ACJU/FRL/2020/21-238
2020.11.05

1442.03.17

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளினால் 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்ற ஒரு வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2020.06.16 ஆம் திகதி “கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலக்கம் 2 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


“ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுது கொள்ள வேண்டும்.” https://acju.lk/news-ta/acju-news-ta/item/1964-19


இந்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஆலிம்கள் பல வருடகாலங்களாக இவ்வடிப்படையிலேயே ஜுமுஆவுடைய இந்த அடையாளத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது.


நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலைமை எதிர்காலத்தில் நீடிக்காமல் அவசரமாக நீங்கி, நல்ல நிலைமை உண்டாகி, ஜுமுஆவை வழமை போன்று நிறைவேற்ற அல்லாஹூ தஆலா அனுகூலம் புரிய வேண்டும் என்றும், அல்லாஹூ தஆலா உங்களது கவலைகளுக்கு பூர்த்தியான கூலிகளைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.


வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

2018.03.08 

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளைக் கவனத்திற்கொண்டு இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான புனித ஜும்ஆவுடைய தினமாகிய நாளை (2018.03.9) பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்திற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயமாக வேண்டிக் கொள்கின்றது.


1)ஜும்ஆவுடைய நேரத்தில் மஸ்ஜித்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துகொள்ளுமாறும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் சகோதரர்கள் ழுஹ்ர் தொழுகையைத் தொழுதுகொள்ளலாம். இவர்களுக்கு ஜுமுஆக் கடமையாகமாட்டாது.


2)ஓர் ஊரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மஸ்ஜித்களில் ஜும்ஆக்கள் நடைபெறும் வழமை இருந்தால், அம்மஸ்ஜித்களின் ஜும்ஆவுடைய நேரத்தை நிர்வாகிகள் தங்களுக்குள் கலந்துரையாடி தேவைப்படின் வித்தியாசப்படுத்திக் கொள்ளலாம்.


3)முஸ்லிம்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்பு, பண்பாடு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்டு தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும்.


4)குத்பாப் பிரசங்கத்தையும் தொழுகையையும் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்டுள்ள மாதிரி குத்பாவை முன்வைத்து, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேற்படாத வகையில் சுருக்கிக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.


5)தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகள் அனைத்து முஸ்லிம்களையும் ஆழ்ந்த கவலைக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாக்கியிருக்கும் இந்நிலையில், அவர்களுக்கு மன ஆறுதலாகவும் முஸ்லிம்களின் உணர்வுகள்; பாதகமான முறையில் தூண்டப்படாமலும் குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.


6)நாட்டு முஸ்லிம்களினதும் உலக முஸ்லிம்களினதும் நிலமைகள் சீராகி நிம்மதியாகவும் கண்ணியமாக வாழ துஆ, இஸ்திக்ஃபார், நோன்பு, சதகா, போன்ற நல்லமல்களின் மூலம் அல்லாஹுதஆலாவின் பக்கம் மக்களைத் திசை திருப்புதல் வேண்டும்.


7)அவசரகால சட்டம் நாட்டில் அமுலில் உள்ளதால் ஜும்ஆ முடிந்தவுடன் நாட்டுச் சட்டத்தை மதித்து அமைதியாக கலைந்து சென்று தத்தமது வேலைகளில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 

இவ்வண்ணம்

 

அஷ்-ஷைக் இல்யாஸ் மஹ்மூத்
செயலாளர்
பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா