ACJU/NGS/2023/100

2023.03.08 (1444.08.15)

 

உலகில் படைக்கப்பட்ட அத்தனை படைப்பினங்களும் அதற்குரிய பணிகளோடும் தனித்துவத்தோடும் இயல்பு சுபாவங்களோடும் படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பெண்கள் குறித்து இஸ்லாம் கண்ணியமான பார்வையையும் உயர்ந்த வழிகாட்டலையும் கொண்டுள்ளது.


இஸ்லாத்துக்கு முற்பட்ட ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண்கள் பாரபட்சமாகவும் மிக மோசமாகவும் நடாத்தப்பட்டனர். பெண்களை உயிரும் உணர்வும் உள்ள மானுடப் படைப்பாக அவர்கள் கருதவேயில்லை. பெண் பிள்ளைகள் பிறந்தால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு பதிவுசெய்துள்ளது. 'அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான், அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்)' (ஸுறா அந்நஹ்ல்: 58-59)


இந்நிலையிலேயே இஸ்லாம் பெண்களுக்கான அந்தஸ்தையும் உரிமையையும் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்தியது. வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு வாரிசு சொத்தில் பங்கு வழங்கியது. தாயின் பாதத்தின் கீழ் சுவனம் இருக்கிறது என்று சுபசோபனம் கூறியது. மேலும் தனது பெண்மக்களை நல்ல முறையில் வளர்த்து, பராமரித்து கல்வியும் ஒழுக்கமும் வழங்கி அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்கின்றவர்களுக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் வழங்கியது.


பெண் என்பவள் ஆணின் சரிபாதி என்றும் மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் போலவே கணவன் மீது மனைவிக்கும் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை நிறைவேற்றுவது ஒவ்வொரு கணவன்மாரினதும் கடமை என்றும் மார்க்கம் உபதேசித்துள்ளது. அந்தவகையில் மணக்கொடை (மஹர்) வழங்கி திருமணம் முடிப்பது முதல் அவளது வாழ்வாதாரச் செலவுகளைப் பொறுப்பேற்று அவளுடன் அழகிய முறையில் அன்பாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்வது வரையிலான கணவனுக்குரிய அத்தனை பொறுப்புக்கள் பற்றியும் மறுமையில் அவன் விசாரிக்கப்படுவான் என்று மார்க்கம் அறிவுறுத்தியுள்ளது.


அந்தவகையில் பெண்ணின் பிறப்பு முதல் கல்வி, தனது வாழ்க்கைத் துணையை தெரிவு செய்தல், திருமணம், இல்லற வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கல் என அத்தனை விடயங்களிலும் இஸ்லாம் பெண்களை மரியாதையாகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடாத்துகிறது.


அல்லாஹு தஆலா தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். 'இறை நம்பிக்கையாளர்களே! பெண்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களில் ஏதேனுமொன்றை நீங்கள் வெறுத்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் அதில் ஏராளமான நலவுகளை வைத்திருக்ககூடும்.' (ஸுறா அந்நிஸா: 29)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'தம் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் ஆவார். நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவராக இருக்கின்றேன்.' (நூல்: திர்மிதி)


ஒருசில கலாசாரங்கள் பெண்ணின் குடும்பப் பாத்திரத்தையும் வீட்டை மையப்படுத்திய அவளது பணிகளையும் மறுக்கிறது. சிலர் அதனை கேலிக்குரியதாக நோக்குவதையும் அவதானிக்க முடிகிறது. வீடு, சமூகம் ஆகிய இவ்விரு பரப்புகளையும் இஸ்லாம் சமநிலையில் நோக்குவதோடு சம அந்தஸ்தினையும் வழங்கியிருக்கிறது.


பெண் என்பவள் பிரதானமாக இரண்டு கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறாள். முதலாவது, அவளது குடும்பமாகும். இங்கு தாய், மனைவி, சகோதரி என்று பெண்ணுக்கே உரிய உன்னதமான பாத்திரங்களை வகிப்பதன் மூலம் பொறுப்புமிக்க ஒரு குடும்பத்தினதும் சமூக உருவாக்கத்தினதும் அச்சாணியாய்த் திகழ்கிறாள். இரண்டாவது சமூகப் பரப்பாகும். இங்கு ஒரு பெண் தனது முதற்களமான குடும்பத்தின் அடிப்படைப் பணியை பாதிக்காத வகையிலும் மார்க்கம் காட்டியுள்ள ஒழுக்க விழுமியங்களைப் பேணியும் சமூகக் களத்தை நோக்கி வருவதை இஸ்லாம் வரவேற்கிறது.


பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் வருடாந்தம் மார்ச் மாதம் 08 திகதி ஐ.நா சபையினால் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் 'அவளே தேசத்தின் பெருமை' எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.


இந்நாளில் எமது தாய், மனைவி, சகோதரிகள் மற்றும் ஏனைய பெண் உறவுகள் அனைவரும் என்னாளும் மனமகிழ்ச்சியோடும் உடல், உள ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும் என வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம்.


மேலும் பெண்மக்கள் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை தமது கணவன் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து சாத்தியப்படுத்துவதோடு அவரவர்களுக்குரிய துறைகளில் பிரகாசிக்கவும் துடிப்புள்ள பெண் ஆளுமைகளாக மிளிரவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனை செய்கிறது.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா