Print this page

இவ்வருடம் ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமான சில வழிகாட்டல்கள்

மே 10, 2020

09.05.2020

 

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

இவ்வருடம் ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமான சில வழிகாட்டல்கள்

  1. ஸகாத்துல் ஃபித்ர் என்பது, ஷவ்வால் மாதத் தலைப்பிறைக் கண்டதும் வசதியுள்ளவர்கள் மீது கடமையாகும் ஒரு தர்மமாகும். “ஸகாத்துல் ஃபித்ர் நோன்பாளியின் பாவங்களை சுத்தப்படுத்தக்கூடியதாகவும், ஏழைகளின் உணவாகவும் இருக்கின்றது” என்று நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

  1. பொதுவாக ஷவ்வால் பிறைக் கண்டதும் ஸகாத்துல் ஃபித்ர் கொடுப்பது கடமையாகும். என்றாலும், ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் ரமழான் மாத பிறை தென்பட்டதிலிருந்து அதனை நிறைவேற்ற முடியும்.

 

  1. ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் பொழுது, ஹனபி மத்ஹபின் அடிப்படையில் பெறுமதியைக் கொடுக்க அனுமதி இருந்தாலும், இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் அஹ்மத் போன்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி, பிரதான உணவாக உட்கொள்ளக் கூடிய தானிய வகையில் இருந்தே வழங்கப்பட வேண்டும். இதற்கு மாற்றமாக அதன் பெறுமதியைக் கொடுக்க முடியாது. இதுவே, ஆதாரப்பூர்வமான கருத்தாகும்.

 

  1. இதனை நிறைவேற்றக்கடமையான ஒவ்வொருவரும் “ஒரு ஸாஃ” அளவு வீதம், அதாவது 2.4 கிலோ கிராம் கொடுத்தல் வேண்டும்.

 

  1. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, ஸகாத்துல் பித்ரை, தகுதியானவர்களை இனங்கண்டு வீடு வீடாகச் சென்று கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.

 

  1. ஊர் பிரமுகர்கள் அல்லது மஸ்ஜித் நிர்வாகம் அல்லது ஊரில் பொதுச் சேவையில் ஈடுபடும் நிறுவனம், 2.4 கிலோ கிராம் அரிசிக்கான பெறுமதியை நிர்ணயித்து, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் பெறுமதியை ஒப்படைப்பவர்களின் சார்பாக அரிசியை வாங்கி தகுதியானவர்களுக்கு வினியோகம் செய்வோம் என்று ஊர் மக்களிடம் அறிவிப்புச் செய்து, அதனைப் பெற்று பெருநாள் தொழுகைக்கு முன் ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onஞாயிற்றுக்கிழமை, 10 மே 2020 13:44