மனித நேயமும் பலஸ்தீன பூமியும்

நவ 29, 2024

2024.11.29 (1446.05.26)

 

இஸ்லாமியப் பார்வையில் பலஸ்தீன்:

பலஸ்தீனப்பூமி உலக முஸ்லிம்களின் நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு அமைய விஷேட முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இது தொடர்பில் அல்-குர்ஆனும் சுன்னாவும் விரிவாக விளக்கியுள்ளன.

அல்-குர்ஆன் பலஸ்தீனப் பூமியை பரிசுத்தமான பூமி, அருட்பாக்கியம் நிறைந்த பூமி, அருள்வளமாக்கப்பட்ட பூமி என்று வரணிக்கிறது. இதிலிருந்து அப்பூமி புனித பூமியும் தான்; ஓர் அருட்பாக்கியம் நிறைந்த பூமியும்தான் என்பது தெளிவாகின்றது.

"(தவிர, அவர்) என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் நுழையுங்கள்." (அல்-மாஇதா : 21)

"பின்னர் (இவர்களுக்குப் பதிலாக) பலவீனமாக்கப்பட்டிருந்த மக்களை, நம்மால் அருள்வளமாக்கப்பட்ட பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசுகளாக்கினோம்." (அல்-அஃராஃப் : 137)

"தனது அடியாரை (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்ற அல்லாஹ் தூய்மையானவன். அந்த மஸ்ஜிதுல் அக்ஸா எத்தகையதென்றால், நாம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பரக்கத் (அருட்பாக்கியம்) செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக அவ்வாறு அழைத்துச் சென்றோம்." (அல்-இஸ்ராஃ : 01)

"அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்து, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊருக்குக் கொண்டுவந்து சேர்த்தோம்." (அல்-அன்பியா : 71)

 

முதலாவது கிப்லா:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மிஃராஜ் பயணத்தின் போது முஸ்லிம்கள் மீது விதியாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைக்கான முதலாவது கிப்லாவாக அல்-மஸ்ஜிதுல் அக்ஸாவே காணப்பட்டது. இத்திசையை நோக்கியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் சுமார் 16 மாதங்கள் தொழுது வந்தார்கள்.

 

இஸ்ரா, மிஃராஜின் பூமி:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் முஸ்லிம்களின் பார்வையில் முக்கியமானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மக்காவில் இருந்து பைத்துல் மக்திஸை நோக்கி வந்த பயணம் இஸ்ரா எனப்படும். பைத்துல் மக்திஸில் இருந்து வின்னுலகை நோக்கிச் சென்ற பயணம் மிஃராஜ் எனப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இவ்விரு பயணங்களையும் இணைக்கும் இடமாக பலஸ்தீனில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா காணப்படுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணிக்க எடுத்துக்கொண்ட புராக் எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவில் கட்டிவைத்து, நபிமார்களுக்கு இமாமாக இருந்து அங்கு தொழுகை நடாத்தினார்கள். இவ்விரு பயணங்கள் மூலம் கஃபாவுக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கும் இடையிலான முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவத்தை அறிந்துகொள்ள முடியும்.

 

மூன்றாவது புனிதப் பிரதேசம்:

இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டின்படி மக்கா, மதீனா, பலஸ்தீன் ஆகிய மூன்று பிரதேசங்களே புனித பிரதேசங்களாகும். அல்லாஹு தஆலா மக்காவை கஃபாவின் மூலமும், மதீனாவை மஸ்ஜிதுந் நபவியின் மூலமும், பலஸ்தீனை மஸ்ஜிதுல் அக்ஸாவின் மூலமும் கண்ணியப்படுத்தியுள்ளான். இதனடிப்படையில் இம்மூன்று இடங்களுமே நன்மையை நாடிச் செல்ல அங்கீகரிக்கப்பட்ட புனிதத் தளங்களாக இஸ்லாம் கருதுகின்றது.

 

தொழுகைக்கான பன்மடங்கு கூலிகள்:

பைத்துல் முகத்தஸில் ஒரு தொழுகையை நிறைவேற்றுபவருக்கு அதல்லாத ஏனைய ஒரு மஸ்ஜிதில் நிறைவேற்றும் தொழுகையை விட 1000 மடங்கு நன்மைகள் அதிகமாகக் கொடுக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளமை அதன் மாண்பினையும் அதற்கும் உலக முஸ்லிம்களுக்கும் உள்ள இறுக்கமான தொடர்புகளையும் உறுதிப்படுத்தும் மற்றும் ஒரு சான்றாகும்.

 

நுபுவ்வத் இறங்கிய மற்றும் அருள்நிறைந்த பூமி:

இப்பூமி ஷாம் என வரலாற்றில் அழைக்கப்படுகின்றது. தற்போதைய சிரியா, ஜோர்தான், லெபனான், பலஸ்தீன், சினாய் பாலைவனம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமே ஷாம் எனப்படும்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம், நபி லூத் அலைஹிஸ் ஸலாம், நபி ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம், நபி தாவுத் அலைஹிஸ் ஸலாம், நபி சுலைமான் அலைஹிஸ் ஸலாம், நபி மூஸா அலைஹிஸ் ஸலாம், நபி ஸகரிய்யா அலைஹிஸ் ஸலாம், நபி யஹ்யா அலைஹிஸ் ஸலாம், நபி யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம், நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் என பல நபிமார்களின் வரலாறு இப்பூமியுடன் தொடர்பு படுகின்றது.

 

நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வானிலிருந்து இறங்கும் பூமி:

மறுமைநாள் நெருங்கும் போது நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்பூமிக்கு இறங்குவார்கள்; தஜ்ஜால் இப்பூமியில் வைத்தே கொல்லப்படுவான். (இப்னு மாஜா)

 

பலஸ்தீனத்தின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும் நாடுகளும் அமைப்புகளும்:

● 15 டிசம்பர் 1988 இல், ஐ.நா பொதுச் சபை தீர்மானம் 43/177 நவம்பர் 1988 இன் பாலஸ்தீனிய சுதந்திரப் பிரகடனத்தை ஒப்புக்கொண்டது.

● கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதியை உள்ளடக்கிய மேற்குக் கரை 1988 ஆம் ஆண்டின் இறுதியில், பலஸ்தீனிய அரசு 78 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.

● ஜூன் 2024 நிலவரப்படி, ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 146 அல்லது அனைத்து ஐ.நா உறுப்பினர்களில் 75% க்கும் அதிகமான நாடுகளால் பலஸ்தீனம் ஒரு இறையாண்மை நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

● G-20 இல் அங்கத்துவம்பெற்ற ஆர்ஜென்டினா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சஊதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி போன்ற ஒன்பது நாடுகளுடன் நிரந்தர அழைப்பு நாடாகிய ஸ்பெயினும் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளன.

● 14 அக்டோபர் 1974 இல், பலஸ்தீன விடுதலை அமைப்பு ஐ.நா பொதுச் சபையால் பலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டது.

● 29 நவம்பர் 2012 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் 67/19 பலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் மாநில அந்தஸ்தை வழங்கியது.

● 17 டிசம்பர் 2012 அன்று, ஐ.நா நெறிமுறையின் தலைவர் Yeocheol Yoon அனைத்து அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகளின் ஆவணங்களிலும் செயலகத்தால் 'ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன்' என்ற அரசியலமைப்புப் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

● 10 மே 2024 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் ES-10/23 பலஸ்தீனத்திற்கு, பலஸ்தீன அரசுக்கு ஐ.நா வில் கூடுதல் உரிமைகளை வழங்கியது. இதில் உறுப்பு நாடுகளுடன் அமர்ந்திருப்பது, முன்மொழிவுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் உருப்படிகளை அறிமுகப்படுத்துவதற்கான உரிமை மற்றும் குழுக்களில் பங்கேற்கும் உரிமை ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

 

மனித நேயமும் சமயங்களும்:

மனிதநேயம் உலகில் மங்கி மறைந்து போகின்ற தருணத்தில் அதை ஒருகணம் மீட்டிப் பார்த்து மிளிரச்செய்வது சமயங்களை மதக்கோட்பாடுகளை சர்வதேச சிந்தனைகளை நேசிக்கின்ற, பேசுகின்ற சகலரதும் தார்மீகக் கடமையாகும்.

உலகில் தோன்றிய சகல சமயங்கள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என்பன இம்மனிதநேயத்தைப் பற்றி ஆழமாகப் பேசியிருக்கின்றன.

பௌத சமயம் போதித்த முதன்மையான நன்னடத்தைகள் அன்புறு நேயம், கருணை, இரக்கம், நல்லிணக்கம், நிதானம் ஆகியவையாகும். இவற்றில் அன்புறுநேயம் முதலிடத்தில் வருகிறது. துக்கத்தை போக்க உதவும் வழிமுறைகளில் முக்கியமானதும் அன்புறுநேயம், நற்குண சீலம் என்கிறது.

'இந்து சமயத்தில் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே' என்பது தான் இந்து சமயத்தின் தாத்பரியம் என்கின்றது. திருமூலர் கூறும்போது 'நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மீது அன்பு செலுத்துவான்' என்கின்றார்.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூட 'மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்க்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர்புரிவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது.

ஏசுபிரான் அவர்கள் அறிவும் அன்பும் கருணையும் இரக்கமும் நட்பும் நற்குணமும் மனிதநேயமுமிக்கவராய் வாழ்ந்தார்.

இஸ்லாம் மனித நேயத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளது:

பிறரை நேசிப்பதை இறை நம்பிக்கையின் அடையாளமாகவும் பிறர் துன்பங்களை நீக்குவதனை இறைவணக்கமாகவும் கருதுகின்றது.

அவ்வகையில் உலகில் தோன்றிய பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் போன்ற எல்லா சமயங்களும் அன்பும் கருணையும் இரக்கமும் நட்பும் அடுத்த மனிதர்களுக்கு உதவும் தன்மையும் இன மொழி பாராது, பாகுபாடு பாராது அடுத்த மனிதர்களை மனித நேயத்தோடு வாழ வைக்க வேண்டும் எனப் போதிக்கிறது.

எனினும் பலஸ்தீன மக்களின் உடல், பொருள், உயிர், உரிமைகளை அனைத்து சமயங்களும் போதிக்கும் மனிதநேயத்துடன் நோக்கும் எவரும் அம்மக்களின் மீது கருணை செலுத்துவர் என்பதில் ஐயமில்லை.

1948 ஆம் ஆண்டு முதல் லெபனானிலும் பலஸ்தீனிலும் 134,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல இலட்சம் பேர் படுகாயத்துக்குட்பட்டுள்ளனர். இவர்களில் அப்பாவி பொதுமக்கள், பெண்கள், சிறார்கள், வயோதிபர்கள், நோயாளிகளே அதிகமானவாகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பலஸ்தீன - இலங்கை உறவுகள்:

பலஸ்தீன் - இலங்கை உறவுகள் என்பது பலஸ்தீன அரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைக் குறிக்கிறது. வரலாற்று ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நட்புறவைக் கொண்டிருந்தன. பலஸ்தீனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் 1975 இல் பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) கொழும்பில் ஒரு தூதரகத்தைத் திறந்த போது தொடங்கியது. 15 நவம்பர் 1988 இல் பலஸ்தீனிய சுதந்திரப் பிரகடனத்திற்குப் பிறகு, பலஸ்தீன அரசை அங்கீகரித்த உலகின் முதல் சில நாடுகளில் இலங்கையும் மாலத்தீவுகளும் அடங்கும் என்பதுடன், தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் - பலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வை ஆதரிப்பதுடன், ஐ.நா. வில் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு தீர்மானத்திலும் இலங்கை பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான கௌரவ பிமல் இரத்நாயக்க அவர்கள் இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவராகச் செயற்படுவதானது, பலஸ்தீன் மக்கள் விவகாரத்தில் இலங்கை காட்டும் இராஜதந்திர உறவின் உறுதிப்பாட்டுடன் கூடிய அக்கறையை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகிறது.

 

இலங்கை முஸ்லிம்களான எமது வகிபாகம்:

பலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்புக்கு எதிராக இலங்கை பலஸ்தீன நற்புறவுச் சங்கம் போன்ற பல அமைப்புக்களும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் குரல்கொடுத்து வரும் இந்நிலையில் இலங்கை முஸ்லிம்கள் மீதும் பாரிய பொறுப்புக்களும் கடமைகளும் உள்ளன.

பலஸ்தீனப் பிரச்சினை என்பது அனைத்து முஸ்லிம்களின் பிரச்சினையாகும். பலஸ்தீனம் ஓர் அரேபிய இஸ்லாமிய நாடு. அதைத் தாக்குவது என்பது அனைத்து முஸ்லிம்களையும் தாக்குவதாகும். பொதுவாக லெபனான், பலஸ்தீன நிலமும் குறிப்பாக காசாவும் சமீப காலத்தில் எதிர்கொள்ளும் மனிதாபிமானக் குற்றமாகும் எனச் சர்வதேச நீதிமன்னறம் தீர்ப்பளித்துள்ளது. பலஸ்தீன பொதுமக்கள், மஸ்ஜித்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், முகாம்கள், வீடுகள் மீது தொடுக்கப்படும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளை மீறும் மிருகத்தனமான இனவழிப்பாகும்.

ஒருவர் மீது இழைக்கப்படும் அநீதியை அகற்றுவதற்கு அல்லது அவருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குத் தூண்டும் வகையில் செயற்படுவது ஈமானிய அடையாளமாகும்.

இறுதி வெற்றி நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அது தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் உறுதியாக நம்ப வேண்டும். ஏனென்றால் அது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.

அவர்களுக்காக அதிகமாக துஆச் செய்வோம்; குரல்கொடுப்போம்; இராஜ தந்திர முயற்சிகளில் ஈடுபடுவோம்; எமது சக்திக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட வகையிலான அனைத்து முயற்சிகளிலும் தொடராக ஈடுபடுவோம்.

"நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது." (அல்-பகரா : 214)

 

ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Last modified onதிங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024 06:30

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.