ACJU/NGS/2023/093

2023.02.21 (1444.07.29)

 

ஒரு மனிதன் சிறுபராயத்திலிருந்து தன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு பிரயோகிக்கும் மொழி அவனது தாய்மொழியாக கருதப்படுகிறது.


மொழி என்பது தகவல் தொடர்பாடலுக்குப் பயன்படும் ஒரு கருவி மாத்திரமல்ல. அது பேசப்படும் சமூகத்தினதும் நிலப்பரப்பினதும் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாகவும் ஒரு சமூகத்தின் கலாசாரம் எந்தளவிற்கு மேன்மையும் தொன்மையும் கொண்டது என்பதற்குக் குறியீடாகவும் திகழ்கிறது.


அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் மொழிகளை அவனது அத்தாட்சிகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளான். 'மேலும் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (ஸுரா ரூம்: 22)


அதேபோன்று ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியதாகவும் அந்தந்த சமுதாயத்திலிருந்தே இறைதூதர்களை தெரிவு செய்ததாகவும் மேலும் அவரவர் தாய்மொழியிலேயே அவர்களுக்கான வேதங்களை அருளியதாகவும் அவன் சாட்சி கூறுகிறான்.


'ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு தெளிவாக விளக்கிக் கூறவேண்டும் என்பதற்காக அவர்களுடைய மொழியிலேயே போதிக்கும்படி நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்.' (ஸுரா இப்ராஹிம்: 04) என அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.


இதன்மூலம் ஒரு விடயத்தை முதன் முதலில் அறிந்து கொள்வதற்கும் விளங்கப்படுத்துவதற்கும் அவரவர் தாய்மொழியே சிறந்த ஊடகம் என்பதையும் தாய்மொழியின் அவசியமும் இங்கு உணர்த்தப்படுகிறது.


ஒவ்வொருவரதும் சிந்தனை ஆற்றலுக்கு அவரது தாய்மொழியே பெரிதும் துணைநிற்கிறது. ஆக்கபூர்வமான சிந்தனைகள் முதலில் தாய்மொழியிலேயே ஊற்றெடுக்கின்றன. இதனாலேயே பிள்ளைகள் தமது ஆரம்பக் கல்வியை அவர்களது தாய்மொழியில் கற்றுக் கொள்வதே சிறந்தது என கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


மொழி மற்றும் கலாசார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பன்மொழிகளை மேம்படுத்தும் நோக்கிலும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.


இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம், மலே, மேமன் மற்றும் வேடுவ (வெத்தா) மொழிகள் தாய் மொழிகளாக மக்களால் பேசப்படுகின்றன. தாய்மொழி என்பது ஒவ்வொரு சமூகத்தினருக்குமான தனித்துவமான அடையாளமாகும். நாம் ஒவ்வொருவரும் எமது தாய்மொழியை நேசிப்பதோடு ஏனைய மொழிகளையும் அதன் கலாசார பாரம்பரியங்களையும் மதித்து நடக்க கடமைப்பட்டுள்ளோம். மொழி அடிப்படையில் மக்களிடையே பாகுபாடுளைக் காட்டாதிருப்போம். மொழி மற்றும் கலாசார பன்மைத்துவத்தை மதித்து மானுட வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பங்களிப்புச் செய்வோம்.


அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் எமது தாய்மொழியில் சிறந்த புலமையைத் தருவதோடு ஏனைய மொழிகளின் அறிவையும் பரிச்சயத்தையும் தந்து சிறந்ததொரு அறிவுப் பாரம்பரியத்தை உருவாக்க உதவி செய்வானாக எனப் பிரார்த்தனை செய்கிறோம்.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா