அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நேற்று 2017.10.17ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணி முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இரவு பத்து மணி வரை நீடித்த இக்கலந்துரையாடலில்

  • வட, கிழக்கு எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஒன்று பட்டு செயற்படுதல்.
  • ஊடகங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகோதர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய வீணான விமர்சனங்கள் மற்றும் தவறான செய்திகளை பரப்புவதில் இருந்து தவிர்ந்து கொள்ளல்.
  • முஸ்லிம் அமைச்சர்கள் தமது கட்சிகளின் அலுவல்களை பார்க்கும் அதே நேரம் தமக்குள் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கி ஒற்றுமையாக சேரந்து போக முடியுமான கட்டங்களில் ஒத்துழைத்தல்.

      போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்ட அதே நேரம் கௌரவ அமைச்சர் பௌசி அவர்களின் ஒருங்கிணைப்பில் முஸ்லிம்கள் சார்ந்த  விடயங்களை கவனிப்பதாகவும் அக்கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.

    இக்கலந்துரையாடலிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் தலைமை தாங்கி தேவையான வழிகாட்டல்களை வழங்கிய அதே நேரம் ஒற்றுமையின் அவசியம் பற்றி வலியுருத்தினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு சார்பாக அதன் உபதலைவர்கள் அடங்களாக 13 பேர் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை பொலன்னறுவை மாவட்டம் கதுறுவெல ஜும்ஆ மஸ்ஜில் இன்று  18.10.2017ம் திகதி புதன் கிழமை காலை 9.00 மணி முதல் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

மேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

  1. சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு - அஷ்-ஷைக் உமர்தீன் (செயலாளர் பிரசாரக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
  2. பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் - அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
  3. உலமாக்களுக்கான குத்பா கரத்தரங்கு -அஷ்-ஷைக் அலியார் (நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.)
  4. காழிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுக்கான கலந்துரையாடல் - அஷ்-ஷைக் ஹலீல். (பொருளாலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
  5. தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி (தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
  6. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் எனும் சிறு நூல்கள் பற்றிய சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - PPT  - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் – இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2017.10.13 / 1439.01.22

ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவோ அதன் தலைவரோ யாரிடமும் வேண்டிக் கொள்ள வில்லை

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் 'வழக்குகளை வாபஸ் பெற்று ஞானசார தேரரை காப்பாற்ற முயற்சி' என்ற செய்தி பரவி வருகின்றுது. இதில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் வேண்டியதாக கூறப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். உண்மைக்கு புறம்பான இவ்வாறான செய்திகளை எழுதுகின்றவர்களும் பரப்புபவர்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.

மேற்படி விடயம் சம்பந்தமாக பின்வரும் விடயத்தை அகில இகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா அனைவருக்கும் அறியத்தர விரும்புகின்றது.

இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எடுத்துள்ள முயற்சிகள் நாம் அறிந்ததே. இதில் 2012 ஆம் ஆண்டு ஜம்இய்யா வெளியிட்ட சகவாழ்வு பிரகடனம் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வகையில் இஸ்லாம் பற்றிய தெளிவு பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும், சத்தியம் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜம்இய்யா செயற்படுகின்றது. அதற்கான முயற்சிகளாகவே ஜம்இய்யாவின் சமாஜ சங்வாத புத்தக வெளியீடும் பிற மதத் தலைவர்களுடனான சந்திப்புகளும் காணப்படுகின்றன.

ஞானசார தேரரோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று ஜம்இய்யாவோ ஜம்இய்யாவின் தலைவரோ யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்றிய சில சந்தேகங்கள் பற்றி கலந்துரையாடி முஸ்லிம்களுடனான தனது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புவதாகவும் அதற்காக அவருடன் சந்திப்பொன்று நடாத்தப்பட இருப்பதாகவும் கூறி அதில் உலமாக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜம்இய்யாவிடம் வேண்டிக்கொண்டனர். இதன்போது குறித்த இவ்விடயத்தில் அனுபமுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களையும் பிரிதொரு சட்டத்தரணியையும் ஜம்இய்யாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என ஆலோசனை பெற்றார். அதன்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் குறித்த தேரரை சந்திப்பதில் பிரச்சினையில்லை என்றும் தான் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றும் ஞானசார தேரருடனான வழக்குகள் விடயத்தில் அவர் நீதிமன்றத்திலே தனது பிழையை ஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள அஷ்-ஷைக் பாழில் பாரூக் அனுப்பப்பட்டார்.

அடுத்தநாள் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அஷ்-ஷைக் பாழில் பாரூக் அவர்;கள் குறித்த தேரர் மீதான வழக்குகள் பற்றி அங்கு கலந்துரையாடவில்லை என்பதாகவும் மாறாக அவரிடம் காணப்பட்ட இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்கு பதில் வழங்கும் வகையியே சந்திப்பு நடைபெற்றதாகவும் உறுதிப்படுத்தினார்.

இவ்விடயம் ஜம்இய்யாவின் கடந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது, குறித்த தேரர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தான் முன்வைத்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்டு, உண்மையில் இஸ்லாம் பற்றிய அவரது தப்பபிப்பிராயங்களுக்கு தெளிவு பெற விரும்பினால் அவருடன் உரையாடலை தொடரலாம் என்றும் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக குறித்த சட்டத்தரணிகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

எனவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். பிழையான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/NGS/09-17/002

21.09.2017/ 29.12.1438

சமயோசிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம்

புனித இஸ்லாம் இன, மத பேதமின்றி அனைத்து உயிர்களையும் சமமாக  மதிக்கின்றது. எந்தவோர் உயிரும் அநியாயமாகக் கொலை செய்யப்பட அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவரை அநியாயமாகக் கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொலை செய்த குற்றத்துக்கு சமம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ரோஹிங்ய முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அநியாயமாக அவர்கள் கொன்றுகுவிக் கப்படுவதை முழு உலகமும் கண்டிக்கின்றது. நமது நாட்டு மக்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தமது கண்டனங்களைத் வெளியிட்டு வருகின்றனர்.

அல்லாஹுதஆலாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட  முஸ்லிம்களாகிய நாம் சோதனைகள், கஷ்டங்கள் வருகின்றபோது நமது பாவங்களிலிருந்து தௌபா செய்து மீளுதல், அவன் பக்கம் நெருங்குதல், அதிகதிகம் துஆ செய்தல் ஆகிய ஆன்மீக முயற்சிகளில் ஈடுபடுவதுடன் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதிலும் அவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தங்களை உருவாக்குவதிலும் முன்னிற்க வேண்டும். இதுவல்லாமல் பெரும்பான்மையாக பௌத்த மக்கள் வாழ்ந்து வரும் நமது நாட்டில் அவர்களது பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் வண்ணம் செயற்படுவது ஆரோக்கியமாகாது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் சுட்டிக் காட்ட விரும்புகின்றது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடயமாக ஆரம்ப கட்டத்திலேயே அந்நாட்டுத் தூதுவராலயம், ஐ.நா சபை இலங்கை ஜனாதிபதி முதலிய சகல தரப்பினருக்கும் கண்டனக் கடிதங்களை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜம்இய்யா வேண்டிக் கொண்டது.

ஏதாவதொரு விடயத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஷரீஆவின் வழிகாட்டலையும் ஜம்இய்யா வெளியிட்டுள்ளது. அது இத்துடன் இணைக்கப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழலில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வீண் வம்புகளை விலைக்கு வாங்கும் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்திருக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.

எனவே குறித்த பிரச்சினையில் மிகவும் நிதானமாகவும், நாட்டு நிலமைகளைக் கவனத்திற் கொண்டும் நடந்து கொள்ளுமாறு தனது மாவட்ட பிரதேசக் கிளைகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

 

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.அஹ்மத் முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்

http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/826-2016-08-08-07-48-04

கண்டி மாவட்டத்தில் சிறப்புததேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் பரீட்சைகளில் சிறந்த பெருபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கு ஒரு நிகழ்வு சென்ற 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக்கிளையின் தலைமை பீடம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களும், மாவட்டத்தின் 13 பிரதேசக் கிளை உறுப்பினர்கள் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷைக் எம்.இரான் நழீமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் தமதுரையில்: இன்றைய தலைமுறையினரை கல்வியின் பால் உற்சாகமூட்டுவது எமது பாரிய கடமையாகும். கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகொழும்பாகும். ஏதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்பவும், வளாந்து வருவோருக்கு சரியான பாதையைக் காட்டி அவர்களை நேர்வழிப்படுத்துவதுமே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பெருபேறுகளின் அடிப்படையில் நோக்கும் போது ஆண்களை விட பெண்கள்; தேர்ச்சியின் விகிதாசாரமே அதிகம். பெண்கள் கல்வியில் காட்டுகின்ற ஆர்வம் போலவே ஆண்களும் அதிகம் அக்கரை காட்ட வேண்டும். சமுகமளித்திருக்கும் பெற்றோர்கள் உங்கள் மகளின் கல்வியில் அக்கரை காட்டுவது பொலவே ஆண் பிள்ளைகளினதும் கல்வியில் அக்கரை காட்ட வேண்டும் என உருக்கமாகக் கூறினார்.

மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில் இந்நகிழ்வில் சுமார் 80 மாணவ மாணவிகள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என கண்டி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் அப்துல் கப்பார் தீனி அவர்கள் தெரிவித்தார்.

 

பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….

   இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அந்நாட்டுப் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் நேற்று (2017/09/12ம் திகதி செவ்வாய் கிழமை) மாலை 6:00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

   அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர்,உபதலைவர்,செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது அவர் உரையாற்றுகையில் தாய்லாந்து நாட்டின் அறிமுகத்தை வழங்கியதோடு அங்குள்ள முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிட்டார்.இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்த அவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்திக் கூறியதோடு பிறமதத்தவருடனான சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.இஸ்லாத்தின் மீது குறை கூறுபவர்கள் அல்குர்ஆனையும் குறை கூறுவதாகவும் குறிப்பிட்ட அவர் அது அல்குர்ஆனை சரிவர விளங்காத காரணத்தால் தான் நடப்பதாகவும், அல்குர்ஆனில் அல்ல பிழை இருப்பது குறை கூறுபவர்களிடம் தான் என்று கூறியது கோடிட்டு காட்ட வேண்டிய ஒன்றாக அமைந்தது.

   தொடர்ந்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் சார்பில் உரையாற்றிய அதன் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சந்திக்கும் அவல நிலைகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்,ரோஹின்யா முஸ்லீம்கள் விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு ஒற்றுமை பற்றியும்,சகவாழ்வு பற்றியும் எடுத்துக் கூறினார்.

  இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்களுக்கு முன்னிருந்து ஆரம்பிப்பதை தெளிவாகக் கூறிய அவர் இந்த நாட்டின் மீது முஸ்லிம்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும்,நாட்டுக்காக அன்று தொடக்கம் போராடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அவர்களின் கேள்விக்கு தலைவர் பின்வருமாறு பதிலளித்தார் ”இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் 1924ம் ஆண்டு எமது முன்னோர்களால் திட்டமிட்டு இலங்கை முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டு பல பகுதிகளாக இன்றுவரை செயற்படுவதாக குறிப்பிட்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒவ்வொரு பிரிவு பற்றியும் ஒரு தெளிவை வழங்கினார் தலைவரின் உரையில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் விடயத்தை வலியுறுத்திப் பேசியது குறிப்பிடத் தக்க விடயமாக அமைந்தது.

  சுமார் 2மணி நேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி,உபதலைவர் அஷ்ஷைக் அப்துல்ஹாலிக் ,பொதுச்செயளாலர் அஷ்ஷைக் முபாரக் ,உட்பட அதன் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.                        

                                                                                                                                                                                                                                                             

                                                                                                                                                                                                                                                                                            ஊடகப்பிரிவு

                                          அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

11.07.2017 (16.10.1438)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி

அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரியின் அதிபரும், பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுத் தலைவருமான அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்கள் இன்று (11.07.2017) தனது 63வது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.

கடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் சுமார் 15 வருடகாலமாக அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனது சொந்த அமல்களில் பேணுதலும், பிறருடன் அன்பாகவும் பணிவாகவும் பழகும் குணமும், பொறுப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையும், பிறருடன் நல்ல உறவைப் பேணும் அன்னாரது பண்பும் எம் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டாது. காலம் சென்ற அப்துல் சமத் ஆலிம் மற்றும் அன்னாரது சகோதரர் மௌலவி அப்துல் லதீப் ஆலிம் போன்றோர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த அன்னார் மிகவும் நற்குணம்படைத்தவராக காணப்பட்டார்கள்.
தனக்கு ஏற்பட்டிருந்த நோயையும் பொருட்படுத்தாமல் றமழான் மாதத் தலைபிறைக் கூட்டத்துக்கு அவர்கள் வருகை தந்தமை அன்னார் தமது பணிகளில் கொண்டிருந்த பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. இது உலமாக்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும்; ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி
தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2017.05.28 / 1438.09.02

மண்சரிவு, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளதுடன் பாரியளவிலான உயிர், உடமை இழப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தொழுகை, துஆ, பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற வணக்க வழிபாடுகளில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபடுவார்கள். இதனடிப்படையில் அல்லாஹ்வின் அன்பையும் றஹ்மத்தையும் நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறும் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை நீங்கி பொதுமக்கள் தமது வழமைக்குத் திரும்புவதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேசக் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் அனைவரையும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்வரும் ஜும்ஆக்களில் நிவாரண உதவிகளை (பணமாக) சேமித்து இவ்வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அது பற்றிய தகவலை 0117-490490 என்ற இலக்கத்தினூடாக எமக்கு அறியத்தருமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்

COMMERCIAL BANK

ALL CEYLON JAMIYYATHUL ULAMA

A/C  NO 1901005000

COMMERCIAL BANK

BRANCH : ISLAMIC BANKING UNIT

SWIFT CODE : CCEYLKLX

 

AMANA BANK

ALL CEYLON JAMIYYATHUL ULAMA

A/C  NO 0010112110014

AMANA BANK

BRANCH : MAIN BRANCH

SWIFT CODE : AMNALKLX

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2017.05.18 / 1438.08.21

நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.

சோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹு தஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில தினங்களில் எம்மை வந்தடையவுள்ள றமழான் மாதத்தில் நாம் அதிகளவு நல்லமல்களில் ஈடுபட வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.

தற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமைவதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.

எனவே, இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் குனூத் அந்நாஸிலா ஓதுவதற்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து இனவாதத்தை முறியடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது மக்களுக்கு இதுதொடர்பில் வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

நாட்டில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு வளரவும் தீய சக்திகளின் மோசமான திட்டங்கள் தோல்வியுற்று அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எச். உமர்தீன் 

செயலாளர் - பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஊடக அறிக்கை
1438-03-14 / 2106-12-15

சிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்!

சிரியாவில் கடந்த ஜந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. அதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த சில தினங்களாக சிரியாவின் பெரிய நகரமான அலெப்போவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இதனால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பல அசௌகரியங்களையும், கஷ்டங்களையும் எதிர்நோக்குகின்றார்கள். குழந்தைகள் பெண்கள் என்று பாராமல் அந்நாட்டு இராணுவமும் அதன் நேச நாட்டு இராணுவமும் சேர்ந்து முஸ்லிம் மக்களை படுகொலை செய்துவருகின்றது.

ஆதலால் சிரியா மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் விமோசனத்திற்காகவும் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள முன்வருமாறும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

பிரச்சாரக் குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பின்வரும் துஆக்களை ஓதுவோம்:

 

اَللّهُمَّ  إِنَّا نَسْأَلُكَ يَا اللهُ  يَا عَظِيْمُ   يَا قَوِيُّ  يَا مَتِيْنُ.

اَللَّهُمَّ احْفَظْ حَلَبَ وَأهْلَهَا، اَللَّهُمَّ احْفَظْ حَلَبَ وَأهْلَهَا .

اَللّهُمَّ  احْفَظْ حَلَبَ وَأَهْلَهَا بِحِفْظِكَ يَا رَبَّ الْعَالَمِيْنَ.

اَللّهُمَّ إِنَّا اسْتَوْدَعْنَاكَ حَلَبَ وَأَهَلَهَا : أَمْنَهَا وَأَمَانَهَا،  لَيْلَهَا وَنَهَارَهَا ، أَرْضَهَا وَسَمَاءَهَا فَاحْفَظْهُمْ يَارَبَّ الْعَالَمِيْنَ مِنْ كُلٍ سُوْءٍ وَمَكْرُوْهٍ.

اَللّهُمَّ إِنَّا نَسْتَوْدِعُكَ رِجَالَ حَلَبَ وِنِسَاءَهَا وَشَبَابَهَا وَأَطْفَالَهَا.

اَللَّهُمَّ احْفَظْهُمْ وَارْعَهُمْ وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ يَارَبَّ الْعَالَمِيْنَ.

اَللّهُمَّ  انْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ ، اَللّهُمَّ  انْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ ، اَللّهُمَّ  انْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ. اَللّهُمَّ انْصُر إِخْوَانَنَا الْمُسْلِمِيْنَ فِيْ كُلِّ مَكَانٍ اَلْمُسْتَضْعَفِيْنَ مِنْهُمْ  يَا رَبَّ الْعَالَمِيْنَ.

اَللّهُمَّ عَلَيْكَ بِمَنْ يُرِيْدُ ظُلْمًا أَوْ سُوْءً لِلْإِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ.

اَللّهُمَّ انْصُرِ الْإِسْلَامَ وَأَهْلَهُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرِّاحِمِيْنَ.