008/ACJU/F/2011/0138
[19.05.2011 (14.06.1432) ஆம் திகதி வெளியிடப்பட்ட ஃபத்வா]
ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவைகளைப் பற்றி மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஊழியர் சேமலாப நிதி என்பது அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு கால வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்வதற்காக ஊழியர்கள் மற்றும் தொழில் வழங்குனர்களின் பங்களிப்புடன் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
ஊழியர் நம்பிக்கை நிதி என்பது அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு கால வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்வதற்காகவும் அவர்களின் திடீர் தேவைகளுக்கு நிவாரணியாகாகவும் தொழில் வழங்குனர்களின் பங்களிப்புடன் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
இந்நிதிகளைப் பெற்று அரசாங்கம் முதலீடு செய்து அதில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை ஊழியர்களுக்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியுடன் சேர்த்து வழங்குகின்றது.
எப்பொழுது அரசாங்கம் கட்டாயமாக ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதியாகவோ அல்லது ஊழியர் நம்பிக்கை நிதியாகவோ எடுத்துக் கொள்கின்றதோ அந்நிதி ஊழியர்களுக்கு வழங்கப்படாதவரை ஊழியர்களின் பணமாக கணிக்கப்படமாட்டாது. எனவே ஊழியர்கள் அந்நிதியைப் பெறும்போது அது அரசாங்கம் கொடுக்கும் உபகாரத்தெகை என்றே கணிக்கப்படும். எனவே இம்முறையில் கிடைக்கும் மேலதிகப் பணத்தைத் தான் பாவிக்கலாம்.
ஆனால் ஊழியரே முன்வந்து தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஊழியர் சேமலாப நிதியாகவோ அல்லது ஊழியர் நம்பிக்கை நிதியாகவோ கொடுத்தால் அப்பொழுது அவரது தொகை போக மேலதிக தொகை இஸ்லாத்தின் பார்வையில் முறையற்ற வழியில் கிடைத்ததாகவே கணிக்கப்படும். எனவே மேலதிகப் பணத்தை தான் பாவிக்காமல் பிறர் யாருக்காவது கொடுத்து விட வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா