10.11.2020 (23.03.1442)


தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம். பாதிக்கப்பட்ட அனைவரும் அவசரமாக இந்நோயிலிருந்து குணமடைய வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.


இவ்வைரஸின் பாதிப்பால் நாட்டில் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்டவர்களில் நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களை அடையாளங் கண்டு இன மத பேதமின்றி அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.


“அயலவன் பசித்திருக்க தான் மாத்திரம் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மை விசுவாசியல்ல” என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். உணவளிப்பது என்பது இஸ்லாத்தில் பெரும் நன்மையை ஈட்டித்தரும் செயலாகும். அதேபோன்று சதகாக்கள் சோதனைகளை விட்டும் எம்மைப் பாதுகாக்கும் என்பதும் நபி மொழியாகும். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமாக சதகாக்களில் ஈடுபடுவது மிகச் சிறந்த அமலாகும்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட/ பிரதேசக் கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், மஸ்ஜித்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தத்தம் பிரதேசங்களில் வாழும் மக்களை இனங்கண்டு உதவிகளை செய்யவதோடு, பக்கத்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும் தங்கள் உதவிக் கரங்களை நீட்டுமாறு ஜம்இய்யா மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது.


மேலும், இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றவர்கள் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து, உரிய அனுமதிகளைப் பெற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


கொவிட் 19 வைரஸின் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களும், அப்பிரதேசங்களில் வாழ் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டிய ஜம்இய்யாக் கிளைகளின் தகவல்களும் பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் குறிப்பிட்ட ஜம்இய்யாக் கிளைகள் உலர் உணவுப் பொதிகளை வழங்குதல் போன்ற தம்மாலான உதவிகளை வழங்கி நன்மைகளை பெற்றுக் கொள்வதோடு ஏனைய பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் உதவிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.


எனவே, மேற்கூறப்பட்ட அடிப்படையில் உதவிகளை மேற்கொள்ள முன்வருபவர்கள் ஜம்இய்யாவின் சமூக சேவைக் குழு ஒருங்கிணைப்பாளரான அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் 0777571876 அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தேவையான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் இத்தால் குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.


உதவித் தேவைப்படும் பிரதேசங்கள் மற்றும் உதவிகளை மேற்கொள்ளும் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் விபரங்கள்

 

கொவிட் 19 நோயின் காரணத்தினால் ஊரடங்கில் உள்ள பிரதேசங்கள்

உதவிகளை மேற்கொள்வதற்காக பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதிகள்/ஜம்இய்யா கிளைகள்
மாவட்டம்  ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகள் 
கொழும்பு 
மட்டக்குளிய, முகத்துவாரம், புளுமென்டோல், கொட்டாஞ்சேனை.  மடவளை பிரதேசம்
கிரேண்ட்பாஸ், கரையோர பிரதேச பொலிஸ் பிரிவு, ஆட்டுப்பட்டித் தெரு.  கண்டி நகரம்
மாளிகாவத்தை, தெமட்டகொட

 

அக்குரணை, கல்ஹின்னை


வெல்லம்பிட்டிய
வாழைத்தோட்டம்
பொரலை.
கம்பஹா

வத்தளை, பேலியகொட,

 

மாத்தறை மாவட்டம், ஹம்பாந்தோட்டை மாவட்டம்

கடவத்தை, ராகம,
நீர்கொழும்பு
பமுணுகம
ஜா-எல, சப்புகஸ்கந்த
களுத்துறை ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவு மற்றும் வேகட மேற்கு கிராம சேவையாளர் பிரிவு  காலி மாவட்டம்
கேகாலை 
மாவனெல்ல
மாத்தளை மாவட்டம், பலாங்கொடை நகரம்.
ருவன்வெல்ல
குருநாகல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு குருணாகலை மாவட்டம்
மட்டக்களப்பு  வாழைச்சேனை பொலிஸ் பிரிவு காத்தானகுடி, ஏறாவூர்
     
குறிப்பு: கொழும்பு மாவட்டக் கிளை பொதுவாக அனைத்து பிரதேசங்களிலும் செயற்படும் 

 

All Ceylon Jamiyyathul Ulama
AC NO 1901005000
Commercial Bank
IBU Branch

 

All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0010112110014
Amana Bank
Main Branch

 

 

 அஷ்-ஷைக் கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) 
செயலாளர் - கிளைகள் விவகாரக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா
உப தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 


2020.11.05 (1442.03.17)


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் முன்பு இல்லாதது போன்று தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் மீண்டும் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.


இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும். பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹூ தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்;து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.


1. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் அதன் சட்டங்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ளல். (2020.04.06 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/244-2020-04-06-15-00-00 )


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம், அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேரவும் வேண்டாம். (ஸஹீஹூல் புகாரி: 5729, ஸஹீஹூல் முஸ்லிம்: 2219)


2. சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல் மற்றும் 1 மீட்டர் இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்றி செயற்படல்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும். (ஸஹீஹூல் புகாரி: 5771, ஸஹீஹூல் முஸ்லிம்: 2221)


3. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவசிய தேவைகளுக்கே அன்றி வெளி இடங்களுக்கு செல்வதையும், பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக் கொள்ளல்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றனர். (முஸ்னத் அஹ்மத்)


4. ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உரியநேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல். (2020.05.09 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/261-2020-05-24-14-27-19 )

 

5. மஸ்ஜித்களின் விடயங்களில் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.

 

6. இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல ஒரு மாத காலத்திற்கு குனூத் அந்-நாஸிலாவை ஐவேளை தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, துஆ, திக்ர், இஸ்திஃபார், நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தித்தல். (குனூத் அந்-நாஸிலா பற்றிய விரிவான விளக்கம் 2020.10.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது :https://acju.lk/news-ta/acju-news-ta/item/2005-covid-19)


அத்துடன் பின்வரும் துஆவை அடிக்கடி ஓதிவருதல்:

"‏ اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ‏"‏


(பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். (அபூதாவுத் 1554)

 

7. ஆலிம்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

 


அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை மஸ்ஜித்கள் மூலம் பொது மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு ஜம்இய்யாவின் கிளைகளையும் மஸ்ஜித் நிரவாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.