அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்   கண்டி மற்றும் பேராதெனிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர்களுக்கும், கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று கண்டி மாவட்டக் காரியாலயத்தில்  2018.07.01 அன்று நடை பெற்றது. இச்சந்திப்பில் வைத்திய முறைகள் சம்பந்தமாகவும் தடுப்பூசி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழுவின் ஒன்று கூடல் சம்மாந்துறையில் 01/07/2018 அன்று  ஞாயற்றுக்கிழமை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

1439.09.22

2018.06.08

ஊடக அறிக்கை

 

எல்லாம் வல்ல அல்லாஹ், இப்புனித றமழான் மாதத்தில் எமது நல்ல அமல்களை ஏற்று, எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பானாக. நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.

நாடளாவிய ரீதியில் பல சேவைகளை செய்து வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதினைந்து உப பிரிவுகளில் பத்வாக் குழுவும் ஒன்றாகும். இக்குழுவில் பல தஃவா அமைப்புகளையும் சேர்ந்த நாற்பத்தி மூன்று பிக்ஹ் கலை வல்லுனர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். இக்குழு மக்களுக்குத் தேவையான மார்க்கத் தீர்ப்புக்களையும் வழிகாட்டல்களையும் ஆய்வு செய்து எழுத்துமூலம் வெளியிட்டு வருவதுடன், தொலைபேசியூடயாகவும், நேரடியாக சமூகமளிப்பவர்களுக்கும் மார்க்கத் தீர்ப்புகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிவருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்;துல் உலமாவின் யாப்பின் பிரகாரம், மாவட்ட மற்றும் பிரேதேசக் கிளைகளுக்கு எழுத்து மூலம் பத்வா வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில், 9வது அத்தியாயம் 14 ஆவது பிரிவின், உப பிரிவு (ஒள) வில்; பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஃபத்வா வழங்குதல் தவிர்ந்த பொதுவாக ஜம்இய்யாவின் குறிக்கோள்களை எய்துவதற்கு தேவையானதும் அல்லது இடைநேர்விளைவானதுமான வேறு எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்.)

மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள், தமது பிரதேசங்களுக்குத் தேவையான மார்க்க விடயங்களை ஆய்வு செய்து, தமது ஆய்வு அறிக்கைகளை, சிபாரிசுகளை  தலைமையகத்துக்கு அனுப்பலாம். அவற்றை தலைமையக பத்வாக் குழு மீள் ஆய்வு செய்து எடுக்கப்படும் முடிவே இறுதி முடிவாகும். அவற்றையே எழுத்து மூல பிரசுரத்தில் பிரசுரிக்கப்படும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதேச மற்றும் மாவட்டக் கிளைகள் எழுத்து மூலமாக வெளியிடும் பத்வாக்கள் எதுவும் தலைமையக பாத்வாக்களாக அமையாது என்பதையும் அதனை தலைமையக பத்வாக்களாக தலைமையகம் பொறுப்பேற்க மாட்டாது என்பதையும் அனைத்து மாவட்ட, பிரதேச கிளைகளுக்கும் ஜம்இய்யா சொல்லிக் கொள்ள விரும்புகின்றது.

எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதேச மற்றும் மாவட்டக் கிளைகள் எழுத்து மூலமாக ஏதும் பத்வாக்களை வெளியிடுவதைத் தவிர்த்து ஜம்இய்யாவின் பிரதான பத்வாக் குழு ஊடாக வெளியிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 

 

அஷ்-ஷைக் எம் எஸ் எம் தாஸீம்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2018.06.05

முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வொன்று கொழும்பு - கொள்ளுப்பிட்டி, அல்மண்ட்ஸ் உணவகத்தில் நேற்று (2018.06.04) திங்கட்கிழமையன்று Qatar Charity நிறுவனத்தின் அனுசரனையில்  இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் முப்தி ரிஸ்வி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை ஜம்இய்யாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

வரவேற்புரையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பான பூரண விளக்கமொன்று அஷ்-ஷைக் அர்ஷத் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் சிறப்புரையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. அவரது உரையில் சமூக மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முன்வைத்ததுடன்  ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் ஒரு விடயத்தை சரியான முறையில் ஆராய்ந்து, அந்த செய்தியை உறுதிப்படுத்திய பின்னரே, அவற்றை வெளியிட வேண்டும் என்றும் இதுவே ஒரு ஊடகவியலாளருக்குரிய சிறந்த பண்பாகும்  என்றும் குறிப்பிட்டார். மேலும் ஜம்இய்யாவின் பணிகள் பற்றி குறிப்பிட்ட தலைவர் அவர்கள் எமது சமூகத்திற்கான ஊடகத்தின் அவசியத்தையும் விளக்கினார்.

தலைவர் அவர்களின் உரையைத் தொடர்ந்து முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர் என்.எம் அமீன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் முஸ்லீம் ஊடகங்களின் நிலை பற்றியும் அவற்றுக்கான பங்களிப்புக்களை சமூக்தில் உள்ளவர்கள் வழங்க முன் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

 

ஊடகப் பிரிவு

அகில இலங்க ஜம்இய்யத்துல் உலமா

 

 

31.05.2018 (14.09.1439)

இன்று சர்வதேச ரீதியில் காணப்படும் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் முறைகளில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கும் முறையே குர்ஆனினதும் ஹதீஸினதும் வழிகாட்டலுக்கு மிகவும் நெருங்கிய முறையாகும். இதனையே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர்.


அத்துடன் பிறை மாதத்தை ஆரம்பிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படலாம். ஓரிடத்தில் கண்ட பிறையை முழு முஸ்லிம் சமூகமும் செயற்படுத்தியது என்பதை கடந்த 1400 வருட காலங்களில் காண்பதற்கில்லை. மாறாக, சஹாபாக்களின் செயற்பாடுகள் அவர்கள் ஆங்காங்கே கண்ட பிறையின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றன. அதை முஸ்லிம் ஷரீபில் வரக்கூடிய சம்பவம் மிகவும் தெளிவு படுத்துகின்றது.


குரைப் ரஹிமஹுல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவில் இருந்த வேளை, உம்முல் ஃபழ்ல் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னை சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். சிரியாவுக்குப் போய் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். நான் சிரியாவில் இருந்த வேளையில் ரமழான் பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் தலைப்பிறையைக் கண்டேன். அம்மாதத்தின் இறுதியில் நான் மீண்டும் மதீனா வந்தேன். என்னிடம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் எனது பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர், பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். “நீங்கள் எப்போது பிறை கண்டீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். “வெள்ளிக் கிழமை இரவு பிறையைப் பார்த்தோம்” என்று சொன்னேன். அப்போது “நீங்களே பிறையைக் கண்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு “ஆம் நானும் கண்டேன், மக்களும் கண்டனர், மக்களும் நோன்பிருந்தனர், முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நோன்பிருந்தார்கள்;” என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் “நாங்களோ சனிக்கிழமை இரவே பிறையைக் கண்டோம். எனவே மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தியாக்கும் வரை தொடர்ந்து நோன்பிருப்போம். (தலைப்) பிறையை நாம் கண்டாலே தவிர” என்றார்கள். “முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறையைக் கண்டதும், நோன்பிருந்ததும் உங்களுக்குப் போதுமானதாகாதா?” என்று கேட்டேன். “இல்லை, நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படித்தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் ஷரீபில் (1087) வருவது போல் திர்மிதி (693), அபூ தாவூத் (2332), நஸாயீ (2111), முஸ்னத் அஹ்மத் (2789) போன்ற கிரந்தங்களிலும் இடம்பெறுகின்றது.


மேற்குறித்த கிரந்தங்களில் இந்த ஹதீஸைப் பதிவு செய்யும் போது “ஒரு நாட்டில் காணப்படும் பிறை அந்த நாட்டவர்களுக்கே” என்ற கருத்திலே தலைப்பிட்டுள்ளார்கள். மேலும் ஹிஜ்ரி 210 முதல் ஹிஜ்ரி 279 காலப்பகுதிக்குள் வாழ்ந்த இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு “மார்க்க அறிஞர்களிடத்தில் இந்த ஹதீஸின் பிரகாரமே செயல் காணப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


இவ்வருடம் ரமழான் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான ஒன்றுகூடல் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் பிறைக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 2018.05.16 ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. அவ்வொன்றுகூடலில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள், அதன் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிழ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, உதவிச் செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஃபத்வா குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் மற்றும் உறுப்பினர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் மேமன் ஹனபிப் பள்ளிவாசல் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.


இக்குழு நாடெங்கிலும் உள்ள தமது உப பிறைக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதோடு கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாரை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களினதும் காத்தான்குடி, அகுரணை, கண்டி, மாவனல்லை போன்ற முப்பத்தி ஐந்திற்கும் மேற்பட்ட பிரதேசங்களின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டனர். அன்றைய தினம் வெற்றுக் கண்களுக்கு பிறை இலகுவாக தென்படும் வாய்ப்பு இருப்பதாக வானியல் கணிப்பீடு காணப்பட்டபோதிலும் மஃரிபை அண்டிய நேரத்தில் கால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் நாட்டில் பல பாகங்களும் மழையும் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டன. நாட்டில் எவ்விடத்திலிருந்தும் பிறை தென்பட்டதற்கான தகவல் கிடைக்கப் பெறவில்லை. அனைவரும் பிறை தென்படவில்லை என்றே அறிவித்தனர். ஆகவே, அங்கு கூடியிருந்த உலமாக்கள் உள்ளிட்ட குழுவினர் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! அம்மாதம் (மேக மூட்டத்தால்) உங்களுக்கு மறைக்கப்பட்டால், ஷஃபானின் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்! (ஸஹீஹ{ல் புகாரி 1909) என்ற நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றுக்கிணங்கவும் ஜம்இய்யாவின் தலைப்பிறையைத் தீர்மானிப்பது தொடர்பிலான தீர்மானத்தின் அடிப்படையிலும் ஷஃபான் மாதத்தை பூரணப்படுத்தி 18.05.2018 வெள்ளிக்கிழமை ரமழான் மாதத்தை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.


தலைப்பிறையைத் தீர்மானிப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஐந்து அடிப்படைகளைக் கொண்ட தீர்மானம்


பிறை தொடர்பாக ஷரீஆக் கண்ணோட்டத்தில் ஆழமானதோர் ஆய்வை மேற்கொள்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு விஷேட நிபுணத்துவக் குழுவை நியமித்தது. குறித்த குழு பல மாதங்கள் பிறை தொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைப் பீடத்திடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து கடந்த 2006.09.06 இல் பிறை தொடர்பான இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விஷேட அமர்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இவ்வமவர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் சார்பிலும் முக்கியமான ஆலிம்கள் கலந்து கொண்டனர். அங்கு பின்வரும் ஐந்து அடிப்படைகள் தீர்மானங்களாக முடிவு செய்யப்பட்டன.


1. உள்நாட்டில் பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பெறப்படும்.
2. பிறை பார்த்தலின் போது வெற்றுக் கண்ணால் பார்த்தல் அடிப்படையாகக் கொள்ளப்படும்.
3. ஒரு நாளின் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காண முடியாத நாளாகக் கொள்ளப்படும்.
4. வானியல் துறையில் புலமைப் பெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவிற்குத் துணையாகச் செயற்படும்.
5. பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கு அல்லது பெருநாள் கொண்டாடுவதற்கு பிறரைத்தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.


மேற்கூறிய இந்த அடிப்படைகளை வைத்தே நமது நாட்டில் தலைப்பிறையைத் தீர்மானித்து அறிவிக்கும் பொறுப்பு வாய்ந்த அமைப்புகளான கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன மாதாந்தம் தலைப் பிறையைத் தீர்மானித்து அறிவித்து வருகிறன. அவ்வாறே 2014 ஆம் ஆண்டிலிருந்து, தலைப் பிறை பார்த்தலில் ஏற்படும் தவறுகளையும் குறைகளையும் முடியுமான அளவு குறைத்தல், முரண்பாடுகளையும் குழப்பங்களையும் இல்லாமலாக்குதல் என்ற நோக்கில் பிறை தென்படும் வாய்ப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை இனங்கண்டு அப்பகுதிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழுக்களை இவ்வமைப்பு நியமித்து பிறை பார்த்தலில் ஈடுபட்டதன் விளைவாக முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தவிர்த்து செயற்பட்டு வருவதை தற்போது நாம் காணக்கூடியதாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!


முஸ்லிம் சமூகம் ஒரே பிறையைப் பின்பற்றுவதன் மூலமே முழு உலகத்திலும் ஒரே நாளில் நோன்பு நோற்று, பெருநாள் கொண்டாடி தமது ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும் என்ற ஒரு கருத்து பரவலாகப் பேசப்படுவதுண்டு. உண்மையில் இக்கருத்து அடிப்படையற்ற ஒரு கருத்தாகக் காணப்படுவதுடன் அறிவு பூர்வமற்ற சாத்தியமற்ற ஒன்றாகவும் இருக்கிறது. காரணம், உலகத்தில் ஒரே நேரத்தில் இரவு, பகல் என்ற இரு நிலமைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஒரே வேளையில் பகுதிக்குப் பகுதி நேரம் வித்தியாசம் காணப்படும். அத்துடன் 24 மணித்தியாலத்தில் உலகளவில் இரண்டு நாட்கள் நடைமுறையில் இருக்கும். இவையெல்லாம் அறிவியல் சார்ந்த பொதுவான விடயங்களாகும். எனவே சாத்தியமற்ற ஒன்றை ஒற்றுமையை வெளிப்படுத்தல் என்ற பெயரில் சாத்தியப்படுத்த முயற்சிப்பது பொருத்தமான ஒன்றல்ல.


இபாதத்துகள் மார்க்க வழிகாட்டலில் செயற்படுத்தப்பட வேண்டியவைகள். ஒற்றுமையை உள்ளங்களில் ஏற்படுத்திக் கொள்வது, ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமை மதிப்பது, நல்ல பண்புகளோடு பழகுவது, ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் வழங்குவது, பொருளுதவிகளை வழங்குவது, சொந்தங்களை சேர்ந்து வாழ்வது, ஒருவர் மற்றவருக்கு சிரமம் கொடுக்காமலிருப்பது, முஸ்லிம்கள் தமக்கிடையே பிளவுகளையும் பிணக்குகளையும் தவிர்த்துக் கொள்வது போன்ற இன்னோரன்ன விடயங்களின் மூலமே முஸ்லிம்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். மாறாக கருத்து வேற்றுமை இருக்கும் ஒரு மார்க்க சட்டத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் மற்றவரை தவறில் இருப்பதாக ஒருவரை ஒருவர் ஏசிப் பேசிக் கொள்வதும், தூசிப்பதும், அவமானப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும், கொச்சைப்படுத்துவதும் பொருத்தமற்ற, இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான செயற்பாடுகளாகும். இந்த சமூகம் ஒருவரை ஒருவர் ஏசிப் பேசிக் கொள்ளுமாக இருந்தால் அல்லாஹ{ தஆலாவின் அருளிலிருந்து தூரமாகிவிடும். ஒரு முஸ்லிமின் மானம் பெரிதும் மதிக்கத்தக்கதாகும். “உங்களது இந்த மாதத்திலே உங்களது இந்த நாட்டிலே உங்களது இந்த நாளுக்கு இருக்கும் சங்கையைப் போன்று, உங்களுடைய இரத்தங்களும் சொத்துக்களும் மானங்களும் உங்கள் மீது சங்கையானதாகும்.” (ஸஹீஹ{ல் புகாரி 1739) என்று நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


உலக மட்டத்தில் இவ்வருடம் ரமழான் மாதம் துருக்கி போன்ற நாடுகளில் 16 ஆம் திகதி புதன்கிழமையும், சவூதி மற்றும் பெரும்பான்மையான நாடுகளில் 17 ஆம் திகதி வியாழக்கிழமையும், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த மார்க்க அறிஞர்களும் யாரைப் பார்த்தும் தவறில் இருப்பதாக குறிப்பிட்டது கிடையாது. அவரவர் பகுதிகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரமே அவர்கள் செயற்படுகிறார்கள் என்பதாகவே இந்த வேறுபாட்டைப் பார்க்கிறார்கள். இதுவே மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.


அத்துடன் மேகக்கூட்டம் அல்லது சீரற்ற காலநிலை காரணமாக ஷஃபான் மாதம் 30 நாட்களாக பூர்த்திசெய்யப்பட்டு ரமழானில் 28 நோன்புகள் மாத்திரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டால், இதற்கு ஷரீஆவில் அழகிய வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. இந்நிலை ஏற்கனவே வரலாற்றில் பல தடவைகள் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய வழிகாட்டல்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவால் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
பிறைக் குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

28.08.1439

15.05.2018

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

 பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவினால் மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கான தெளிவுகள் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.

மேலும், புனித ரமழான் மாதத்தில் ஸகாத் மற்றும் நோன்பு சம்பந்தமான தெளிவுகள் மக்களுக்கு அதிகமாக ஏற்படுவதால், ரமழான் மாத விஷேட தொலை பேசிச் சேவை வழமைபோன்று இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சேவையூடாக வார நாட்களில் காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணிவரை, ஸக்காத், நோன்பு மற்றும் ஏனைய மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களைக் கேட்பதற்கு பின்வரும் எமது துரித சேவையினூடாகத் தொடர்பு கௌ்ளலாம்.

 

துரித இலக்கம் :  0117 490 420

 

அஷ்-ஷைக் எம்.எம். எம். இல்யாஸ்                                                                                                   

செயலாளர் – பத்வாக்குழு                                                                                                                          

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

02.05.2018 (15.08.1439)

அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.

துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த வன்செயல்கலால்  பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் நீங்கி வழமையான வாழ்வுக்குத் திரும்பவும், நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.

ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் ஆலோசனைகளும் பின்வருமாறு:

 • அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.
 • இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். இதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ந்து கொள்ளல்.
 • கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.
 • ஆடம்பர இப்தார் நிகழ்ச்சிகள் போன்ற அவசியமற்ற செலவுகளைத் தவிர்த்து ஏழைகளையும் தேவையுடையோரையும் அடையாளம் கண்டு ஸக்காத் சதகா போன்றவற்றை வழங்கி உதவி செய்தல்.
 • ஏழைகளுக்கு ஸஹ்ர் மற்றும் இப்தாருக்கான ஏற்பாடுகளை செய்தல்.
 • இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோரும் பொறுப்புவாய்ந்தவர்களும் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.
 • இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கி சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.
 • ஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்த்தாதிருத்தல்.
 • உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.
 • பெண்கள் தொழுகைக்காக வெளியில் செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.
 • மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.
 • மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.

எனவே, இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.

வஸ்ஸலாம்.   

 

 

அஷ்.-ஷைக் எச்.உமர்தீன்

செயலாளர்- பிரசாரக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

22.04.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் GONGAWELA ஜும்மா மஸ்ஜிதில் அஷ்ஷேக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இரு அமர்வுகளாக இடம் பெற்ற இம்மவர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி அவர்கள் சகவாழ்வு எனும் தலைப்பிலும் , அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயளாலர் அஷ்ஷேக் முர்ஷித் அவர்கள் தற்கால பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். 

இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட உலமாக்கள் ,துறைசார்ந்தவர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சங்கங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு 2018.04.21 அன்று தேசிய சமாதான மற்றும் இன நல்லிணக்கத்திற்கான அமைப்பின் தலைவர் இத்தாபன தம்மலங்கார தேரரை கொட்டாவ விகாரையில் சந்தித்தனர். மேற்படி சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் ,உதவிப் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் , அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான், அஷ்-ஷைக் மாஹிர், அஷ்-ஷைக் நுஃமான் மற்றும் மனோ தத்துவவியல் நிபுணர் அல்ஹாஜ் தஹ்லான் ஆகியோர் கலந்து கொண்டு பல முக்கிய விடயங்களை கலந்துரையாடினர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா