உலமாக்களுக்கான மாதாந்த உதவித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

மார் 26, 2021

2021.03.16 (1442.08.02)

மூத்த ஆலிம்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டம் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு அண்மையில் ஆரம்பித்து வைத்தது. தக்ரீமுல் உலமா எனும் மகுடத்தின் கீழ் இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 2021.03.16 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


அஷ்ஷைக் எம்.ஏ.எம். அர்ஷத் அவர்களின் கிராஅத் பாராயணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் நிகழ்த்தினார்.


இந்நிகழ்ச்சித் திட்டம் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்கள்,
'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வளர்ச்சியில் உங்களைப் போன்ற மூத்த ஆலிம்களின் அயாராத உழைப்பும் நீங்கள் சிந்திய வியர்வைத் துளிகளும் கனதியானவை. அவற்றை கருத்திற் கொண்டு அரபு மத்ரஸாக்கள், மஸ்ஜித்கள் மற்றும் அல்குர்ஆன் மத்ரஸாக்களில் நீண்ட காலமாக சன்மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த மூத்த ஆலிம்கள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தனவந்தர்களுடன் கலந்துரையாடினோம். அதன் பிரகாரம் முதற் கட்டமாக ஐம்பது ஆலிம்களுக்கு மாதாந்த உதவித் தொகை ஒன்றினை வழங்குவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப் பெற்றது.


இத்திட்டத்திற்கு தகுதியான ஆலிம்களை தெரிவு செய்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளினூடாக விண்ணப்பங்களையும் பகிர்ந்து கொடுத்தோம். பூர்த்தி செய்யப்பட்ட குறித்த விண்ணப்பப் படிவங்கள் குறிக்கப்பட்ட திகதிக்குள் ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்றதன் அடிப்படையிலும் குறித்த ஆலிம்களின் சேவைகள், குடும்ப நிலை, வருமானம், மருந்துச் செலவினம்... முதலான விடயங்களைக் கவனத்திற் கொண்டு முதற் கட்ட உதவித் திட்டத்திற்காக ஐம்பது மூத்த ஆலிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான உதவித் திட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வே இது. மேலும் உதவிகள் கிடைக்கப் பெறுகின்றபோது இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு தகுதியான ஆலிம்களை கட்டம் கட்டமாக உள்வாங்கும் முயற்சி தொடரும், இன்ஷா அல்லாஹ்' எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்கள், ஜம்இய்யத்துல் உலமாவின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட, அதன் வளர்ச்சிக்காக உழைத்த மூத்த ஆலிம்கள் அனைவரையும் நினைவுகூர்ந்ததோடு குறிப்பாக ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களையும் நினைவுகூர்ந்தவாறு தனதுரையை ஆரம்பித்தார். தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர் தனது உரையில்,
'இந்நாட்டு மக்கள் பல்வேறு இடர்கள், சோதனைகள், துன்பியல் நிகழ்வுகளை எதிர்கொண்டபோது மனிதநேயப் பணிகளில் முன்னின்று உழைத்த அமைப்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
கனி தருக்கின்ற மரத்துக்கு கல் எறியப்படுவது போல இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பல பக்க விமர்சனங்களுக்குட்பட்டுள்ளதை சகலரும் அறிவர்.
இன்று முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் குறிப்பாக ஜம்இய்யதுல் உலமாவை முன்னிறுத்தியும் பல முனைகளிலிருந்து விரல்கள் நீட்டப்படுகின்றன. எனினும், அல்லாஹுத் தஆலா எம்முடன் இருக்கின்றான் என்பதே எமது நம்பிக்கையாகும்.


வீதியில் இறங்கி குரல் கொடுப்பது எமது முன்னோர் காட்டித் தந்த வழிமுறையல்ல. ஜம்இய்யத்துல் உலமா தனி மனிதனுக்குச் சொந்தமானதல்ல. அது ஒட்டு மொத்த சமூகத்துக்கும் சொந்தமானது. அந்த வகையில் கால சூழலைக் கவனத்திற்கொண்டு தேவைகளுக்கேற்ப துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி அதன் பிரகாரமே இயங்கி வருகின்ற ஒரு நிறுவனமே ஜம்இய்யத்துல் உலமா.
நாம் எமது தாய்நாடான இலங்கையை நேசிக்கின்றோம். அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம். நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படுவது கட்டாயமானது. ஒவ்வொருவரும் தத்தமது பிரதேசங்களிலுள்ள சகோதர இன மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுடன் நேசம் பாராட்ட வேண்டுமென மார்க்கம் வலியுறுத்துகிறது. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் நல்லவர்கள். வெகு சிலரே இனவாதத்துடன் செயல்படுகிறார்கள். எனவே, அந்த பெரும்பாலானவர்களுடன் நல்லுறவு பேணி நடந்து கொள்வது அவசியம். இவ்விடயம் பற்றியெல்லாம் உங்களது பிரதேசத்திலுள்ள ஆலிம்களுக்கு தெளிவூட்டுவது உங்களது பொறுப்பு' எனத் தெரிவித்தார்.

 

நிகழ்வில் பங்கேற்ற மூத்த ஆலிம்களுள் அஷ்ஷைக் அப்துல் ஜப்பார், அஷ்ஷைக் எம். ஹஸ்புல்லாஹ் பஹ்ஜி, அஷ்ஷைக் எம். மர்ஜான் மற்றும் அஷ்ஷைக் எம். கலீல் ஆகியோர் குறித்த நிகழ்வு பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

 

நிகழ்ச்சியின் பிரதான அம்சமான மூத்த ஆலிம்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சமுகமளித்த மூத்த ஆலிம்களுக்கான அடையாள காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாளர் அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்களின் நன்றியுரையுடனும் துஆவுடனும் நிகழ்வு நிறைவுற்றது.

 

                      

Last modified onவெள்ளிக்கிழமை, 26 மார்ச் 2021 08:22

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.