ACJU/NGS/2021/038

2021.03.20 (1442.08.06)


அஷ்ஷைக் முஹம்மத் அலி பின் ஜமீல் அஸ்ஸாபூனி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அல்குர்ஆன் விளக்கம் மற்றும் இஸ்லாமிய வராஸத் (சொத்துப் பங்கீடு) பற்றிய ஆழ்ந்த அறிவுமிக்க, பன்னூல் ஆசிரியரும் உலகமறிந்த தலை சிறந்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் முஹம்மத் அலி பின் ஜமீல் அஸ்ஸாபூனி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் வெள்ளிக்கிழமை, 2021.03.19ம் திகதி அன்று வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் 'ஹல்புஷ்ள ஷஹ்பா' எனும் நகரத்தில் 1930ம் ஆண்டில் பிறந்தார்கள். சிறு வயதிலே அல்குர்ஆனை மனனம் செய்த அவர்கள் ஆரம்ப மார்க்கக் கல்வியை தனது தந்தையிடமே கற்றுக் கொண்டார்கள். பின்னர் ஷரீஆக் கற்கைநெறியையும், உயர் கற்கை நெறியையும் எகிப்தில் அமைந்துள்ள ஜாமிஆ அஸ்ஹரிலே பெற்றுக் கொண்டார்கள். பின்னர் பல வருடங்கள் சிரியா நாட்டிலே இல்மைக் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் மக்கா நகரில் உள்ள ஜாமிஆ உம்முல் குராவில் சுமார் 25 ஆண்டுகளை கல்வி கற்றுக் கொடுப்பதிலே கழித்தார்கள்.


அன்னார் சிரியா நாட்டில் உள்ள 'ராபிதத்துல் உலமா அஸ்ஸூரிய்யீன்'; என்ற அமைப்பின் முதலாவது தலைவராகவும் அவ்வமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர்களுமாவார்கள். அவர்கள் இந்த உம்மத்திற்காக பல கிரந்தங்களை எழுதிய ஒரு எழுத்தாளரும் ஆவார்கள். ஒரு விடயத்தை கையாளும் போது அவருடைய எழுத்துக்கள் நிதானமானதாகவும், நடுநிலைப்போக்கை கொண்டதாகவும் அமைந்திருக்கும்.


இந்நாட்டு உலமாக்கள் மற்றும் ஷரீஆக் கற்கைநெறியை கற்கும் மாணவர்கள் அவருடைய கிரந்தங்களிலிருந்து அன்று முதல் இன்று வரை பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், உலகளாவிய ரீதியில் உள்ள உலமாக்களுக்கும் அக்கிரந்தங்கள் உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.


வஸ்ஸலாம்.


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

27.10.2020 /  09.03.1442

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அன்னார் 1991 முதல் 2003 வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவராகவும் 2003 முதல் 2010 வரை உப தலைவராகவும் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார்கள். 2010 முதல் இறுதி மூச்சு வரை கௌரவ பொதுச் செயலாளராக இருந்து ஜம்இய்யாவை வழி நடாத்திய ஒரு பெருந்தகையை இன்று நாம் இழந்திருக்கிறோம். சுமார் 33 வருடங்கள் தான் கல்வி கற்ற கபூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றி கல்விப் பணிக்காகவும் தீனின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்துள்ளார்கள்.


அன்னார் இந்நாட்டில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்கள். அன்னாரின் மறைவு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் பாரிய இழப்பாகும். இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு அடங்களாக அனைத்து உலமாக்கள் சார்ப்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளைப் பொறுத்து அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!

 

குறிப்பு : நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அவருக்காக துஆ செய்யுமாறும், முடியுமானவர்கள் காஇப் (غائب) ஆன ஜனாஸா தொழுகை தொழுதுகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கின்றது.


அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா