2016.03.02 (1437.05.21)

ACJU/NGS/03-16/001

இஸ்லாம் இனிமையான மார்க்கமாகும். அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். அதன் போதனைகள் அனைவரையும் கவரக்கூடியவை. அது மென்மை, விட்டுக்கொடுப்பு, தயாள குணம், சகிப்புத்தன்மை, இங்கிதம் முதலான அருங் குணங்களை போதிக்கும் மார்க்கமாகும். மாற்றுக்; கருத்துடையோரோடு மாத்திரமன்றி, முஸ்லிம் அல்லாதவர்களுடனும் நளினமாகவும் பண்பாடாகவும் நடந்து கொள்ளுமாறும் விவேகத்துடன் அழகிய உபதேசத்தைக் கொண்டு அழைக்குமாறும் கட்டளையிடுகின்ற மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

மென்மையாகவும் நளினமாகவும் உபதேசம் புரியுமாறும் அழைப்பு விடுக்குமாறும் வழிகாட்டும் இஸ்லாம், எல்லா விடயங்களிலும் மென்மையையும்; நளினமான போக்கையும் விலியுறுத்துகிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மார்க்கம் அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான மார்க்கமாகும்.” (முஸ்னத் அஹ்மத் : 5/266)

மற்றொரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “நிச்சயமாக இஸ்லாம் எளிதானது. இம்மார்க்கத்தை யார் (தன் மீது) சிரமமானதாக ஆக்கிக் கொள்கின்றாரோ அது அவரை மிகைத்துவிடும்.” (ஸஹீஹுல் புகாரி- ஹதீஸ் எண்: 39)

எனவே, நாம் எமது சகல நடவடிக்கைகளிலும் குறிப்பாக குத்பாப் பிரசங்கங்கள், உரைகள் முதலான தஃவாப் பணிகளின் போதும் நளினமான போக்கை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். நளினம், அல்லாஹ் விரும்பும் ஒரு நற்குணமாகும்.

ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைப் பார்த்து,
" إن الله يحب الرفق في الأمركله "
“ஆயிஷா! நிச்சயமாக எல்லா விடயங்களிலும் மென்மையாக நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி- ஹதீஸ் எண்: 6024)

தானே இரட்சகன் என்று வாதாடிய பிர்அவ்னிடம் சென்று மென்மையாக பேசுமாறு நபி மூஸா, நபி ஹாரூன் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகிய இருவருக்கும் அல்லாஹ் கட்டளையிட்டான். அது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
;" فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا "
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையாகப் பேசுங்கள்;.” (ஸுரா தாஹா: 44)

நபிமார்கள் தங்களது தஃவா களங்களில் மிக மோசமான எதிர்ப்புகளை சந்தித்தபோதும் மிகவும் பண்பாடாக, நளினமாக நடந்து கொண்டார்கள். அதற்கு பின்வரும் நிகழ்வு சிறந்த சான்றாகும்: இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நோக்கி அவரது தந்தை, “நீர் இந்தப் பணியிலிருந்து விலகிக் கொள்ளாவிடின் உம்மைக் கல்லால் எறிந்து கொன்று விடுவேன். இனி நீர் என்னை விட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடு” என்று எச்சரிக்கை விடுத்தபோது இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்,
" قال سلام عليك سأستغفرلك ربي إنه كان بي حفيا "
“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழைபொறுக்கத் தேடுவேன்;. நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” (ஸுரா மர்யம்;: 47) என்று பதிலளித்ததை அல்குர்ஆன் பதிந்து வைத்திருக்கிறது.

அவ்வாறே நபி நூஹ், நபி ஹ_த், நபி ஸாலிஹ் மற்றும் நபி ஷுஐப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் தமது சமூகத்தவர்களிடம் தஃவாப் பணிகளை மேற்கொண்டபோது எந்தளவு தூரம் மென்மையாகவும் நளினமாகவும் நடந்து கொண்டார்கள் என்பதை ஸ_ரதுல் அஃராப் விரிவாக விளக்குகிறது.

முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தம்மை எதிர்த்த முஷ்ரிக்குகள், நயவஞ்சகர்களுடன் எவ்வளவு விட்டுக்கொடுப்புடனும் நளினமாகவும் இதமாகவும் நடந்துள்ளார்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் பரவிக் கிடக்கின்றன.

இஸ்லாமிய அழைப்புப் பணியின் அடிப்படை ஹிக்மா(حكمة) எனும் விவேகமும் அழகிய உபதேசமுமாகும். அல்-குர்ஆன் அது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது:
" ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة "
“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!” (ஸுரா அந்நஹ்ல்: 125)

தஃவா களத்தில் பணியாற்றுகின்றபோது சிலவேளை விவாதிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் மிகவும் அழகிய முறையில் அதை மேற்கொள்ளுமாறு அல்குர்ஆன் எமக்கு வழிகாட்டுகிறது.
"وجادلهم بالتي هي أحسن "
“இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!” (ஸுரா அந்-நஹ்ல்: 125)

தஃவா களத்தில் பணியாற்றுகின்ற போது மென்மையையும் நளினப் போக்கையும் இழந்து விட்டால் சிலவேளை எமக்கு நெருக்கமானவர்களைக் கூட நாம் இழக்க வேண்டி ஏற்படும். நபியவர்களுக்கு அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொண்டீர்;;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;.” (ஸுரா ஆலு இம்ரான்: 159)

நளினம் இழக்கப்படும்போது நன்மைகள் அனைத்தையும் இழக்க வேண்டி நேரிடும். பின்வரும் நபிமொழி இதற்கு நல்ல சான்றாகும்:
عن جريرعن النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرم الخير (مسلم : 2592)
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்லல்;லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 2592)
“மென்மையை இழந்தவர் நன்மைகள் அனைத்தையும் இழந்தவர் ஆவார்.” (முஸ்லிம்)

எனவே, நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் தமது தஃவா நடவடிக்கைகளில் குறிப்பாக, குத்பாப் பிரசங்கங்களில் நபிமார்களின் தஃவா அணுகுமுறையையே கையாண்டு மக்களை அணுக வேண்டும்.

இஸ்லாத்துக்கு எதிரான தீய சக்திகள், பிழையான கொள்கையுடையோர் பற்றி குத்பாப் பிரசங்கங்கள் மற்றும் சொற்பொழிவுகளில் மக்களுக்கு தெளிவுபடுத்தும்போது இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணி சிறந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், நாவைப் பேணி நல்ல வார்த்தையைக் கூறுவதே உண்மையான பிரசாரகரின் பண்பாகும்.

சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பிறர் முன்வைக்கும்போது நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணியவாறும் அவர்களுக்கு தெளிவுகளை வழங்க வேண்டும். மோசமான, மாற்று மதங்களை அகௌரவப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதை விட்டும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் எதிரிகள் ஏதேனும் சிரமங்களில் சிக்கிக் கொள்கின்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது. மாறாக அனைத்து மக்களுக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்திக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனைகளில் ஒன்றாகும். இது குறித்து மக்களுக்கு அறிவூட்டுவது அவசியமாகும்.

தவிரவும் சாதாரண பொது மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையான மொழிநடையில் சுருக்கமாக குத்பாக்களை நிகழ்த்த வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

عن أنس – رضي الله عنه - قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: (يسِّرواولاتعسِّروا،وبشِّرواولاتنفِّروا) متفق عليه.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்;லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்ததாக அனஸ் பின் மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “(மக்களிடம்) நளினமாக நடந்து கொள்ளுங்கள்;. (அவர்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்;. நன்மாராயம் கூறுங்கள் (எச்சரிக்கும் போதுகூட) வெறுப்பூட்டி விடாதீர்கள்.” (புகாரி, முஸ்லிம்)
இவ்வகையில் எமது தஃவா நடவடிக்கைகள் அமையுமாக இருந்தால் நிச்சயமாக அது பயன்மிக்கதாக அமையும். அத்தோடு பின்வரும் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

1. எமது பிரசாரங்களை அல்லது மார்க்க விளக்கங்களை அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு மேற்கொள்ளுதல்.
2. பிழையான கருத்துடையோர் தமது பிழைகளிலிருந்து மீள வேண்டும் என்ற அவாவோடு பிரார்த்தனை செய்தல்.
3. அத்தகையவர்களோடு எப்போதும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுதல்.
4. தவறுகளைத் திருத்துவதே நோக்கமன்றி தவறிழைப்போரை குத்திக் காட்டுவதோ கடுமையான வார்த்தைகள் மூலம் கண்டிப்பதோ நோக்கமாக இருக்கக் கூடாது.

எனவே, எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் சத்தியத்தை விளங்கி அதன்படி நடக்கவும் அதன் வழியில் மென்மை, நளினம் என்பவற்றைக் கடைப்பிடிக்கவும் அருள் புரிவானாக!


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும். இந்தவகையில் சமூக உறவுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை.

மதங்களுக்கிடையில் வீண்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் விதத்தில் முஸ்லிம்கள் செயற்படக்கூடாது என்றும்; அடுத்தவர்களின் மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

இஸ்லாத்திற்கு எதிரான செயற்திட்டங்கள் எந்த சக்திகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்கள் செயற்படும் பாணியில் அதை எதிர்கொள்வதை இஸ்லாம் ஏற்கவில்லை. தீமையை நன்மையைக் கொண்டு தடுக்குமாறும் தீமையை சுட்டிக்காட்டும் போது மென்மையான முறையில் பேசுமாறும் பிறமதத்தவர்களது உள்ளங்கள் புண்படும் விதத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

பிறமதங்களை நிந்தனை செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம் பிற மதகுருமார்களுடன் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும் வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகளைப் புறக்கணிக்கும் விதத்தில் எழுதுவதையும் பேசுவதையும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எந்தவொரு முஸ்லிமும்; பிற சமூகங்களது சமய நடவடிக்கைகளையோ மத குருமார்களையோ இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவதை நாம் கண்டிப்பதுடன் இது இஸ்லாமிய நடைமுறைகளுக்கும் போதனைகளுக்கும் முரணானது என்பதையும் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் புனித நூலான அல்-குர்ஆனையும் கொச்சைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் கண்டிப்பதோடு, இவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அது எம்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

அத்துடன் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றைத் தடுக்க அரசு முனைப்;புடன் செயற்பட வேண்டும் என்றும், முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை முஸ்லிம் சமயää சமூக தலைமைகளுடன் ஆலோசிப்பதன் மூலமே சிறந்த முடிவுகளை அடைய முடியுமென்பதையும் அரசுக்குக் கூறிக்கொள்கின்றோம்.

All Ceylon Jamiyyathul Ulama - ACJU
All Ceylon Young Muslim Men’s Association Conference - YMMA
Sri Lanka Jama'athe Islami – SLJI
Sri Lanka Shariee’ah Council
All Ceylon Thowheedh Jama’ath –ACTJ
Sri Lanka Islamic Center
World Assembly of Muslim Youth – WAMY
Jama'ath Ansaris Sunnathil Mohammadiyya - JASM
All University Muslim Students Association - AUMSA
Jama’athus Salama
International Islamic Relief Organization- IIRO
Association of Muslim Youth of Sailan (Sri Lanka) - AMYS
Muslim Council of Sri Lanka - MCSL
National Shoora Council – NSC
Colombo District Masjid Federation - CDMF
Al Hikma Welfare Association
All Ceylon Muslim Educational Conference - ACMEC
All Ceylon Union of Muslim League Youth Fronts - ACUMLYF
Jama’ath ut Thowheed
Rapid Response Team - RRT
Sri Lanka Muslim Media Forum – SLMMF
Sri Lanka Islamic Student’s Movement
Advocacy & Reconciliation Council

11.10.2016 (09.01.1438) 

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!


இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.
அசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்லாம்.
தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் :


(اللَّهُمَّ اسْقِنا غيثًا مغيثًا مريئًا مريعًا نافعاً غَيْرَ ضارٍ، عاجِلاً غَيْرَ آجِلٍ" - رواه أبو داود ((1169"
(اللهم أغثنا ، اللهم أغثنا ، اللهم أغثنا - " رواه مسلم (897"
(اللهم اسق عبادك ، وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت - "رواه أبو داود (1176"

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

12.09.2016 (10.12.1437)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து!

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.

மகிழ்ச்சிப் பிரவாகத்தால் உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் தக்பீர் முழங்கும் தியாகத்திருநாள் இன்றாகும். ஓரிறைக் கொள்கையை எடுத்துக் கூறுவதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகங்கள் உலகம் உள்ளவரை நினைவுபடுத்தப்படும். இவை மனித சமூகத்துக்கு சிறந்த முன்மாதிரிகளாகும். அதனையே நாமும் இத்தினத்தில் நினைவு படுத்துகின்றோம்.

இத்தியாகத்திருநாளில் எமது விசுவாசத்துக்கு உரமூட்டிக்கொள்ளவும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தியாக உணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது" - (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடும் ஒற்றுமையுடனும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக!

மேலும் எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக!

தகப்பலல்லாஹு மின்னாவமின்கும்! ஈத் முபாரக்!

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

31.08.2016 / 27.11.1437 

திஹாரி பதற்ற நிலைமையைச் தணிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முயற்சி. 

திஹாரி பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள அபூபக்ர் மஸ்ஜிதில் குத்பா ஆரம்பிக்கப்பட்டமை சம்பந்தமாக, திஹாரி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தாருக்கும் அபூபக்ர் மஸ்ஜிதைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் 2016.08.26 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஏற்பட்ட கவலைக்கிடமான நிகழ்வை அடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் கொண்ட விஷேட குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரிக் கிளை உறுப்பினர்கள், திஹாரி பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அபூபக்ர் மஸ்ஜித், ஜாமிஉத் தவ்ஹீத் மஸ்ஜித் நிருவாகத்தினர் ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்து விரிவாகவும் சுமுகமாகவும் கலந்துரையாடல்களை நடத்தியது.

நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக விபரங்களைக் கேட்டறிந்து ஊரின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக சில இணக்கப்பாட்டுக்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. மேற்படி சம்பந்தப்பட்டவர்களைத் தலைமையகத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மாணிக்கபட்டுள்ளது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

10.12.1436 / 24.09.2015

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.

மகிழ்ச்சிப் பிரவாகத்தால் உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் தக்பீர் முழங்கும் தியாகத்திருநாள் இன்றாகும். ஓரிறைக் கொள்கையை எடுத்துக் கூறியமைக்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சந்தித்த இன்னல்கள் எத்தனையெத்தனை? தான் கொண்ட நம்பிக்கையின் உண்மைத்துவத்தை வெளிப்படுத்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகங்கள் எத்தனையெத்தனை? உலகம் உள்ளவரை நினைவுபடுத்தப்படும் இவை மனித சமூகத்துக்கு முன்மாதிரிகளாகும். அதனையே நாமும் நினைவு  படுத்துகின்றௌம். 

இத்தியாகத்திருநாளில் எமது விசுவாசத்துக்கு உரமூட்டிக்கொள்ளவும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தியாக உணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள்புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

மேலும் இத்தருணத்தில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. ஒற்றுமையெனும் கயிற்றைப் பிடித்து தீன்பணியில் ஈடுபடுவோமாக.

“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது" - (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக! மேலும் எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக!

தகப்பலல்லாஹு மின்னாவமின்கும்! ஈத் முபாரக்!

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

20.10.2015 (06.01.1437)

மீள் குடியேற்றம் தொடர்பான இரண்டாம் கட்ட செயற்திட்டக் கலந்துரையாடல்!

நேற்று (19.10.2015) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தஃவா மற்றும் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜம்இய்யாவின் கௌரவ தலைவார் தலைமை தாங்கினார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் நிறைவு பெறும் இத்தருணத்திலும் அகதி வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களின் மீள் குடியேற்றத்தை பூரணப்படுத்தி நல்லதொரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றை ஜம்இய்யா குறித்த அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 24,898 முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டு புத்தளம், குருணாகல், நீர்கொழும்பு, பாணந்துரை மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று குடியமர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் மீள் குடியேறிய போதிலும் போதிய அடிப்படை வசதிகளின்றி மிகச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறனர். மீள் குடியேறிய மற்றும் சிலர் அதே காரணங்களுக்காக மீண்டும் திரும்பி விட்டனர். 

இந்நிலையில் முதற் கட்டமாக மீள் குடியேறிய மக்களுக்கான முழுமையான வசதிகளை செய்து கொடுக்குமாறு வேண்டி நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், மீள் குடியேற்ற அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தி ஜம்இய்யா நாட்டின் ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து ஒரு செயற்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றது. 

குறித்த கலந்துரையாடலில், முன்வைக்கப்படவிருக்கின்ற செயற்திட்ட அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் இத்திட்டம் வெற்றிகரமாக அமைய எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மிக விரிவாக ஆராயப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

03.11.2015 / 20.01.1437

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்

நாட்டின் கால நிலை சீரடைய பிரார்த்திப்போம்

தொடர்ந்து சில நாட்களாக நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் ஜம்இய்யாவின் பிராந்திய கிளைகள், பள்ளிநிர்வாகிகள் சம்மேளனங்கள், நலன் விரும்பிகள் அனைவரும் தம்மாலான இயன்ற உதவி, ஒத்தாசைகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக்குழு அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.

பாதிப்படைந்தவர்கள் இயல்பு நிலைக்கு மிக விரைவில் திரும்ப அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுடன், தேவையை விட மழை அதிகரித்தால் ஓதும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதிக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.

اللهُمَّ حَوالينَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ صحيح مسلم

 

அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அல்-பாஸி

செயலாளர் – சமூக சேவைக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.11.2015 (21.01.1437)

மூத்த ஆலிம்களின் விபரங்களை திரட்டுதல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

63 வயதைத் தாண்டிய ஆலிம்களின் விபரங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திரட்டிக் கொண்டிருக்கின்றது. பல ஆலிம்களின் விபரங்கள் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளிலிருந்து எமக்கு வந்து சேர்ந்துள்ளன.

எனவே இதுவரை 63 வயதைத் தாண்டிய ஆலிம்களில் எவர்களுடைய விபரங்கள் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அனுப்பப்படவில்லையோ அவர்கள் அவசரமாக தமது பிரதேசக் கிளைகளைத் தொடர்பு கொண்டு எதிர்வரும் 25.11.2015ம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கச் செய்யூமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றௌம்.

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ளவும்.

அஷ்ஷைக் என்.எம். சிராஜ் 0117-490490 / 0773-671159

 

அஷ்ஷைக் கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி)
செயலாளர்- ஆலிம்கள் விவகாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

18.03.2016 (08.06.1437)

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்


இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக பயிர்பச்சைகள் நாசமாகியும் தேவையான தண்ணீர் இல்லாமலும் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.

அசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். எமது பாவகாங்கள் காரணமாக அல்லாஹ்வின் தண்டனை மற்றும் கோபப்பார்வை ஏற்படலாம்.

தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஒதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருள்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையூம் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மழை தேடி ஓதிய சில துஆக்கள்: 

 " اللَّهُمَّ اسْقِنا غيثًا مغيثًا مريئًا مريعًا نافعاً غَيْرَ ضارٌ، عاجِلاً غَيْرَ آجِلٍ"  - رواه أبو داود (1169)

" اللهم أغثنا ، اللهم أغثنا ، اللهم أغثنا - رواه مسلم (897)

 " اللهم اسق عبادك ، وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت  - "رواه أبو داود (1176)

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளார்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா