அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு!

 

'இஸ்ராவும் மிஃராஜும் - படிப்பினைகளும்' எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு வெளியீட்டுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பினை பின்வரும் இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

இணைப்பு:

https://drive.google.com/file/d/1IYXve19jdKV0AaUZ_J3xdlQ4AzvZFnVK/view?usp=sharing

------------------------------------------------------------------------------------------------

அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் பின்னணி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்வில் சந்தித்த மிகக் கவலையான நிகழ்வுகளான அவர்களது அன்பு மனைவி கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இழப்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வளர்த்து பராமரித்து தஃவாப் பணியில் அவர்களுக்கு பக்க பலமாக இருந்த தனது தந்தையின் சகோதரரான அபூதாலிப் அவர்களின் இழப்பு மற்றும் தாயிபில் அவர்கள் சந்தித்த இன்னல்கள் ஆகியவைகளும் இடம்பெற்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் நிகழ்வு இடம்பெற்றது.

 

எப்பொழுது நிகழ்ந்தது?

இந்த அற்புத நிகழ்வு நடந்த காலம் குறித்து மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. இருப்பினும், சில மார்க்க அறிஞர்கள் இந்நிகழ்வு ரஜப் மாதத்தின் இருபத்தேழாம் இரவு நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இந்நிகழ்வு நினைவுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் நிகழ்வு

அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் ஒன்றாகும்.

 

அல்-இஸ்ரா:

'இஸ்ரா' என்றால் இரவுப்பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ஜெரூஸலத்திலுள்ள 'மஸ்ஜிதுல் அக்ஸா' விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே 'அல்-இஸ்ரா' என்று அழைக்கப்படுகின்றது.

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ ‏(17:01)

"(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறு செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன், பார்ப்பவன்." (17:01)

அல்-மிஃராஜ்:

'மிஃராஜ்' என்றால் உயரத்துக்கு ஏறுவதைக் குறிக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து ஏழு வானங்களையும் தாண்டி 'ஸித்ரதுல் முன்தஹா' வரை விண்வெளிப் பயணம் செய்தார்கள். இதுவே மிஃராஜ் என்று கூறப்படுகின்றது. இவ்விரண்டும் அல்-குர்ஆன், ஹதீஸ்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

"'ஸித்ரத்துல் முன்தஹா' எனும் இடத்தில் இவர் மீண்டும் ஒரு தடவை (ஜிப்ரீல் ஆகிய) அவரைக் கண்டார். அங்குதான் 'ஜன்னத்துல் மஃவா” (எனும் சுவர்க்கம்) இருக்கின்றது." (53: 13-15)1

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடத்தில் வைத்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்தது தொடர்பாக மேற்குறித்த வசனம் பேசுகின்றது. எனவே, இந்த வசனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றதை உறுதிப்படுத்துகின்றது.

மேலும் அல்-இஸ்ரா வல்-மிஃராஜுடைய நிகழ்வைப் பற்றி பல ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவஞ்சி சில ஹதீஸ்கள் மாத்திரம் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

'நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை 'ஸம்ஸம்' தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு அதை மூடி விட்டார்கள். பிறகு என் கையைப் பிடித்து (அழைத்து)க்கொண்டு விண்ணில் ஏறினார்கள்.' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 349)2

எனவே, அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் ஆகிய இரண்டுமே அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

 

அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் பயணத்தில் நபிமார்களைச் சந்தித்தல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலக பயணத்தை மேற்கொண்ட போது நபிமார்களை சந்தித்தார்கள்

முதலாவது வானத்தில்: ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி, சமாதானம் உண்டாவதாக!) அவர்களைச் சந்தித்தார்கள்.

இரண்டாவது வானத்தில்: ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்களைச் சந்தித்தார்கள்.

மூன்றாவது வானத்தில்: யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தார்கள்.

நான்காவது வானத்தில்: இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தார்கள்.

ஐந்தாவது வானத்தில்: ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தார்கள்.

ஆறாவது வானத்தில்: மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தார்கள்.

ஏழாவது வானத்தில்: இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தார்கள்.

 

அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் மூலம் பெறப்படும் படிப்பினைகள்

• அல்லாஹு தஆலா மிக வல்லமையுள்ளவன்: படைப்பினங்களுக்குள்ள எந்த விதிகளும் படைப்பாளனுக்கு இல்லை. அவன் தான் விரும்பியதை செய்யும் ஆற்றல் மிக்கவனாவான்.

• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்தஸ்தையும், அல்லாஹ்வின் நெருக்கத்தையும் உறுதிப்படுத்தல்: அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் நிகழ்வாகிறது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துவதற்காகவும், அவர்களின் உள்ளத்திற்கு உறுதியையும் ஆறுதலையும் அளிப்பதற்காகவும் ஏற்படுத்திய ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலக்குகள், முன்னைய நபிமார்கள், சுவனம், நரகம் என பல விடயங்கள் பற்றி போதித்துக் கொண்டிருந்தார்கள்.

