ACJU/FTW/2019/07-358
[2019.03.14 (1440.07.06) அன்று வெளியிடப்பட்ட ஃபத்வா]
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
பொருளாதார வசதியும், உடல் ஆரோக்கியமும், அச்சமின்றி பிரயாணம் செய்யக்கூடிய வசதியும் இருக்கும் ஒவ்வொருவரும் ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமையாகும். அதேபோன்று பொருளாதார வசதி இருந்து உடல் பலவீனமுற்று இருக்கும் ஒருவர் வேரொருவரை தனக்காக ஹஜ் செய்ய வைப்பது கடமையாகும்.
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் "அல்லாஹ்வுக்காக (அவனின்) வீட்டை அடைவதற்கு சக்தியுடையவர்கள் ஹஜ் செய்வது அவர்கள் மீது கடமையாகும்." (03:97) என்று கூறியுள்ளான்.
இவ்வாறு ஹஜ் செய்வதற்கு வசதி இருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாத நிலையில் வயோதிபம் அடைதல், தீராத நோயினால் பீடிக்கப்படுதல் போன்ற காரணங்களால் ஹஜ் செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் அவருக்குப் பதிலாக இன்னொருவர் ஹஜ் செய்வது கட்டாயம் என்று இமாம் ஷாபிஈ உட்பட அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதரமாக உள்ளன.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்! உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள்! கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்' என்றார்கள்.1
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபியவர்களின் கடைசி ஹஜ்ஜின்போது வந்து 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் ஹஜ் எனும் கடமை என் தந்தைக்கு விதியாகிவிட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'ஆம்' என்றார்கள்.
இவ்விரு ஹதீஸ்களிலிருந்தும் ஒருவர் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாத அளவு உடல் பலவீனமாகிவிட்டால் அல்லது மரணித்து விட்டால் இன்னும் ஒருவரை அவருக்குப் பதிலாக ஹஜ் செய்யவைப்பது அவசியம் என்பது தெளிவாகின்றது.
இவ்வடிப்படையில் ஒருவர் பிரயாணம் செய்ய முடியாத அளவு வயோதிபத்தால் உடல் பலவீனமடைந்துவிட்டால் அல்லது நீண்டகாலமாக தீராத நோயாளியாக ஆகிவிட்டால் அவருக்கு ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இப்படியான சந்தர்ப்பங்களில் அவருக்காக இன்னொருவர் ஹஜ் செய்வது அவசியமாகும்.2
மேலும் மரணித்துவிட்ட ஒருவர் அவர் உயிரோடு இருக்கும் நிலையில் ஹஜ் கடமையானவராக இருந்தும் அதனை நிறைவேற்றவில்லையெனில் அவரது அனந்தரச் சொத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றப் போதுமான அளவு சொத்து இருக்குமாயின் அச்சொத்திலிருந்து அவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது அனந்தரக்காரர்களின் மீது அவசியமாகும். அவர் விட்டுச் சென்ற சொத்தில் ஹஜ் செய்வதற்கான போதிய அளவு பணத்தை ஒதுக்கிவிட்டே அனந்தரக்காரர்கள் தமக்கு மத்தியில் அனந்தரச்சொத்தைப் பிரித்துக்கொள்ளல் வேண்டும்.
அவருடைய அனந்தரச் சொத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான போதிய அளவு வசதி இல்லையெனில் அவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமையாக மாட்டாது. என்றாலும் அவரது வாரிசுகள் அல்லது வேறொருவர் தாம் விரும்பின் அதனை நிறைவேற்றுவது அனுமதிக்கப்பட்டதாகும்.3
தீராத நோயுடைய ஒருவருக்காக இன்னும் ஒருவர் ஹஜ்ஜை செய்ததன் பின்னர் அவரது நோய் குணமடைந்துவிட்டால் அவருக்கு பதிலாக செய்த ஹஜ் செல்லுபடியற்றதாக ஆகிவிடும். அவர் தன்மீது கடமையான ஹஜ்ஜைத் தானே நிறைவேற்றிக் கொள்வது கட்டாயமாகும்.4
தீராத நோயுடைய ஒருவருக்கு அல்லது வயது முதிர்ச்சியடைந்து உடல் பலவீனமாக இருக்கும் ஒருவருக்கு பகரமாக இன்னொருவர் பர்ளான பதில் ஹஜ் செய்வதாயின் குறித்த நபரின் அனுமதியைப் பெற்றிருப்பது அவசியமாகும். ஆனால் மரணித்த ஒருவருக்காக பர்ளான ஹஜ்ஜை செய்வதாயின் அவர் வசிய்யத் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். இதற்கு அவரது அனுமதி அவசியமாக மாட்டாது. என்றாலும் மரணித்தவருக்காக சுன்னத்தான ஹஜ்ஜை செய்வதாக இருந்தால் அவர் வசிய்யத் செய்திருந்தால் மாத்திரம் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். வசிய்யத் செய்யாவிட்டால் நிறைவேற்ற முடியாது.5
இன்னொருவருக்காக பதில் ஹஜ் செய்யக்கூடியவர் தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றியவராக இருப்பது அவசியமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
ஒரு மனிதர் சுப்ருமா என்பவருக்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியுற்றார்கள். உடனே நபியவர்கள் சுப்ருமா என்பவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் சுப்ருமா எனது சகோதரர் என்றோ எனது உறவினர் என்றோ கூறினார். அதற்கு நபியவர்கள் உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் இன்னும் இல்லை என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலில் உனக்காக ஹஜ்ஜை நிறைவேற்று. அதன் பின்னர் அவருக்கான ஹஜ்ஜை நிறைவேற்று என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூத், இப்னுமாஜா) 6
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
-----------------------------------------------------------------------
[1] عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ» (بَابُ الحَجِّ وَالنُّذُورِ عَنِ المَيِّتِ، وَالرَّجُلُ يَحُجُّ عَنِ المَرْأَةِ – كتاب الحج – صحيح البخاري)
[2] وأمّا اسْتِطَاعَةُ التحْصيلِ بِغَيْرِهِ فَهُوَ أَنْ يَعْجِزَ عَنْ الْحَج بِنَفْسِهِ بِمَوْت أوْ كِبَير أوْ زَمانة أوْ مَرَض لاَ يُرْجَى زَوَالُهُ أوْ هَرَم بِحَيْثُ لا يَسْتَطِيعُ الثبُوتَ على الرَّاحِلَة إِلا بِمَشَقة شديدَة وهَذَا العَاجِزُ الْحَي يُسَمَّى مَعْضُوباً. (الإيضاح في مناسك الحج والعمرة)
[3] تَجِبُ الاسْتِنَابةُ عن المَيّت إذَا كَانَ قَدْ اسْتَطَاعَ في حَيَاتِهِ وَلَمْ يَحِج هَذا إذَا كَانَ لَهُ تَركةٌ وإلا فَلاَ يَجِبُ على الْوَارِثِ، وَيَجُوزُ لِلْوَارِثِ والأَجْنَبِي الحَجُّ عنهُ سَواءٌ أوْصَى به أم لا. (الإيضاح في مناسك الحج والعمرة)
[4] وأمَّاالمَعْضُوبُ فَلاَ يَصح الحَج عنهُ بِغَيْر إذْنه وَتَلْزَمُهُ الاسْتنَابة إنْ وجدَ مالاً يسْتأجرُ به من يحُج عنْهُ فَاضِلاً عَنْ حَاجَته فإنْ لم يجد المال ووجد من يتبرع بالْحَجِّ عنْه من أَوْلاَده وَأَوْلاد أَولاَده الذُّكور وَالإناث لزمَهُ اسْتنابَتُهُ بشَرْط أَنْ يكُونَ الْوَلد حَج عنْ نفْسه وَيُوثَقُ به وهو غَيْر مَعْضُوب ، ولو اسْتناب المعْضُوب من يَحجُّ عنه وحَج عنهُ ثُمَّ زَالَ الْعَضْبُ وشُفِي لم يُجْزِه على الأَصحِّ بَلْ عَلَيْهِ أنْ يَحُجَّ. (الإيضاح في مناسك الحج والعمرة)
[5] قَالَ أَصْحَابُنَا لَا يُجْزِئُ الْحَجُّ عَنْ الْمَعْضُوبِ بِغَيْرِ إذْنِهِ بِخِلَافِ قَضَاءِ الدَّيْنِ عَنْ غَيْرِهِ لِأَنَّ الْحَجَّ يَفْتَقِرُ إلَى النِّيَّةِ وَهُوَ أَهْلٌ لِلْإِذْنِ بِخِلَافِ الْمَيِّتِ وَفِيهِ وَجْهٌ ضَعِيفٌ أَنَّهُ يَجُوزُ بِغَيْرِ إذْنِهِ حَكَاهُ المتولي عن القاضى أبي حامد المروروزى وَحَكَاهُ أَيْضًا الرَّافِعِيُّ وَهُوَ شَاذٌّ ضَعِيفٌ وَاتَّفَقَ أَصْحَابُنَا عَلَى جَوَازِ الْحَجِّ عَنْ الْمَيِّتِ وَيَجِبُ عِنْدَ اسْتِقْرَارِهِ عَلَيْهِ سَوَاءٌ أَوْصَى بِهِ أَمْ لَا وَيَسْتَوِي فِيهِ الْوَارِثُ وَالْأَجْنَبِيُّ كَالدَّيْنِ (المجموع شرح المهذب)
وفى حج التطوع قولان (احدهما) لا يجوز لانه غير مضطر إلى الاستنابة فيه فلم تجز الاستنابة فيه كالصحيح (والثانى) انه يجوز وهو الصحيح لان كُلُّ عِبَادَةٍ جَازَتْ النِّيَابَةُ فِي فَرْضِهَا جَازَتْ النيابة في نفلها كالصدقة. (المجموع شرح المهذب)
أَمَّا حَجُّ التَّطَوُّعِ فَقَالَ الْعِرَاقِيُّونَ: إنْ لَمْ يُوصِ بِهِ لَمْ يَصِحَّ عَنْهُ، وَنَقَلَ الْمُصَنِّفُ فِي الْمَجْمُوعِ فِي كِتَابِ الْحَجِّ الِاتِّفَاقَ عَلَيْهِ مَعَ حِكَايَتِهِ هُنَا تَبَعًا لِلرَّافِعِيِّ عَنْ السَّرَخْسِيِّ أَنَّ لِلْوَارِثِ الِاسْتِنَابَةَ، وَأَنَّ الْأَجْنَبِيَّ لَا يَسْتَقِلُّ بِهِ عَلَى الْأَصَحِّ، وَمَا ذُكِرَ فِي كِتَابِ الْحَجِّ هُوَ الْمُعْتَمَدُ، وَجَرَى عَلَيْهِ ابْنُ الْمُقْرِي فِي رَوْضِهِ هُنَا، وَعِبَارَتُهُ مَعَ الشَّرْحِ: وَلَوْ حَجَّ عَنْهُ الْوَارِثُ أَوْ الْأَجْنَبِيُّ تَطَوُّعًا بِلَا وَصِيَّةٍ لَمْ يَصِحَّ لِعَدَمِ وُجُوبِهِ عَلَى الْمَيِّتِ، (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)
(وَلِلْأَجْنَبِيِّ) فَضْلًا عَنْ الْوَارِثِ الَّذِي بِأَصْلِهِ، وَمِنْ ثَمَّ اخْتَصَّ الْخِلَافُ بِالْأَجْنَبِيِّ الشَّامِلِ هُنَا لِقَرِيبٍ غَيْرِ وَارِثٍ (أَنْ يَحُجَّ عَنْ الْمَيِّتِ) الْحَجَّ الْوَاجِبَ كَحَجَّةِ الْإِسْلَامِ وَإِنْ لَمْ يَسْتَطِعْهَا الْمَيِّتُ فِي حَيَاتِهِ عَلَى الْمُعْتَمَدِ؛ لِأَنَّهَا لَا تَقَعُ عَنْهُ إلَّا وَاجِبَةً فَأُلْحِقَتْ بِالْوَاجِبِ (بِغَيْرِ إذْنِهِ) يَعْنِي الْوَارِثَ (فِي الْأَصَحِّ) كَقَضَاءِ دَيْنِهِ بِخِلَافِ حِجِّ التَّطَوُّعِ لَا يَجُوزُ عَنْهُ مِنْ وَارِثٍ أَوْ أَجْنَبِيٍّ إلَّا بِإِيصَائِهِ (تحفة المحتاج في شرح المنهاج)
[6] عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه و سلم سمع رجلا يقول لبيك عن شبرمة قال " من شبرمة ؟ " قال أخ لي أو قريب لي قال " حججت عن نفسك؟ " قال لا قال " حج عن نفسك ثم حج عن شبرمة .صحيح (رواه أبوداود)