மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முன்வர வேண்டும்

ஜூலை 09, 2022

ACJU/NGS/2022/215

2022.07.09


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தி தமது தேவைகளைப் பூர்த்தி செய்துத் தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் தீர்வுகள் மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யாததால் மக்கள் அரசாங்கம் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்.


அத்துடன் மதத்தலைவர்கள், துறைசார்ந்தவர்கள், சிவில் அமைப்புக்கள் என பலதரப்பட்டவர்களும் இணைந்து குறித்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பல முன்மொழிவுகளை முன்வைத்திருக்கும் இந்நிலையில் அவற்றிற்கு அரசாங்கம் உரிய முறையில் செவிசாய்க்காது செயற்படுவதும் அவற்றை நடைமுறைபடுத்த முன்வராததும் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


நெருக்கடியான இத்தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தினால் தொடர்ந்தும் இப்பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்க முடியாது காணப்படுவதால் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகி, தகுதி வாய்ந்தவர்களை நியமிப்பதன் மூலம் ஒரு இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்கி, நாட்டை மீண்டும் அபிவிருத்தியின் பாதையில் இட்டுச் செல்ல முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.


நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்நிலையை அவசரமாக நீக்கி, நம் தாய்நாட்டை சுபீட்சம் மற்றும் அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல ஒவ்வொரு பிரஜையும் குறிப்பாக ஒவ்வொரு அரசியல்வாதியும் தமது அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, தம்மால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

 


முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.