சர்வதேச அரபு மொழித் தினம் 2021

டிச 18, 2021

ACJU/NGS/2021/289

18.12.2021

 

சர்வதேச அரபு மொழித் தினமான இன்றைய நாளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அரபு மொழியினூடகவும்  இஸ்லாத்தினூடாகவும் நம் முன்னோர்கள்  மனித சமுதாயத்துக்கும் நமது நாட்டிற்கும்  ஆற்றிய பங்களிப்புக்களை நினைவுகூருகின்றது.

அல்-குர்ஆன் அரபு மொழியில் இறக்கப்பட்டது முதல் அரபு மொழி இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் முக்கிய தூணாக அமையப்பெற்றது எனலாம்.  [நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபு மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம் (சூறா யூசுப்: 02)]  அது மாத்திரமல்லாது, அரபு மொழி இலங்கைத் திருநாட்டிலும் முழு உலக சமுதாயத்திலும் கூட அவற்றின் கலாச்சார, மத பன்முகத்தன்மையில் அளப்பரிய பங்காற்றியுள்ளது.

அறிவு மேம்பாட்டை ஊக்குவிப்பதிலும், அறிவியலையும் தத்துவ சித்தாந்தங்களையும் முழு உலகிற்கும் பரப்புவதிலும் அரபு மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது.  மேலும் உலகெங்கிலுமுள்ள சமூக பரம்பல்களுக்கு மத்தியில் ஒரு கலாச்சார இணைப்பொன்றையும் அது ஏற்படுத்தியது.

வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, அரபு மொழிக்கும் இவ்வழகிய இலங்கைத் திரு நாட்டிற்க்குமிடையிலான தொடர்பு கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களையும் கடந்த நிலையில் பண்டைய அரேபிய வர்த்தகர்கள்  இலங்கையுடன் வணிக தொடர்புகளைக் கொண்டிருந்த நாள் முதலாகவே  இருந்து வந்துள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டளவில் தென்னிலங்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் தலைமையில் அரபு மொழியிலான இஸ்லாமிய சமயக் கல்விப் போதனைகள் மத்ரஸா மட்டத்தில் துவங்கிவைக்கப்பட்டன.

இலங்கையின் பழைமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான பேராதனைப் பல்கலைக்கழகம் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகத் துறைக்கான பீடமொன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  இது 1945 ஆம் ஆண்டு ஒரு தனியான பிரிவாக நிறுவப்பட்டதுடன் 1969ஆம் ஆண்டளவில் அரபு மொழித்துறையில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இது ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதுடன் அரபு மொழி உள்நாட்டு பாடவிதானத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

உலக அரபு மொழி தினம் 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் திகதி நினைவுப்படுத்தப்படுவதோடு, 1973ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அரபு மொழியை தம் அமைப்பின் ஆறாவது உத்தியோகப்பூர்வ மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.

எனவே நாம், சர்வதேச அரபு மொழிக்கான  தினமான இந்நாளை நினைவுகூரும் அதே வேளை மொழி, மத,  கலாச்சார பன்முகத்தன்மையை மதித்து செயல்பட்டு மானுடத்துக்குப் பங்காற்றுவோம்.

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யாத்துல் உலமா

Last modified onசனிக்கிழமை, 18 டிசம்பர் 2021 11:54

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.