ACJU/NGS/2023/087
2023.02.09 (1444.07.17)

 

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

கடந்த திங்கள் கிழமை அதிகாலையில் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் மரணித்துள்ளதோடு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் காயமுற்றிருப்பதையும் நாம் அறிவோம்.


இந்நிகழ்வினால் மரணித்த எமது அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹு தஆலா அவனது சுவனத்தை வழங்க வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கு பொறுமையைக் கொடுக்க வேண்டும் எனவும் காயமுற்றிருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றோம்.


இவ்வாறான அனர்த்தங்கள், சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது அவை நீங்க தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபடுவதும், இதுபோன்ற நிகழ்வுகளின் போது மரணிக்கும் எமது சகோதரர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களுக்காக ஜனாஸாத் தொழுகை நடாத்துவதும் இஸ்லாமிய வழிகாட்டலாகும்.


அந்தவகையில் இவ்வனர்த்தத்தில் மரணித்த எமது சகோதரர்களுக்காக 2023.02.10 ஆம் திகதி நாளை வெள்ளிக் கிழமை ஜுமுஆத் தொழுகையைத் தொடர்ந்து (Gஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகை நடாத்துமாறு மஸ்ஜித் நிர்வாகிகளையும் இமாம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


அத்துடன் அப்பகுதியில் குறிப்பாகவும் உலகின் ஏனைய பகுதிகளில் பொதுவாகவும் ஏற்பட்டிருக்கும் சோதனைகள், சிரமங்கள் மற்றும் சீரற்ற நிலைமைகள் நீங்கி சீரான நிலை ஏற்பட்டு மக்கள் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு ஐவேளைத் தொழுகைகளில் 'குனூத் அன்னாஸிலா'வை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மஸ்ஜித் இமாம்களை கேட்டுக் கொள்கின்றது.


அத்துடன் குனூத் அன்னாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.


• اللهمَّ إنَّا نَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. (صحيح البخاري)


• اللَّهُمَّ لاَ تَقْتُلْنا بِغَضَبِكَ، ولاَ تُهْلِكْنا بِعَذابِكَ، وعافِنا قَبْلَ ذَلِكَ. (سنن الترمذي)


• اللهمَّ إنَّا نَسألُكَ العفوَ والعافيةَ في ديننا ودُنْيانا وأَهْلنا ومالنا، اللَّهُمَّ استُر عَوْراتنا وآمِن رَوعاتنا، اللَّهُمَّ احفَظنا من بينِ أيدينا ومن خَلفنا وعن يميننا وعن شِمالنا ومِن فَوقنا، ونَعوذُ بعَظمتِكَ أن نُغتالَ مِن تَحتنا'. (مسند أحمد)


• اللَّهُمَّ اغفِرْ لِمًنْ مَاتَ شَهِيْدًا فِيْ هذِهِ الزَّلْزَلَةِ وِارْفَعْ دَرَجَتَهُمْ وَأفْرِغْ الصَّبْرَ فِيْ قُلُوْبِ مَنْ بَقِيَ مِنْهُمْ وَاشْفِ مَرْضَاهُمْ يَارَبَّ اْلعَالَمِيْنَ. وَارْفَع البَلاء عَنْ بَلَدِنَا وَبِلادِ المُسْلِمِيْنَ يَاذَا الجَلالِ والإكْرامِ.

 

 

 

முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா