ரமழானும் சமூகமும்

ஏப் 06, 2021

ACJU/NGS/2021/044

2021.04.06 (1442.08.23)


ரமழான் மாதம் ஒரு மனிதன் தன்னுடைய இச்சைகளையும், ஆசைகளையும் அடக்கி பிறரது உணர்வுகளை மதிக்கும் பயிற்சியை மனிதனுக்கு வழங்கும் மாதமாகும். இக்காலப் பகுதியில் நாம் சமூகம் சார் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, இக்காலப்பகுதியில் மனிதர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் விடயங்களை மேற்கொள்வதுடன் எம்மால் யாருக்கும் தீங்கு நிகழாத வண்ணம் எமது தனிப்பட்ட விடயங்களையும், குடும்ப விடயங்களையும், சமூக விடயங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.


ரமழானில் கடைபிடிக்க வேண்டிய சமூக வழிகாட்டல்கள்:


01. றமழான் மாதம் தான, தர்மங்கள் அதிகமாக வழங்கும் மாதமாக இருப்பதனால் ஏழைகள் மற்றும் அயலவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகம் கவனம் செலுத்துதல்.

02. எமது வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.

03. வீடுகளில் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடும்போது, குறிப்பாக ஸஹர் நேரத்தில் பிறருக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்து வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மாத்திரம் கேட்கும்படி வைத்துக் கொள்ளல்.

04. மஸ்ஜித்களில் அமல்களை ஏற்பாடு செய்யும் போது கண்டிப்பாக மஸ்ஜிதுக்குச் சூழ இருக்கும் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல்.

05. மஸ்ஜிதுக்கு வாகனங்களில் வருபவர்கள் அதனை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு நடந்து கொள்ளல்.

06. மஸ்ஜித்களில் இபாதத்கள் மற்றும் கஞ்சி, உலர் உணவு பொதிகள் வினியோகித்தல் போன்ற சமூகம் சார் விடயங்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார வழிகாட்டல்களைப் பேணுவதுடன், இது குறித்து வக்ப் சபையினால் வழங்கப்படும் வழிகாட்டல்களையும் அறிவித்தல்களையும் மஸ்ஜித் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்யாது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் குறித்த பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது விடயத்தில் மஹல்லாவாசிகள் பொறுப்பாக நடந்து கொள்வதுடன் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு தங்களது ஒத்துழைப்பையும் வழங்குதல்.

07. இக்காலப்பகுதியில் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் வீணாக விழித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வழிகாட்டுவதில் உலமாக்கள், பிரதேச மக்கள் என அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அவர்களது கால நேரம் அல்லாஹ்வுக்கு விருப்பமான முறையில் அமைவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.

08. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானமாக நடந்து கொள்ளல்.

 இது விடயம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனத்தை தவறாமல் அனைவரும் வாசிப்பதுடன் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.

 ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட 'சமூக ஒற்றுமை: காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை' எனும் நூலை வாசித்து பயன்பெறல்.

09. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளல்.


இந்த ரமழானை இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அருளான ரமழானாக ஆக்கிக் கொள்வோமாக.
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.