2023.11.14 (1445.04.29)
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை சம்பந்தமான வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் 2023.11.17 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதோடு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் (www.muslimaffairs.gov.lk) என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் வெளியிடப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையவழி மூலமாக மாத்திரம் கோரப்படவுள்ள விண்ணப்பங்கள் 2023.11.27 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்ட அஹதிய்யா பாடசாலைகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அஹதிய்யா பரீட்சை தொடர்பிலான பரீட்சைத் திணைக்களத்தின் குறித்த அறிவிப்பை ஜம்இய்யாவின் மாவட்ட பிரதேசக் கிளைகளின் பிரதிநிதிகள் தத்தமது பகுதிகளில் உள்ள அரபு மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எடுத்துரைப்பதோடு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஆலிம்கள் இப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கல்வி ரீதியான வழிகாட்டல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.
அஹதிய்யா பரீட்சை தொடர்பிலான மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களத்தின் 011-2785230 / 011-2786150 / 011-3661224 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தொடர்பு கொள்ளவும் முடியும்.
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம்
செயலாளர் - கல்விப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா