2024.11.28ஆம் திகதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் கௌரவ ஹினிதும சுனில் செனவி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்-ஷெய்க் கெளரவ முஹம்மத் முனீர் முளப்பர் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். அவர்களுக்கும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ ஒரு சந்திப்பும் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளை உறுப்பினர்கள் என பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஜம்இய்யாவைப் பற்றியும் இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்தும் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் அமைச்சர்களுக்கு விளக்கினார். மேலும், ஜம்இய்யா செயல்படுத்தி வரும் பல்துறை பணிகள் பற்றியும் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்பவும் மக்களிடையே புரிந்துணர்வை வளர்க்கவும் ஜம்இய்யா எவ்வாறெல்லாம் செயற்பட்டு வருகின்றது என்பது தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து ஜம்இய்யா தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்,பல்லின சமூகங்கள் வாழும் எமது இலங்கைத் திருநாட்டில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக நல்லுறவோடும் புரிந்துணர்வோடும் வாழ்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்தார்.
வளமான நாடுகளின் வெற்றிக்கு அடித்தளமாக திகழ்வது சமூகங்களிடையே அரவணைப்பு, இரக்கம், அன்பு மற்றும் மரியாதை ஆகியவை கடைபிடிக்கப்படுவதே என்பதனை தெளிவுபடுத்தியதோடு நாட்டின் மேம்பாட்டிற்காக இன, மத வேறுபாடுகளை கடந்து செயலாற்றுவது தேசபற்றுள்ள ஒவ்வொரு குடிமகனதும் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.
தலைவர் அவர்கள் தனது உரையில் பின்வரும் விடயங்கள் குறித்தும் பேசினார்.
1924 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையானது முஸ்லிம் சமூகத்திற்கு ஆன்மீக, லௌகீக வழிகாட்டல்களை வழங்கிவருவதுடன் கட்சி அரசியலற்ற நிலைப்பாட்டைப் பேணி இலங்கையின் கல்வி, பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்களிப்புக்கள் தலைவரினால் நினைவுகூரப்பட்டன.
இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் சமூகம் சகவாழ்வுக்கும், நாட்டின் சட்டங்களை திடமாகப் பின்பற்றுவதற்கும் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகின்றமையும் தலைவரால் சுட்டிக்காட்டப்பட்டது.
வக்ஃப் சட்டம், முஸ்லிம் வாரிசுரிமை சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் போன்ற சட்ட முறைமைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இடமளித்திருப்பதானது இலங்கையின் நல்லிணக்கம், சகவாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் ஹஜ், உம்ரா போன்ற புனிதப் பயணங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் செயற்படும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சிறப்பாக ஒருங்கிணைக்கின்றமையை தலைவர் பாராட்டினார்.
அல்-ஆலிம் மற்றும் தர்மாச்சாரி தேர்வுகள், அஹதிய்யா, தேசிய கல்வி அமைப்பில் இஸ்லாமிய பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்தல் போன்ற கல்வி ரீதியிலான அரசின் பணிகளையும் அவர் சிலாகித்துப் பேசினார்.
1945ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகத் துறை நிறுவப்பட்டமையை தலைவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.
நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையானது அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் என்றும் அவரால் தெரிவிக்கப்பட்டது.
2019 ஏப்ரலில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிறகான செய்தியாளர் கூட்டத்தில் நீங்கள் வழங்கிய ஆதரவு உரை எங்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது. அந்த கஷ்டமான நேரத்தில் நீங்கள் உண்மையை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம் சமூகத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டமையை நாம் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அந்த அசம்பாவிதங்களுக்கு எதிராக, தேசிய ஒற்றுமை மற்றும் சமூகங்களிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் ஜம்இய்யா மும்முரமாக செயல்பட்டமை தொடர்பிலும் இங்கு தலைவர் விளக்கினார். இதுதொடர்பில் ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை புத்த சாசன அமைச்சர் அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
வருகை தந்திருந்த அமைச்சர்களுக்கு ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு, විවෘත දෑසින් ඉස්ලාම්, සමාජ සංවාද, Don't be extreme போன்ற நூல்களும், 'மன்ஹஜ்' (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) நூலும் கையளிக்கப்பட்டது.
கெளரவ அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் தனது உரையில், இஸ்லாத்தின் நற்போதனைகள் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் கலாசார, பண்பாட்டு அம்சங்கள் தொடர்பில் தான் நன்கறிந்திருப்பதாக தெரிவித்ததுடன் நாட்டின் சகல சமூகங்களும் நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலை தற்போது மிளிர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததோடு அதற்கான திட்டங்களில் ஜம்இய்யாவுடன் இணைந்து பயணிக்க விரும்பவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் சகல இன மக்களும் தங்கள் மத கலாசார அடையாளங்களை பேணி வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளதோடு அதனை வலுவூட்டும் வழிவகைகளை தனது அமைச்சு மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்தார்.
கௌரவ பிரதியமைச்சர் அஷ்-ஷெய்க் முஹம்மத் முனீர் முளப்பர் அவர்கள் சமூகங்களிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்ததுடன் அதற்காக 'வளமான நாடு; அழகான வாழ்வு' எனும் திட்டத்தை தனது அமைச்சினூடாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, இரு அமைச்சர்களினாலும் நிர்வகிக்கப்படும் அமைச்சுக்கள் மூலம் முன்னெடுக்கப்படும் உன்னதமான பணிகள் அனைத்தும் வெற்றிபெற ஜம்இய்யாவின் தலைமைகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில், தாங்கள் விரும்பும் பட்சத்தில் இஸ்லாம் பற்றியும் அதன் போதனைகள் பற்றியும் விளக்க செயலமர்வொன்றினை நடாத்த தான் எதிர்பார்ப்பதாக தலைவர் அவர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -