30.10.2020 / 12.03.1442

அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்புச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பெருமகிழ்ச்சி அடைகின்றது.


ரபிஉனில் அவ்வல் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். மனித சமூகத்துக்கு அருளாகவும், அனைவரையும் நேர் வழியின் பக்கம் வழி நடாத்தவும் வந்துதித்த நபி முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம் இது.


'ரபீஉன்” என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும், அழகையும் கொண்டு வருவது போல 'வசந்தம்' எனப் பொருள்படும் 'ரபீஉனில் அவ்வலில்” பிறந்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அமைதியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.


இன்றைய உலகின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றுவதற்கும் மற்றும் உலக அமைதி, சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான போதனைகளும் வழிகாட்டல்களும் அன்னார் கொண்டு வந்த தீனுல் இஸ்லாத்தில் நிறைவாக உண்டு.


இறைத்தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அளவிலா அன்புடனும் நேசத்துடனும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற இந் நன்னாளில் அவர்கள் போதித்த மனித நேயம், அன்பு, கருணை, பிறர் நலன் பேணல், நல்லிணக்கத்துடன் வாழ்தல் முதலான பண்புகளை கடைப்பிடித்து வாழ நாம் திட சங்கற்பம் பூணுவோமாக.


நடைமுறையில் இத்தினங்களில் முஸ்லிம்கள் பல்வேறு நற்காரியங்களில் ஈடுபடுவர் என்ற வகையில் அனைவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் சமூக ஒற்றுமையைப் பேணி, சகோதரத்துவ வாஞ்சையுடன், அடுத்தவர்களின் உணர்வுகளை மதித்தும் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.


கொவிட்-19 தொற்றின் காரணமாக நம் நாட்டு மக்களில் பலர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழலில் இந்த பொன்னான நாளில் தேவையுடைய மக்களுக்கு இன, மத பாகுபாடுகள் இன்றி உதவிக்கரம் நீட்டுமாறும் அனைவரையும் தயவாய் வேண்டிக் கொள்கின்றோம். மேலும் பயங்கர கொரோனா தொட்டின் ஆபத்து நம் நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் விரைவில் நீங்கி எல்லோருக்கும் சுபீட்சமான வாழ்வு பிறக்க பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் எல்லோரையும் கேட்டுக் கொள்கின்றோம்.


நமது தாய் மண்ணில் சாந்தியும், சமாதானமும், நல்லுறவும் நல்லிணக்கமும் ஓங்க வேண்டும் என இன்றைய நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலாவிடம் பிரார்த்திக்கின்றோம்.

 

முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா