இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தினத்தையிட்டு ஜம்இய்யா விடுக்கும் செய்தி

பிப் 04, 2024

ACJU/NGS/2024/304 

2024.02.04 (1445.07.23)

 

நமது தாய்நாடான இலங்கைத் திருநாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் இந்த முக்கியமான தருணத்தில், சாதி, இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து நமது சுதந்திரத்திற்குப் பங்காற்றிய அனைத்துத் தரப்புக்களினது தலைவர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் முதலில் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்கள் தேசத்தின் மீது அன்பும் விசுவாசமும் கொள்வதோடு அதன் முன்னேற்றம், மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக தீவிரமாக செயலாற்ற வேண்டிய ஒரு தார்மீகக் கடமையை கொண்டுள்ளனர். இந்தக் கோட்பாடுகள் மனித இயல்புடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல் பல்வேறு மத போதனைகளிலும் வலியுறுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு குடிமகனும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முழு சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தூரநோக்கோடு நமது தாய்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக எம் முன்னோர்கள் அயராது உழைத்தனர். அவர்களின் நடவடிக்கைகள் கண்ணியம், மரியாதை மற்றும் சகோதரத்துவத்தால் வார்க்கப்பட்டிருந்தது.

நம் முன்னோர்களின் இலக்காகவிருந்த சுதந்திரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெற விருப்பம் கொள்வோம். சமாதானம் மற்றும் அமைதிக்கு பெயர் பெற்ற ஒரு முன்மாதிரியான தேசமாக நமது தாய்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். குடிமக்களாக எதிர்கால சந்ததியினருக்கான சுதந்திரத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்து, நமது நாட்டின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம்.எமது நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை மேலோங்கி அனைத்து குடிமக்களும் சகல உரிமைகளோடும் சுதந்திரத்தோடும் அமைதியான ஒரு வாழ்வை வாழ எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா அருள்புரிய வேண்டுமென பிரார்த்திப்பதோடு இலங்கையானது முழு சுதந்திரமுள்ள நாடாக உலகளாவிய ரீதியில் மிளிர வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இத்தினத்திலே பிரார்த்திக்கிறது.

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய் யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onஞாயிற்றுக்கிழமை, 04 பிப்ரவரி 2024 02:42

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.