கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டங்கள்.

ஜன 23, 2024

ACJU/FTW/2016/01-0227
18.01.2016 (07.04.1437) அன்று வெளியிடப்பட்ட பத்வா

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இன்று பொதுவாக மஸ்ஜித்களில் கதிரைகளில் அமர்ந்து தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதை பரவலாக அவதானிக்க முடிகிறது. அவர்களில் பலர் தகுந்த காரணமின்றியும் கதிரைகளில் உட்கார்ந்து தொழுகின்றனர். பொதுவாக பர்ளான தொழுகைகளில் நின்று தொழுவதும், ஸுஜூதில் நெற்றி, இரு முழங்கால்கள், இரு கைகள், மற்றும் இரு பாதங்கள் ஆகிய ஏழு உறுப்புக்களின் மீது ஸுஜூத் செய்வதும் அவசியமாகும். இவ்வேழு உறுப்புக்களில் சில உறுப்புக்களில் மாத்திரம் தான் ஸுஜூத் செய்ய முடியுமாக இருந்தால், இயலுமான உறுப்புக்கள் மீது ஸுஜூத் செய்வது கட்டாயமாகும்.

பர்ளான தொழுகைகளில் தன்னால் இயன்ற அளவு நின்று தொழுவதற்கு முயற்சித்தும் அது முடியாத நிலையில் மாத்திரமே உட்கார்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. எனவே அதுபற்றிய மார்க்க சட்டங்களை கதிரைப் பயன்பாட்டாளர்கள் விளங்கியிருப்பது அவசியமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கதிரைகள் பயன்பாட்டிலிருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லது நபித் தோழர்களோ நின்று தொழ முடியாத சந்தர்ப்பங்களில் கதிரைகளைப் பயன்படுத்தியதாக வரலாறுகளில் காணப்படவில்லை. மாறாக, அவர்கள் தரையில் அமர்ந்தே தொழுதுள்ளார்கள். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குதிரையில் சவாரி செய்யும் போது கீழே விழுந்ததனால் காலில் காயம் ஏற்பட்ட போது தரையில் அமர்ந்து தொழுதார்கள்." (ஸஹீஹுல் புகாரி : 689)

எனவே, தொழுகைகளில் பொதுவாக கதிரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து தரையில் அமர்ந்து தொழுவதே மிகச் சிறந்த முறையாகும். அவ்வாறு கட்டாயம் பாவிக்க வேண்டும் என்றிருந்தால் சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே குறித்த நிபந்தனைகளுடன் தொழுகையில் கதிரைகளைப் பயன்படுத்த முடியும். இவற்றைக் கருத்திற்கொண்டு கதிரைகளில் அமர்ந்து தொழுவதற்கு அனுமதியுள்ள, அனுமதியில்லாத சந்தர்ப்பங்கள் பற்றி கீழே விளக்கப்படுகின்றன.

1. நிலையில் மாத்திரம் நிற்க முடியுமாக இருந்து, றுகூஉ மற்றும் ஸுஜூதை முறையாக நிறைவேற்றவும் தரையில் அமரவும் முடியாதவர்.

இத்தகையவர் நிலையில் நிற்பதுடன் றுகூஉ மற்றும் ஸுஜூதை நிலையில் நின்றவாறு சமிக்ஞை மூலம் சற்று குனிந்து நிறைவேற்றுதல் வேண்டும். முடியுமாயின் ஸுஜூதுக்காக றுகூஉவை விட, சற்று அதிகமாகக் குனிவது அவசியமாகும். எனினும் நீண்ட நேரம் நிற்பது சிரமமாக இருப்பின் நிலை மற்றும் அத்தஹிய்யாத்துடைய சந்தர்ப்பங்களில் மாத்திரம் கதிரையில் அமர்ந்து தொழுவதற்கு அனுமதியுண்டு.

2. நிலையில் நிற்கவும் முறையாக றுகூஉ செய்யவும் முடியுமாக இருப்பவர். என்றாலும், ஸுஜூது செய்வதற்கும், தரையில் அமர்வதற்கும் முடியாதவர்.

இத்தகையவர், றுகூஉவுக்காக குனிவது போல் நின்ற நிலையில் ஸுஜூதை குனிந்து நிறைவேற்றுவதும் நின்ற நிலையிலேயே அத்தஹிய்யாத்தை ஓதுவதும் அவசியமாகும். நீண்ட நேரம் நிற்பது சிரமமாக இருப்பின் நிலை மற்றும் அத்தஹிய்யாத்துடைய சந்தர்ப்பத்தில் கதிரையைப் பயன்படுத்த அனுமதியுண்டு.

3. நிலையில் நிற்க முடியாமல் இருந்து, ஸுஜூதை முறையாக நிறைவேற்ற சக்தி பெற்றவர்.

இத்தகையவர் தரையில் தனக்கு வசதியான இருப்பில் அமர்ந்து தொழ வேண்டும். மேலும் நிலையில் ஓத வேண்டியவைகளை ஓதிய பின்பு தனது தலையை ஸுஜூதில் வைக்கும் இடத்திற்கு நேராகக் கொண்டு வருவதன் மூலம் றுகூஉ செய்ய வேண்டும். இது உட்கார்ந்து தொழுபவருக்குரிய றுகூஉவாகும். உட்கார்ந்து றுகூஉவுக்காகக் குனியும்பொழுது ஸுஜூதில் தலை வைக்கும் இடத்துக்கு நேராகத் தலை வரும் அளவுக்குக் குனிவது பூர்த்தியான முறையாகும். குறைந்தது முழங்காலுக்கு நேராகத் தலை நேர்படும் அளவேனும் குனிவது கட்டாயமாகும். அதன் பிறகு வழமையான முறைப்படி ஸுஜூதை நிறைவேற்ற வேண்டும். எனினும் நீண்ட நேரம் தரையில் அமர முடியாவிடின் ஸுஜூதை முறையாக நிறைவேற்றியதன் பின் அத்தஹிய்யாத்துக்காக கதிரையில் அமரலாம்.

4. நிலை றுகூஉ மற்றும் ஸுஜூத் ஆகிய அனைத்துக் கடமைகளையும் முறையாக நிறைவேற்ற முடியாதவர்.

இவர் தரையில் அமர்ந்து றுகூஉவையும் ஸுஜூதையும் உட்கார்ந்த நிலைமையிலே நிறைவேற்றுவார். என்றாலும் ஸுஜூதை, றுகூஉவை விட சற்றுத் தாழ்த்துவது ஏற்றமாகும். இவர் கதிரையில் உட்கார்ந்து மேற்கூறிய முறைப்படி நிறைவேற்றவும் அனுமதியுண்டு.

5.நிலை, றுகூஉ மற்றும் ஸுஜூது ஆகிய மூன்றையும் முறையாக நிறைவேற்ற முடியுமாக இருந்தும் நிலையில் இருந்து தரைக்கு வருவதற்கும் உட்கார்ந்ததன் பின் எழும்புவதற்கும் சிரமமாக இருக்கும் நிலையில் உள்ளவர்.

இவர் தரையில் அமர்ந்து தொழுவார். இவருக்கு நிலையில் நிற்பது கட்டாயமில்லை. ஏனெனில் நிலையில் நிற்பதை விட ஸுஜூதை முறையாக நிறைவேற்றுவது முக்கியமாகும். இத்தகையவர்கள் கதிரையில் அமர்ந்து தொழுவதற்கு அனுமதி இல்லை.

 

குறிப்பு:

• முதலாவது அத்தஹிய்யாத் இருப்பு, கடைசி அத்தஹிய்யாத் இருப்பு, சம்மான இருப்பு, இரு பாதங்களையும் நட்டி உட்காருதல் போன்ற எம்முறையிலும் தரையில் அமர்ந்து தனக்கு வசதியான முறையில் அமர்ந்துகொண்டு தொழலாம்.

• கதிரைகளில் உட்கார்ந்து தொழுபவர்கள் ஸஃப்புகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கதிரைகளின் பின்கால்களை சப்புடைய கோட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஏனைய தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மஸ்ஜிதின் ஓரப்பகுதிகளில் கதிரைகளை வைத்துக்கொள்ளவது நல்லது.

• ஆலிம்கள் மேற்கூறப்பட்ட முறைகளை விளங்கி மஸ்ஜித்களில் இதற்காக பிரத்தியேக பிக்ஹ் வகுப்புக்களை நடாத்தி பொது மக்களுக்கு விளக்கப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்வதும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான நிலைமைகளை விளங்கி முறையாகத் தொழுகைகளை நிறைவேற்றுவதானது தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படக் காரணமாக அமையும்.

வஸ்ஸலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.