நபியவர்கள் போதிக்கும் விடயங்களை நிதர்சனமாக அவர்களுக்குக் காட்ட வேண்டுமென அல்லாஹு தஆலா விரும்பினான். ஏனெனில் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஈடு இணையற்ற உறுதியையும், தஃவாக் களத்தில் உற்சாகத்தையும் அளிக்க வல்லதாகும். மேற்குறிப்பிட்ட 17ஆம் அத்தியாயத்தின் முதலாம் வசனத்தில் எங்கள் அத்தாட்சிகளை அவருக்குக் காட்டுவதற்காக இந்நிகழ்வை ஏற்படுத்தியதாக அல்லாஹு தஆலாவே குறிப்பிடுகின்றான்.

• ஈமானைப் பரிசீலித்தல்: அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மையாகவும் உறுதியாகவும் நம்புபவர்கள் யார் என்பது இந்நிகழ்வு மூலம் பரீட்சிக்கப்பட்டது. ஏனெனில் அல்லாஹ்வின் வல்லமையை முழுமையாக நம்பியவர்களால் மட்டுமே இந்த அற்புதமான நிகழ்வுகளை நம்பமுடியும். மேலும் அல்-குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லக்கூடிய தகவல்களை எங்களுடைய அறிவால் உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் எங்களுடைய பகுத்தறிவுக்கு புலப்படாமல் இருந்தாலும் உண்மை என நம்புவது கட்டாயமாகும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகின்றது.

"நாம் உமக்குக் காட்டிய காட்சியை மக்களுக்கு ஒரு சோதனைக்காகவேயன்றி காட்டவில்லை." (17:60)3 என அல்லாஹு தஆலா கூறுகின்றான்.

• அல்-இஸ்ரா மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா: அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் பற்றி நினைவு கூறப்படும் போதெல்லாம் பலஸ்தீன் பற்றியும் மஸ்ஜிதுல் அக்ஸா பற்றியும் நினைவு கூறப்படுகின்றது. ஏனெனில், அல்-இஸ்ரா என்று கூறப்படும் இராப் பயணம் என்பது மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகும். பின்னர், அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அங்கிருந்து விண்ணுலகப் பயணத்தை மேற்கொள்ள வைத்தான். இதனூடாக மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தை அல்லாஹு தஆலா வலியுறுத்துகின்றான்.

• அல்-மிஃராஜும் தொழுகையும்: மிஃராஜ் நிகழ்வின் போதுதான் தொழுகை கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் தொழுகையின் முக்கியத்துவம் எமக்கு உணர்த்தப்படுகின்றது.

எனவே, இவ்வருடம் சங்கை மிகு ரஜப் மாதத்தின் அல்-இஸ்ரா வல்-மிஃராஜ் நிகழ்வை நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில், இந்நாட்டில் அபிவிருத்தி மேலோங்கவும், நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவும், உலகில் நீதியும் சமாதானமும் நிகழ வேண்டுமென்றும், அல்லாஹ்வின் கட்டளையையும் நபியவர்களின் ஸுன்னாக்களையும் நமது வாழ்வில் பின்பற்ற வேண்டுமென்றும், அதனூடாக மனித சமுதாயத்திற்கு நலவுகளை ஏற்படுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை நாம் அனைவரும் பெற வேண்டுமென்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

[1]  وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ (‏53:13) عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى (‏53:14 ) عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰىؕ (‏53:15)

 

[2] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهُ فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ. قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا جِبْرِيلُ. قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ مَعِي مُحَمَّدٌ صلى الله عليه وسلم. فَقَالَ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. فَلَمَّا فَتَحَ عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ أَسْوِدَةٌ وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ لِجِبْرِيلَ مَنْ هَذَا قَالَ هَذَا آدَمُ. وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ الْيَمِينِ مِنْهُمْ أَهْلُ الْجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ. فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ فَفَتَحَ "". قَالَ أَنَسٌ فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ وَإِدْرِيسَ وَمُوسَى وَعِيسَى وَإِبْرَاهِيمَ ـ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ـ وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ. قَالَ أَنَسٌ فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم بِإِدْرِيسَ قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ. ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى.

 ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا عِيسَى. ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم "". قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ كَانَا يَقُولاَنِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ "". قَالَ ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَفَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ خَمْسِينَ صَلاَةً. قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ. فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى قُلْتُ وَضَعَ شَطْرَهَا. فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ. فَقَالَ هِيَ خَمْسٌ وَهْىَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ. فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ. فَقُلْتُ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي. ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ، ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ " (صحيح البخاري : 349)

 

[3] وَمَا جَعَلْنَا الرُّءْيَا الَّتِىْۤ اَرَيْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ  (‏17:60)