பெற்றோர்கள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்

ஜூன் 03, 2022

ACJU/NGS/2022/147

2022.06.03 (02.11.1443)


பெற்றோர் என்பவர்கள் பெரிதும் மதிக்கப்படக்கூடிய ஒரு உறவாகும். நற்குணத்துடனும், கருணையுடனும் பொற்றோருடன் நடந்து கொள்வது பிள்ளைகள் மீது கடமையாகும். பெற்றோர்கள் மீதான கடமையை மீறுவது பெரும்பாவங்களில் ஒன்றாக இஸ்லாம் கருதுகின்றது.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை சுமந்தவர்களாவார்கள். தங்கள் குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், சுதந்திரமான ஒரு பிரஜையாகவும் வளர வேண்டுமென்பதை குறிக்கோளாக் கொண்டு செயற்படுகின்றனர். இதற்காக பல தியாகங்களை மேற்கொள்ளும் அவர்கள் தங்கள் குழந்தைகள் தங்;களை மதித்து, அன்புடன் செயற்பட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.


பெற்றோர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:


'அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்;. அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் :கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!' (17:23)


'இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக் மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திப்பீராக!' (17:24)


'ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து யா ரஸூலல்லாஹ்! உறவு முறையைப் பேணி நடந்து கொள்வதற்கு மிகவும் தகுதியானவர் யார்? எனக் கேட்டார். உனது தாய் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். பின்னர் யார் எனக் கேட்க, உனது தாய் என்றார்கள். பின்னர் யார் எனக் கேட்க, உனது தாய் என்றார்கள். பின்னர் யார் எனக் கேட்க, உனது தந்தை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள்'. (நூல்: ஸஹீஹுல் புஹாரி)


'அல்லாஹ்வுடைய பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலும், அல்லாஹ்வுடைய கோபம் தந்தையின் கோபத்திலும் இருக்கின்றது' (நூல: அல்முஸ்தத்ரக்)


எனவே, சர்வதேச பெற்றோர்கள் தினம் என்று ஐ.நா. வினால் பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தில் (2022.06.01) மற்றுமல்லாமல் எமது வாழ்நாள் முழுவதும் பெற்றோரை கண்ணியப்படுத்தக்கூடிய, அவர்களது அன்பையும் திருப்தியையும் பெற்ற பிள்ளைகளாக நாம் வாழ முயற்சி செய்ய வேண்டும்.

 


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onசனிக்கிழமை, 04 ஜூன் 2022 07:27

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.