ACJU/RPL/2024/17/24
2024.06.12 (1445.12.05)

 

குழந்தைப் பருவம் மனித வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய பருவமாகும். இக்காலத்தில் குழந்தைகளது இறைவிசுவாசம், ஒழுக்கம், கல்வி, சமயம், சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்பது இஸ்லாமியப் பார்வையாகும்.

"என்னருமை மகனே! தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்." (சூரா லுக்மான் : 17)

இத்திருமறை வசனம் அடிப்படையான சமயக் கடமை, நன்மையான சூழலைத் தோற்றுவித்தல், வாழ்வில் பொறுமை, சகிப்புத் தன்மை போன்ற உறுதிமிக்கச் செயற்களில் குழந்தைகள் பழக்கப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்த்துகின்றது.

அத்துடன் சிறார்கள் மீது அன்புகாட்டப்பட வேண்டும் என்பது அண்ணலாரின் அதிமுக்கிய போதனைகளில் உள்ளதாகும்.

'சிறார்கள் மீது இரக்கம் காட்டாதவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல என்று அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.' (அபூ தாவூத் : 1943, தர்மிதி : 1920)

பேரக்குழந்தைகளான ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸுஜூதில் இருக்கும் வேளையில் அவர்களின் மீது ஏறிக்கொள்வார்கள் அவர்கள் கீழே இறங்கும் வரையில் ஸுஜூதில் இருந்து எழுந்திருக்கமாட்டார்கள்.

ஒழுக்கம், நற்குணங்கள் போன்றன அவர்களது சிறுபராயத்தில் பயிற்றப்பட வேண்டும்.

பத்து வயதுடைய அன்புக் குழந்தை அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களது அன்புத் தாயார் அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பண்பாட்டுப் பயிற்சிக்காக ஒப்படைத்தார்கள்.

இஸ்லாத்திலும் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களிலும் மிகுந்த கவனத்தைப் பெற்ற பலவீனமான மனிதரே குழந்தை ஆவார். குழ்ந்தையின் உடல், உளவியல் திறன்கள் இன்று உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.

எனவே குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கான காரணங்களைக் கண்டறிதல், அவர்களின் கண்ணியம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகளின் வேலைக்கு பொருத்தமான கட்டுப்பாடுகளை அமைத்து அவர்கள் செய்யும் வேலையில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக சமூகவியலாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளைக் கல்வி படிக்கவைப்பதிலும், ஒழுக்கவிழுமியங்கள் நிறைந்தவர்களாக வளர்ப்பதிலும் தேசத்திற்கும் சமூகத்திற்கும் நற்பிரஜைகளாக மாற்றுவதிலும் பெற்றோர், பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும்.

சிறார்கள் போர்களில் கலந்துகொள்வதற்காக அதிகப் பிரயத்தனம் எடுத்து முயற்சிப்பார்கள். எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறார்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஏனைனில் சிறார்களது உள்ளங்களில் அவர்களது அப்பருவத்தில் அவர்களது தகுதிக்கு பொருத்தமில்லாததும் கனதியானதுமான எப்பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்துவதை இஸ்லாம் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ இல்லை.

ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் (child labour) சட்டப்படி 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக் கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக் கூடாது என்பதாகும்.

யுனிசெப் அறிக்கையின்படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைகள் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அபாயகரமான தொழில்கள், குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனம், பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள், சமூக மேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதை கண்டறிந்து அவர்கள் எதிர்கால நற்பிரஜைகள் ஆவதற்குத் தகுதியானவர்களாக தரப்படுத்தப்பட வேண்டும்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா