? கொவிட் 19 தொடர்பில் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளல்.

?️ 2021.08.06 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ்நிலையை கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட அவசர வேண்டுகோள்

? வழங்குபவர் : அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
                        பொதுச் செயலாளர்
                        அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

1442.06.28
2021.02.11

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹமத்துல்லாஹி வபறகாத்துஹூ

சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்புவது அச்சோதனைகள் நீங்குவதற்கும் அதன் மூலம் நலவுகள் உருவாகுவதற்கும் காரணமாக அமைகின்றது.
மேலும், சோதனைகளின் போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைகளில் குனூதுன்னாஸிலா ஓதிவந்துள்ளார்கள். இதனை அடிப்படையாக வைத்து நாமும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற குனூதுன்னாஸிலா ஒதிவந்தோம்.


தற்போது நாட்டில் கொரோனாவின் அச்சுறுத்தல் மட்டுமல்லாது, அரபு மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் போன்றவற்றுக்கான அச்சுறுத்தல்களும் மீண்டும் முடக்கிவிடப்படுவதால், இவை அனைத்திலிருந்தும் பாதுகாப்புப்பெற சுருக்கமாகவும், உருக்கமாகவும், மஃமூம்களுக்கு சிரமமில்லாத முறையில் தொடர்ந்தும் ஐவேளைத் தொழுகைகளில் குனூதுன்னாஸிலாவை ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறு மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

13.12.2020

 

தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பேரில் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே சுகாதார வழிமுறைகளை தாங்கள் அனைவரும் பின்பற்றி நடந்தீர்கள். அதற்காக எமது நன்றிகளும் துஆக்களும் உரித்தாகட்டும். மேலும் இச்சந்தர்ப்பத்திலும் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும், சுகாதார அதிகரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறும் முஸ்லிம் சமூகத்தினரிடம் மிக வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.


குறிப்பாக பி.சி.ஆர். (PCR) பரிசோதனைகள் எந்தெந்த பகுதிகளில் இடம்பெறுகின்றதோ, அந்த நேரத்தில் அந்த பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறும், அதன் மூலம் கொவிட்-19 என்ற இக்கொடிய நோயின் தீங்கிலிருந்து தன்னையும் பிறரையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்திகொள்ளுமாறும் அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FRL/2020/02-273

 

2020.12.10

1442.04.23

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹமத்துல்லாஹி வபறகாத்துஹூ


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.


பொதுவாக சோதனைகள் ஏற்படுவதன் நோக்கம் குறித்து அருள் மறை அல் குர்ஆன் கூறுகையில் அடியார்கள் அல்லாஹூ தஆலாவின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே நோக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் இச்சோதனைகள் நீங்குவதற்காக பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திப்பதோடு, அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் தனது தொடர்பை அதிகப்படுத்திக் கொள்வார்கள். மேலும், அவர்கள் சோதனைகளின் போது தொழுகையில் குனூதுன்னாஸிலாவை ஓதியுள்ள விடயம் ஸஹிஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூதுன்னாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இவ்வடிப்படையில் பொதுப்படையான சோதனைகள், சிரமங்கள் மற்றும் துன்பங்களை நீக்கி அல்லாஹூ தஆலாவின் உதவிகளை பெற்றுத்தருவதில் “குனூதுன்னாஸிலா” பிரார்த்தனை பெரும் சக்தியுள்ளதாக அமைந்துள்ளது.


எனவே, கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமலாகி நாட்டில் சுபீட்சம் ஏற்படவும் கொரோனாவினால் மரணித்த ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு சாதகமான நிலை உருவாகுதற்காகவும் மறுஅறிவித்தல் வரைக்கும் மஸ்ஜித்கள், வீடுகள் மற்றும் ஏனைய இடங்களில் தொழும் அனைவரும் ஐவேளைத் தொழுகைகளில் உணர்வுபூர்வமாகவும் உட்சாகமாகவும் குனூதுன்னாஸிலாவை இக்லாஸூடனும், நம்பிக்கையுடனும் ஓதிவருமாறு கேட்டுக் கொள்வதோடு, மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூதுன்னாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


 (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ (سنن أبي داود
 (اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ (صحيح البخاري
 (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ (صحيح مسلم
 (رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى لِي ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ (سنن الترمذي


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர்
பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

வழங்குபவர் : அஷ்-ஷைக் எச். உமர்தீன்

கௌரவ உப தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அன்புடையீர்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!


அகில லங்கை ஜம்ய்யத்துல் உலமா, சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே. எம். அப்துல் முக்ஸித் அவர்களின் தலைமையில், தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜித்தில் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான ஒன்று கூடல் இன்று (25.11.2020 புதன்கிழமை) நடைபெற்றது. இந்த ஒன்றுகூடலில் கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதியில் வாழும் மக்களின் நிலவரங்கள் அவதானத்தில் கொண்டு வரப்பட்டதுடன், பொதுவாக நாடாளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டது.


அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையும், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனமும் இணைந்து இவ்வுதவித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் நிவாரணங்களை துரிதமாக பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வுதவித் திட்டங்களில் தங்களது பங்களிப்பையும் வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நற்கருமங்களை பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.


ஜெஸாக்குமுல்லாஹ் கைரன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 


2020.11.05 (1442.03.17)


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் முன்பு இல்லாதது போன்று தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் மீண்டும் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.


இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும். பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹூ தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்;து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.


1. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் அதன் சட்டங்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ளல். (2020.04.06 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/244-2020-04-06-15-00-00 )


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம், அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேரவும் வேண்டாம். (ஸஹீஹூல் புகாரி: 5729, ஸஹீஹூல் முஸ்லிம்: 2219)


2. சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல் மற்றும் 1 மீட்டர் இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்றி செயற்படல்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும். (ஸஹீஹூல் புகாரி: 5771, ஸஹீஹூல் முஸ்லிம்: 2221)


3. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவசிய தேவைகளுக்கே அன்றி வெளி இடங்களுக்கு செல்வதையும், பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக் கொள்ளல்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றனர். (முஸ்னத் அஹ்மத்)


4. ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உரியநேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல். (2020.05.09 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/261-2020-05-24-14-27-19 )

 

5. மஸ்ஜித்களின் விடயங்களில் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.

 

6. இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல ஒரு மாத காலத்திற்கு குனூத் அந்-நாஸிலாவை ஐவேளை தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, துஆ, திக்ர், இஸ்திஃபார், நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தித்தல். (குனூத் அந்-நாஸிலா பற்றிய விரிவான விளக்கம் 2020.10.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது :https://acju.lk/news-ta/acju-news-ta/item/2005-covid-19)


அத்துடன் பின்வரும் துஆவை அடிக்கடி ஓதிவருதல்:

"‏ اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ‏"‏


(பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். (அபூதாவுத் 1554)

 

7. ஆலிம்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

 


அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை மஸ்ஜித்கள் மூலம் பொது மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு ஜம்இய்யாவின் கிளைகளையும் மஸ்ஜித் நிரவாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

ACJU/FRL/2020/19-236

2020.10.26

1442.03.08

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ


உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் (Covid- 19) பரவி அதன் மூலம் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். எமது நாட்டிலும் அந்தத் தாக்கம் காணப்படுகின்றது. அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.


அல்லாஹூ தஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்றான். இச்சோதனைகள் நீங்குவதற்காக தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது தொழுகையில் குனூத் அன்னாஸிலாவை ஓதியுள்ள விடயம் பல ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூத் அன்னாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் (Covid- 19) தாக்கத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக அடுத்து ஒரு மாத காலத்திற்கு ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அன்னாஸிலாவை ஓதுவதற்கு மஸ்ஜித்களில் ஏற்பாடு செய்யுமாறும் மற்றும் வீடுகளில் தொழுபவர்களும் அதனை ஓதிவருமாறும் கேட்டுக் கொள்வதோடு, மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூத் அன்னாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ. (سنن أبي داود)


اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. (صحيح البخاري)


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ. (صحيح مسلم)

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா