ACJU/NGS/2023/098

2023.03.01 (1444.08.08)

 

சமூக வாழ்வியலில் தனிநபர்கள் அல்லது குறித்ததொரு குழுவை அநியாயமாக நடத்துதல் பாகுபாடு (Discrimination) என அழைக்கப்படுகிறது. வித்தியாசம் காட்டுதல், பாரபட்சமாக நடந்து கொள்ளுதல், பேதம் பாராட்டல் போன்ற ஒத்த கருத்துக்களை இப்பதம் சுட்டுகிறது.


எந்தவொரு பாகுபாடும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானதாகும். சட்டத்தின் முன் சமத்துவத்தையும் நியாயத்தையும் அது பறித்து விடுகிறது.


உலகளாவிய ரீதியில் சமூகம், பொருளாதாரம், இனம், தேசியம், அரசியல், கருத்தியல், இயலாமை மற்றும் குறைபாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களிடையேயும் சமூகங்களுக்கு மத்தியிலும் காலாகாலமாக பாகுபாடுகள் நிலவி வருகின்றன.


இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் அல்லாஹு தஆலாவின் கண்ணியமான படைப்பாவான். அல்குர்ஆன் அதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.


'நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியை கண்ணியப்படுத்தினோம். இன்னும் கடலிலும் கரையிலும் அவர்களை சுமந்து அவர்களுக்காக நல்ல உணவையும் பொருட்களையும் அளித்து நாம் படைத்துள்ள படைப்புகள் பலவற்றையும் விட அவர்களை தகுதியால் மேன்மைப்படுத்தினோம்.' (ஸுறா இஸ்ரா: 70)


அதேபோன்று மனிதர்கள் அனைவரும் சமம் என்றும் அவர்களிடையே உயர்வு தாழ்வும் பாகுபாடும் இருக்கக்கூடாது என்றும் மார்க்கம் வலியுறுத்தியிருக்கிறது.


'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர் உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்...'(ஸுறா ஹுஜுராத்: 13) என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.


இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'இறiவா! எங்கள் இரட்சகனே! அனைத்தினதும் இரட்சகனே! அரசனே! நீ அல்லாஹ்;, ஏகன். உனக்கு இணை யாருமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹ்மமத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனது அடிமை, உனது தூதர் எனவும் சாட்சி பகர்கிறேன். இறiவா! மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நான் சாட்சி பகர்கிறேன்.' (நூல்: அபூதாவூத், அஹ்மத்)


அனைத்து விதமான பாகுபாடுகளையும் எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் மார்ச் மாதம் 01 ஆம் திகதி பாகுபாடுகள் ஒழிப்பு தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.


மனிதன் என்ற அடிப்படையில் சமூக மட்டத்தில் ஒவ்வொருவரும் எவ்வித வேறுபாடுகளுமின்றி சமமாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய உரிமையும் சுதந்திரமும் கண்ணியமும் அங்கே முழுமையாக வழங்கப்பட வேண்டும். மனிதமும் சமத்துவமும் கொண்ட அழகியதொரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

மார்க்கத்தின் தனித்துவங்களைப் பேணி நடப்பதோடு மனிதர்கள் அனைவரிடமும் பாகுபாடின்றிப் பழகுவோம். இஸ்லாம் வலியுறுத்தியிருக்கின்ற சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற மானுட, பண்பாட்டுப் பெறுமானங்களை எமது குடும்பம், சமூகம், பிரதேசம், நாடு என அனைத்து மட்டங்களிலும் கடைபிடித்து சிறந்ததொரு சமூகமாக வாழ்வோமாக. அல்லாஹு தஆலா எமது எண்ணங்களையும் செயல்களையும் தூய்மைப்படுத்தி எல்லா நிலைகளிலும் மானுடம் பேணி, சகோதர வாஞ்சையுடன் வாழ நல்லருள் பாளிப்பானாக.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா