அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வழங்கும் ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜூன் 17, 2024

ACJU/NGS/2024/345

2024.06.17 (1445.12.10)

 

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் (அலைஹிமஸ்ஸலாம்) தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹு தஆலா இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

அர்ப்பணிப்புகள், தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றியடைய முடியுமென்பதை இஸ்லாம் இதனூடாகப் போதிக்கின்றது. ஏனெனில் தனிமனிதர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்.

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் தனையனது தியாகத்தைப் பறைசாற்றும் 'உழ்ஹிய்யா' எனும் தியாகத்தையும் ஏனைய அமல்களையும் இந்த நன்னாளில் நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கேற்ப உரிய முறையில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

அதேவேளை, தியாகத்திருநாள் கற்றுத்தரும் பாடங்களான அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிதல், அல்லாஹ்வின் மீதான நேசம், அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை, தவக்குல், முன்மாதிரிமிக்க சிறந்த பிள்ளைவளர்ப்பு போன்றவற்றை எமது வாழ்விலும் கடைபிடித்து வாழ்வதோடு எமது குடும்ப உறவுகளிடமும் இவ்வாறான உயர்ந்த பண்புகளை ஏற்படுத்தி ஈருலக வாழ்விலும் வெற்றிபெற முயற்சி செய்வோமாக!

மேலும் நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர்ந்திடவும் பாதிக்கப்பட்ட மக்களது நிலமைகள் சீராகிடவும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனை செய்கிறது.

'தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்! ஈத் முபாரக்!'

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onதிங்கட்கிழமை, 24 ஜூன் 2024 04:07

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.