போதுமானவன். அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15-03-2020

முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலகசுகாதார ஸ்தாபனமும்,  இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்று கூடும் சந்தாப்;பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடல்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்;லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.   

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது.  

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FRL/2020/07-223

 

13.03.2020

17.07.1441

 

கொரோனா வைரஸ் (COVID 19) பரவுவதைத் தடுக்க குனூத் அந்-நாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளிலும் ஒரு மாத காலத்திற்கு சுருக்கமாக ஓதி வருவோம்

 

தற்பொழுது பல நாடுகளில் கொரோனா வைரஸ் (COVID 19) பரவி  அதன் மூலம் மக்கள் மிகவும் சிரமப்பட்டு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு இருப்பதையும், குறிப்பாக எமது நாட்டிலும் குறித்த வைரஸ் பரவலாம் என்ற அச்சம் இருப்பதையும் நாம் அறிவோம்.

அல்லாஹு தஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது குனூத் அந்-நாஸிலா ஓதியுள்ள விடயம் பல ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூத் அந்-நாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் (COVID 19) பரவலாம் என்று அஞ்சப்படுவதால் அடுத்து ஒரு மாத காலத்திற்கு ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அந்-நாஸிலாவை ஓதுவதற்கு மஸ்ஜித்களில் ஏற்பாடு செய்யுமாறும், மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூத் அந்-நாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை மாத்திரம் ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 

(اللَّهُمَّ إِنِّا نَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ               (سنن أبي داود

(اللهمَّ إِنِّا نَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ   (صحيح البخاري

(إِنِّا نَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ         (صحيح مسلم

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்          

செயலாளர், பத்வாக் குழு     

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FRL/2020/06-222

12.03.2020

16.07.1441

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் எச்சரிக்கையாக நடந்து கொள்வோம்

இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும்.“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன் என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக.” (அத்-தௌபா : 51) என்று அல்லாஹுதஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான்.

 

பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹுதஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹுதஆலா எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். அதற்கான சில துஆக்களை கற்றுத்தந்துள்ளார்கள்.

 

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه و سلم كان يقول " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ " (سنن أبي داود : 1554)

“யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக் கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று அனஸ் றழியல்லாஹு அன்ஹு  அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனனு அபீ தாவூத் : 1554)

 

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ  (سنن الترمذي :3388)

“அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய பெயரைக் கூறுவதுடன் இந்தப் பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் தீங்கிழைக்க முடியாது. அவன் எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.” (ஸுனன் அத்-திர்மிதி : 3388)

 

மேற்படி துஆக்களின் கருத்துக்களை நாமும் விளங்கி தினமும் ஓதி வருவதால், இப்படியான கொடிய நோய்களிலிருந்து அல்லாஹுதஆலா எம்மைனைவரையும் பாதுகாப்பான். மேலும், “கொள்ளை நோய்கள் ஏற்படும் போது அப்படியான இடங்களுக்குச் செல்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளதோடு, ஒருவர் இருக்கும் இடத்தில் இப்படியான நோய்கள் ஏற்படும் போது அந்த இடத்தை விட்டும் ஓட வேண்டாம்” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

 

தற்பொழுது பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால், அதனைக் கட்டுப்படுத்த ஒவ்வவொரு நாடும் தற்பாதுகாப்பு முயற்சிகளைச் செய்து வருகின்றன. அதேபோன்று எமது நாட்டிலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம்.  இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.

 

அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து முன் எச்சரிக்கையாக இருந்து கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு முஸ்லிம்களையும் குறிப்பாக மஸ்ஜித் நிர்வாகங்களையும் வேண்டிக் கொள்கின்றது. 

 

  • ஒவ்வொருவரும் இத்தகைய வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுதல்.

 

  • பாவங்களை விட்டும் தன்னைத் தூரமாக்கி, தாம் செய்த பாங்களுக்காக தொளபா இஸ்திக்பார் செய்தல்.

 

  • மஸ்ஜித், அதைச் சூழவுள்ள பகுதிகள் மற்றும் தாம் வசிக்கும் இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளல்.

 

  • மஸ்ஜிதுடைய ஹவ்ழ்களில் வழூ செய்வதைத் தவிர்த்துது தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தல் அல்லது வீட்டிலிருந்தே வுழூ செய்து கொண்டு மஸ்ஜிதுக்கு செல்லுதல். 

“வுழூவை அழகான முறையில் செய்து தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் சென்றால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்களுக்கும் ஒரு பாவம் மன்னிக்கப்பட்டு, ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

 

  • எதிர்வரும் வாரங்களில் ஜுமுஆக்களை 20-25 நிமிடங்களுக்குள் சுருக்கிக் கொள்ளல்.

 

  • சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் அறிவுறுத்தலின் படி இது ஒரு சாதாரண நோயாகும். முகப் பிரதேசங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமும், மூக்கு, வாய் போன்ற துவாராங்களை அடிக்கடி தொடாமல் இருப்பதன் மூலமும், தும்மல் விடும் போது மூக்கு, வாயை மூடிக் கொள்வதன் மூலமும் இந்நோயைத் தடுத்துக் கொள்ளலாம்.       

 

 “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தும்மினால் அவர்களது முகத்தை கையினால் அல்லது பிடவையினால் மூடிக்கொள்வார்கள், இன்னும் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.” (ஸுனன் அத்-திர்மிதி)

 

 

  • மஸ்ஜித் மற்றும் வசிக்கும் இடங்களை  காற்றோட்டம் உள்ளதாகவும் சூரிய வெளிச்சம் வரும் வகையிலும் ஆக்கிக் கொள்ளல்.

 

  • தடுமல், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் சன நெரிசல் உள்ள இடங்களை தவிர்த்தல்.

 

  • தடுமல், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோயின் அறிகுறிகளை, குறிப்பாக வயோதிபர்கள், தொடர் நோய் உள்ளவர்கள் உணரும் போது உடனடியாக வைத்தியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன் பிரகாரம் நடந்து கொள்ளல்.

 

  • ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளல்.

 

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - பத்வாப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

1441-07-02

2020-02-27

இந்நாட்களில் உலகின் பல பாகங்களிலும் பல்வேறு விதமான அனர்த்தங்கள் பரந்துகொண்டிருக்கின்றன. பயங்கரமான ஆட்கொல்லி நோயால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே இந்தியாவில் ஏற்பட்டுள்ள இன வன்செயலால் பெரும்தொகையான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வரட்சியும் கடுமையாகவே இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலமைகளை மாற்றியமைக்க எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவால் மாத்திரமே முடியும் அவனிடமே நாம் இந்நிலைகளை மாற்றியமைக்க மன்றாட வேண்டியுள்ளது.

எனவே நாளை ஜும்ஆ கொத்பாவில் இந்த அசாதாரண நிலமைகள் நீங்கவும் வரட்சி நீங்கி செழிப்பு ஏற்படவும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்ட நிலமைகள் மாறவும் துஆக்களில் ஈடுபடுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

    

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் டாக்டர் வின்யா அரியரத்ன தலைமையிலான சர்வோதயா அமைப்பின் குழுவுடன் நேற்று (17.02.2020) அன்று "மதங்களுக்கு இடையிலான உறவு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பது" எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இஸ்லாம் தொடர்பான ஐயங்களுக்கான தெளிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் ஆகியோர் உட்பட  இன்னும்  பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டம் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் அம்பரபொல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா