01.08.2020 / 10.12.1441

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

 

அல்லாஹு  அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

கொவிட் 19 இன் தாக்கம் உலகளாவிய ரீதியில் முழுமையாக நீங்காத ஒரு சூழலில் இன்று சனிக்கிழமை தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.

 

இவ்வருடம் குறிப்பிட்ட அளவு மக்களே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டிருப்பதால் எமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிருந்தும் ஹஜ்ஜுக்காக செல்ல நாட்டமிருந்த பலருக்கும் அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயமாக அதற்காக நாட்டம் வைத்த அனைவருக்கும் மற்றும் ஏனையோருக்கும் அல்லாஹுதஆலா பூரண நன்மைகளைத் தந்தருள வேண்டுமென இத்தினத்தில் பிராத்தனை செய்கின்றோம்.

 

இன்றைய நாளை சிறந்த முறையில் கழிப்பதுடன் இன்று செய்ய வேண்டிய சுன்னத்தான அமல்களான   தக்பீர் சொல்லுதல், குளித்தல், புத்தாடை அணிதல் அல்லது தம்மிடம் காணப்படும் சிறந்த ஆடையொன்றை அணிதல், வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளல், உணவருந்தாமல் தொழுகைக்கு சமூகமளித்தல், பெருநாள் தொழுகையை நிறைவேற்றுதல், வசதியுள்ளவர்கள் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல் போன்ற அமல்களில் ஈடுபட வேண்டும்.

 

இத்திருநாளில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவு படுத்தாமல் இருக்க முடியாது. அக்குடும்பத்தின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். இம்முன்மாதிரிகளை நாம் ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப வாழ்கையில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

 

இறைவனின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தை பறைசாட்டும் உழ்ஹிய்யாவுடைய அமலை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்ட வகையிலும் நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன்வர வேண்டும்.

 

அதே நேரம் தியாகத் திருநாள் கற்றுத்  தரும் தியாக மனப்பாங்கை எம்மில் வளர்த்தல், மார்க்க விடயங்களில் பேணுதலாக இருத்தல், ஏனையோருக்கு உதவிகள் செய்தல், அனைவருடனும் அன்பாக பழகுதல், சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும்  நடந்து கொள்ளல் போன்ற நல்ல பண்புகளையும் எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டு மட்டத்திலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணைபுரிய வேண்டுமெனவும் உலகளாவிய முஸ்லிம்கள் பொதுவாகவும், இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!  ஈத் முபாரக்!

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

01.08.2020 / 10.12.1441

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

 

அல்லாஹு  அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

கொவிட் 19 இன் தாக்கம் உலகளாவிய ரீதியில் முழுமையாக நீங்காத ஒரு சூழலில் இன்று சனிக்கிழமை தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.

 

இவ்வருடம் குறிப்பிட்ட அளவு மக்களே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டிருப்பதால் எமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிருந்தும் ஹஜ்ஜுக்காக செல்ல நாட்டமிருந்த பலருக்கும் அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயமாக அதற்காக நாட்டம் வைத்த அனைவருக்கும் மற்றும் ஏனையோருக்கும் அல்லாஹுதஆலா பூரண நன்மைகளைத் தந்தருள வேண்டுமென இத்தினத்தில் பிராத்தனை செய்கின்றோம்.

 

இன்றைய நாளை சிறந்த முறையில் கழிப்பதுடன் இன்று செய்ய வேண்டிய சுன்னத்தான அமல்களான   தக்பீர் சொல்லுதல், குளித்தல், புத்தாடை அணிதல் அல்லது தம்மிடம் காணப்படும் சிறந்த ஆடையொன்றை அணிதல், வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளல், உணவருந்தாமல் தொழுகைக்கு சமூகமளித்தல், பெருநாள் தொழுகையை நிறைவேற்றுதல், வசதியுள்ளவர்கள் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல் போன்ற அமல்களில் ஈடுபட வேண்டும்.

 

இத்திருநாளில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவு படுத்தாமல் இருக்க முடியாது. அக்குடும்பத்தின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். இம்முன்மாதிரிகளை நாம் ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப வாழ்கையில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

 

இறைவனின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தை பறைசாட்டும் உழ்ஹிய்யாவுடைய அமலை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்ட வகையிலும் நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன்வர வேண்டும்.

 

அதே நேரம் தியாகத் திருநாள் கற்றுத்  தரும் தியாக மனப்பாங்கை எம்மில் வளர்த்தல், மார்க்க விடயங்களில் பேணுதலாக இருத்தல், ஏனையோருக்கு உதவிகள் செய்தல், அனைவருடனும் அன்பாக பழகுதல், சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும்  நடந்து கொள்ளல் போன்ற நல்ல பண்புகளையும் எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டு மட்டத்திலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணைபுரிய வேண்டுமெனவும் உலகளாவிய முஸ்லிம்கள் பொதுவாகவும், இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!  ஈத் முபாரக்!

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Ref No. ACJU/PRO/2020/004

2020.07.29 (07.12.1441)

 

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்

 

கொவிட் 19 வைரஸின் தாக்கம் மற்றும் நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வருட ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

 

  1. துல் ஹிஜ்ஜஹ் மாத முதல் பத்து நாட்களும் மிக சிறப்புப் பொருந்திய நாட்கள் என்பதால் எஞ்சியுள்ள நாட்களில் நல்லமல் செய்ய அனைவரும் ஆர்வங்காட்டுவதுடன், அதன் ஒன்பதாவது நாளில் (வெள்ளிக் கிழமை) அரபாவுடைய நோன்பை நோற்க ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

 

  1. உலகளாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதனால், சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி நடந்துக் கொள்வதுடன், பெருநாள் தொழுகையின் போது சமூக இடை வெளிப் பேணுதல், முகக்கவசம் அணிதல், வீட்டிலிருந்தே வுழூ செய்துக் கொண்டு வருதல் போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

 

  1. சமூக இடைவெளிப் பேணி பெருநாள் தொழுகை நடாத்தப்படவேண்டும் என்பதால், ஆண், பெண் அனைவரும் ஓர் இடத்தில், மார்க்க வரையறைகளைப் பேணிய நிலையில், PHI உடைய அனுமதியுடன் தொழுகைக்காக ஒன்று சேர்வது பொருத்தமா என்பதை மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் கலந்தாலோசித்து தமது பிரதேசத்திற்கு பொருத்தமான வழிமுறையைச் செயற்படுத்த வேண்டும்.

 

  1. நோயாளிகள் மற்றும் சிறுவர்கள் பெருநாள் தொழுகை நடாத்தப்படும் இடத்திற்கு வருகைத் தருவதைத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

 

  1. துல் ஹிஜ்ஜஹ் மாதம் பிறை ஒன்பது ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் உடைய மூன்றாவது நாள் பிறை 13 (04.08.2020 செவ்வாய் கிழமை)அஸ்ர் வரை தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.

 

  1. இத்தினங்களில் முஸாபஹா, முஆனகா போன்ற செயல்களை தவிர்ந்து ஸலாம் கூறுவதுடன் போதுமாக்கிக் கொள்ளவேண்டும்.

 

  1. பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் மீது கருணை காட்டுவதுதோடு, அவர்களுக்கு தம்மாலான உதவிகளை செய்ய வேண்டும்.

 

  1. உழ்ஹிய்யாவுடைய அமலை நிறைவேற்றுபவர்கள், ஜம்இய்யா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அது தொடர்பாக ஏலவே வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப் பேணி அவ்வமலை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

 

  1. பெருநாள் தினங்களில் பிறமத சகோதரர்களின் உணர்வுகள் தூண்டப்படும் விதத்தில் எமது செயற்பாடுகள் அமையக்கூடாது.

 

  1. தற்போதைய சூழ் நிலையில் சுற்றுலாக்கள், பயணங்கள் மேற்கொள்வதை குறைத்துக் கொள்வது, வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கு காரணமாக அமையும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

  1. இப்புனித தினத்தில் உலகளாவிய ரீதியில், குறிப்பாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளும் நீங்கி எல்லா இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.

வஸ்ஸலாம்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

24.07.2020 (1441.12.02)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ஹெம்மாதகமையைச் சேர்ந்த அஷ்ஷைக் முஹம்மத் லெப்பை ஆலிம் (கபூரி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகளில் பங்காற்றிய அஷ்ஷைக் முஹம்மத் லெப்பை ஆலிம் (கபூரி) அவர்கள் நேற்று (23.07.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹெம்மாதகமைக் கிளையின் உறுப்பினராக நீண்ட நாட்களாக பணிபுரிந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்கு பணியாற்றியவராவார். அன்னாரின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

 

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 Ref No. ACJU/PRO/2020/003

15.07.2020 (23.11.1441)

இவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்

 

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.

 

உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான். 

 

இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வதுடன், எமது நாட்டில் நடைமுறையிலுள்ள விலங்குச் சட்டம் (Animal Act No.29 of 1958)  கூறும் விடயங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.

 

கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வருடம் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றும் பொழுது, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும்.

 

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஒடட்கம் கிடைக்கப்பெறாமையினால் ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும்; அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது. ஓர் ஒட்டகம் அல்லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் மாத்திரமே கூட்டுச்சேர முடியும்.

 

பிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமைகள் வித்தியாசப்படுவதனால், வீண் சர்ச்சைகள் எதுவுமின்றி தத்தமது பிரதேசங்களில் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியுமா என்பதை, தமது பிரதேச ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் நிர்வாகம்;, ஏனைய முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்து, பொருத்தமான முடிவொன்றை எடுத்துக் கொள்ளுமாறும், அம்முடிவிற்கு ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

உழ்ஹிய்யாக் கொடுப்பது சிரமம் எனக் காணப்படும் பிரதேசங்களில்  உள்ளவர்கள், அதனை நிறைவேற்ற உறுதி கொண்டால், பொருத்தமான வேறு பிரதேசங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

 

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

  1. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.
  2. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.
  3. நம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
  4. ஏழு நபர்கள் இணைந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவதை விட, தனித்தனியாக ஒவ்வொருவரும், ஓர் ஆட்டினை உழ்ஹிய்யா கொடுப்பது ஏற்றமானதாகும். இச்சிறப்பினை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் தனது சத்திக்கேற்ப முயற்சிக்கவேண்டும்.
  5. எப்பிரதேசங்களில் மாடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவது சிரமமாக உள்ளதோ, அப்பிரதேசங்களில் ஆடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றிக் கொள்ளவும்.
  6. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றிவருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
  7. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது.
  8. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.
  9. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி, கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
  10. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.
  11. குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
  12. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சூழல் சுற்றாடல் சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.
  13. சமூக இடைவெளி பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற கோவிட் 19 சம்பந்தமாக அரசாங்கம் வழங்கும் வழிகாட்டல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
  14. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.
  15. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்வதோடு, ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.
  16. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துகொள்ள வேண்டும்.

 

பள்ளிவாயல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

வஸ்ஸலாம்

 

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்

உதவி பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜுமுஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணைய தளமான www.acju.lk இல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.

ACJU/MED/2020/008

10.07.2020 (18.11.1441)

 

ஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பெயரை மாசுபடுத்தும் வகையில் பல பிழையான தகவல்களை மக்கள் மயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரல் நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு அறியக் கிடைத்துள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஏனைய சில விடயங்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை பிழையாக தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு பொதுமக்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு செயற்பாடு நடைபெற்று வருகின்றது.


பொறுப்பற்ற இச்செயற்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் பிழையான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.

 


அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

07.07.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவும் மாளிகாவத்தை பிரஜா பொலிஸ் நிலையமும் இணைந்து மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு அருகாமையில்  பொதுமக்களுக்கான முகக் கவசம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது பொது மக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன் முகக்கவசங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஊடகப் பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

ACJU/MED/2020/007

06.07.2020 (14.11.1441)

சம்பத் வங்கிக் கணக்குகளை நீக்குமாறு ஜம்இய்யா கூறவில்லை

 

கடந்த வாரம் தெஹிவல பகுதியில் உள்ள சம்பத் வங்கிக் கிளையொன்றில் இடம் பெற்ற விவகாரம் தொடர்பில் ஜம்இய்யா தனது மனவருத்தத்தை தெரிவிக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இணைந்து சுமூகமாக தீர்த்துக் கொள்வது சிறந்தது.

 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பத் வங்கிக் கணக்குகளை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது எனும் தலைப்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றது.

 

முஸ்லிம்களின் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நாட்டில் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்குமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்பில் ஆங்காங்கே செய்திகள் வெளிவரும் போது அவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் www.acju.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக உறுதி செய்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களிடம் ஜம்இய்யா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்

சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் நேற்று 30.06.2020 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இஸ்லாம் தொடர்பான விடயங்கள், சமூக நல்லிணக்கத்தில் மதத்தலைவர்களின் வகிபாகம் என பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அல்குர்ஆன் சிங்கள மொழி மூலமான விரிவுரை மற்றும் ஜம்இய்யாவின் வெளியீடுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் உற்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

2020.06.23 (1440.11.01)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி


அஷ்ஷைக் ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. ஜம்இய்யாவின் வளர்ச்சியில் இறுதி வரை பங்காற்றிய ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி) அவர்கள் இன்று (23.06.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் முன்னாள் செயலாளராகவும், தற்போதைய பொருளாளராகவும் மேலும் மத்தியக் குழுவின் உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். அன்னாரின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உப செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா