அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலுக்கமைய ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகள் விவகாரக்குழு மற்றும் கொழும்பு மாவட்ட ஜம்இய்யா ஆகியன இணைந்து நடாத்திய கொழும்பு மாவட்டத்திலுள்ள அரபிக் கல்லூரிகளுக்கான முகாமைத்துவ வலுவூட்டல் செயலமர்வு 2024.07.07 அன்று வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
'அரபிக் கல்லூரிகளை முகாமைத்துவ ரீதியில் வலுவூட்டுதல் மற்றும் மேம்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் கொழும்பு மாவட்டத்திலுள்ள 23 அரபிக் கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கும் மேற்பட்ட அதிபர்கள், உஸ்தாத்மார்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலின் இமாம் அஷ்-ஷைக் ஷியாம் காரீ அவர்களால் கிராத் ஓதப்பட்டது.
அதனையடுத்து கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஷுகூர்தீன் அவர்கள் சமுகமளித்திருந்த அரபிக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளை வரவேற்கும் முகமாக வரவேற்புரையை நிகழ்த்தினார்கள்.
வரவேற்புரையினை அடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர் அவர்களினால் நிகழ்வு பற்றிய அறிமுக உரை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 'அரபிக் கல்லூரிகளின் நிதி மற்றும் நிர்வாக முகாமைத்துவங்களின் முக்கியத்துவம்' எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்கள் விளக்கவுரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.
பொருளாளரது உரையினையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் அரபிக் கல்லூரிகளின் முகாமைத்துவ விவாகாரங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைத்து உரை நிகழ்த்தப்பட்டது.
அதனையடுத்து ஜம்இய்யாவின் கல்விக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் அவர்கள் 'அரபிக் கல்லூரிகளின் முகாமைத்துவ செயற்றிட்டம்' எனும் தொனிப்பொருளில் விஷேட உரையொன்றை முன்வைத்தார்கள்.
தொடர்ந்து, அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத் அவர்களினால் 'அரபிக் கல்லூரிகளின் நிதிமுகாமைத்துவம்' எனும் தலைப்பில் வழிகாட்டல் உரையொன்று சபையில் முன்வைக்கப்பட்டது.
குறித்த உரையினை அடுத்து நிகழ்விற்கு வருகை தந்திருந்த அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள் ஆகியோரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரபிக் கல்லூரிகள் விவகாரக்குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எம். ஆஸாத், அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத் ஆகியோரது நெறிப்படுத்தலின் கீழ், வருகை தந்திருந்த அரபிக் கல்லூரிகளின் முக்கியஸ்தர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு திறந்த அடிப்படையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு அவர்களது ஆலோசனைகளும் பெறப்பட்டன. இதில் ஆலிம்கள் விவகாரப்பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பவாஸ், துணை இணைப்பாளர் அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் இறுதியாக கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் பாயிஸ் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டமையினை அடுத்து நிகழ்வு நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அரபிக் கல்லூரிகளின் அதிபர்கள், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், அரபிக் கல்லூரிகள் விவகாரக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலின் தலைவர் அல்-ஹாஜ் ரிஸ்வி ஆகியோர் கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -