ACJU/FTW/2017/07-284
2017.03.07 (1438.06.07)
கேள்வி : தங்கம் வெள்ளி போன்றவைகளை கடனுக்கு வியாபாரம் செய்வது கூடுமா?
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
வியாபாரம் சம்பந்தமாக இஸ்லாத்தில் பொதுவான சட்டங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், தங்கம் வெள்ளி போன்ற சில வியாபாரப் பொருட்களுக்கு விஷேட சட்டங்களும் உள்ளன. இது பற்றி பின்வரும் ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது.
"தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், கோதுமையை கோதுமைக்கும், வாற்கோதுமையை வாற்கோதுமைக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்பிற்கும் சரி சமமாக, உடனுக்குடன் விற்கலாம். ஆனால் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும் போது, உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் சரி சமமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”. என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் என உபாதத் இப்னு அஸ்-ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.[1]
இந்த ஹதீஸின் அடிப்படையில், தங்கத்தை தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், கைமாற்றும் வியாபாரதத்தில் பின்வரும் மூன்று நிபந்தனைகளும் இடம்பெற வேண்டும்.
1. ஒரே நேரத்தில் நடைபெற்று முடிய வேண்டும்.
2. விற்கப்படும் பொருளும் வாங்கப்படும் பொருளும் சரி சமமாக இருத்தல் வேண்டும்.
3. உடன் கைமாறப்பட்டு சொந்தமாக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
இவற்றில் ஏதாவது ஒரு நிபந்தனை இடம்பெறாவிட்டால் அவ்வியாபார முறை வட்டியாக மாறிவிடும்.
மேலும், தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் கைமாற்றும் வியாபாரத்தின் பொழுது இரண்டும் சரி சமமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இடம்பெறவேண்டிய அவிசியம் இல்லை. மாறாக உடனுக்குடன் மற்றும் உடன் கைமாறப்பட்டு சொந்தமாக்கிக் கொள்ளல் ஆகிய இரண்டு நிபந்தனைகளும் இடம்பெறுவது அவசியமாகும்.
ஒரு காலத்தில் பொருட்களை வாங்கவும் விற்கவும் தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்காலத்தில் பொருட்களை வாங்கவும் விற்கவும் பணம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், பணத்துக்குப் பணம் கைமாற்றப்படும் பொழுதும், பணத்துக்குத் தங்கம் வெள்ளி கைமாற்றப்படும் பொழுதும், தங்கம் வெள்ளிக்கென்று உள்ள விஷேட சட்டங்கள் பணத்திலும் பார்க்கப்பட வேண்டும் என்பதே தற்கால பெரும்பான்மையான ஃபத்வா அமைப்புகளினதும் மற்றும் மார்க்க அறிஞர்களினதும் கருத்தாகும்.
ஆனால், ஹனபி மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் பணத்துக்காகத் தங்கம் அல்லது வெள்ளியை வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுது மேற்குறித்த நிபந்தனைகள் இடம்பெறுவது அவசியமில்லை என்றும், பணத்தை முழுமையாகப் பெற்று தங்கம் அல்லது வெள்ளியைக் கடனுக்கும், தங்கம் அல்லது வெள்ளியை முழுமையாகப் பெற்று பணத்தைக் கடனுக்கும் வியாபாரம் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
என்றாலும், மேற்குறிப்பிட்ட பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் ஹனபி மத்ஹபுடைய மார்க்க அறிஞர்களின் இந்த கருத்தை நிராகரித்துள்ளனர்.
இவ்வடிப்படையில் ஒரு நாட்டின் பணத்தை அதே நாட்டின் பணத்துக்குக் கைமாற்றப்படும் பொழுது உதாரணமாக : இலங்கை ரூபாவை இலங்கை ரூபாவுக்கு மாற்றும்பொழுது, மேற்கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளும் இடம்பெற வேண்டும். அதேபோன்று ஒரு நாட்டின் பணத்தை இன்னும் ஒரு நாட்டின் பணத்துக்குக் கை மாற்றும்பொழுது, உதாரணமாக : இலங்கை ரூபாவை அமெரிக்க டொலருக்கு மாற்றும் பொழுது உடனுக்குடன் நிறைவேற்றுதல், உடன் கைமாறப்பட்டு சொந்தமாக்கிக் கொள்ளல் ஆகிய இரண்டு நிபந்தனைகளும் இடம்பெறுவது அவசியமாகும். சரி சமமாக இருத்தல் வேண்டும் எனும் நிபந்தனை அவசியமில்லை.
அதேபோன்று, பணத்திற்குத் தங்கத்தை அல்லது வெள்ளியை விற்கும்பொழுதும், மேற்கூறிய இவ்விரண்டு நிபந்தனைகளும் இடம்பெறுவது அவசியமாகும்.
இவ்வடிப்படையில், பணத்திற்குத் தங்கத்தை அல்லது வெள்ளியை விற்கும் பொழுது அல்லது வாங்கும் பொழுது அவைகளைக் கடனுக்குக் கொடுத்தால் அல்லது எடுத்தால் அது வட்டியாக மாறிவிடும்.
ஆகவே, ஹதீஸ்களில் தங்கத்திற்குத் தங்கம் என்றும் வெள்ளிக்கு வெள்ளி என்றும் பொதுவாக கூறப்பட்டிருப்பதால் தங்கம் கட்டியாக அல்லது உருக்கப்பட்ட ஆபரணமாக இருந்தாலும், அவைகளைக் கடனுக்கு எடுப்பது மற்றும் கொடுப்பது ஹராம் என்பதே ஷாபிஈ மத்ஹபின் அறிஞர்கள் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் மற்றும் தற்கால ஃபத்வா அமைப்புகளினதும் கருத்தாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
[1] عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :(الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ ، مِثْلًا بِمِثْلٍ ، سَوَاءً بِسَوَاءٍ ، يَدًا بِيَدٍ . فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الْأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ) (صحيح مسلم – كتاب المساقاة - بَابُ الصَّرْفِ وَبَيْعِ الذَّهَبِ بِالْوَرِقِ نَقْدًا– تبويب الإمام النووي)