ACJU/NGS/2021/012

1442.07.11

2021.02.24

 

அன்புடையீர்!


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு


எக்காலத்திலும் நாம் எல்லா விடயங்களிலும் மார்க்க வழிகாட்டலின் அடிப்படையிலேயே எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுற்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் எமது செயல்பாடுகள் அனைத்தும் மார்க்க வழிகாட்டல்களுக்கு ஏற்ப அமையும் போதே இம்மையிலும், மறுமையிலும் நன்மையைப் பெற முடியும்.


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏ (49:06)


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:06)


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ» (صحيح مسلم : 06)


ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண் : 06)


ஒரு தனிநபரைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றியோ ஏதேனும் செய்திகள் கிடைக்கும் போது, அதனை நன்கு விசாரித்து மார்க்க முறைப்படி உறுதிப்படுத்தாது, அதனை உண்மைப்படுத்துவதோ அல்லது மற்றவரிடம் கூறுவதோ பெரும்பாவமாகும். மேற்கூறப்பட்ட அல்-குர்ஆன் வசனமும், நபிமொழியும் எமக்கு இதனையே போதித்துள்ளது.


தற்போதைய சூழ்நிலையில் ஒருசிலர் தமது சுயநோக்கங்களுக்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்துத் தாக்கி, பொய்யான செய்திகளை சமூக ஊடகங்களில் பரவ விடுவதை காண்கின்றோம். இச்செயல் மார்க்க ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் தவறான ஒன்றாகும்.


وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ (04:83)


மேலும், பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். (04:83)


مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ (50:18)


(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)


ஒரு முஸ்லிமைப் பொருத்தவரையில் எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹு தஆலா கூறும், இவ்வசனத்தை தனது உள்ளத்தில் நிலைத்திருக்கச் செய்வது ஈமானின் ஒரு பகுதியாகும்.


எனவே, உங்களிடம் யாரைப்பற்றியாவது அல்லது எந்த நிறுவனத்தைப் பற்றியாவது அல்லது ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றியாவது செய்திகள் வரும்போது, மிகவும் கவனமாக நடந்து கொள்வதுடன், உரியவர்களிடம் தெளிவைப் பெறாது அதனை உண்மைப்படுத்தவோ பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்ளவோ வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


குறிப்பாக ஜம்இய்யாவைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ அல்லது வேறு ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது வேறு ஒரு தனிநபரைப் பற்றியோ, செய்திகள் வரும்போது அதனை உறுதிப்படுத்தாது, பகிர்வதை தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


மேலும், பிழையான, உறுதியில்லாத செய்திகளை வெளியிடுபவர்கள், இவற்றின் மூலமாக இம்மையிலும், மறுமையிலும் ஏற்படும் பாவத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவற்றிலிருந்து தவர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.


ஜஸாக்குமுல்லாஹு கைரா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா