இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

ஜன 11, 2024

2024.01.11 (1445.06.27)

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எதிர்வரும் 2024.01.12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தில் 'இஸ்லாத்தின் பார்வையில் அனர்த்தங்களும் பிறர் துயர் துடைப்பும்' எனும் தலைப்பையும் உள்ளடக்கி உரையினை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

'இஸ்லாத்தின் பார்வையில் அனர்த்தங்களும் பிறர் துயர் துடைப்பும்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/1wmrZDKPOHVP9AaZbPq9TTHiAYOdsapYp/view?usp=drive_link

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் பல பகுதிகளிலும் அடிக்கடி அனர்த்தங்கள் இடம் பெற்று வருவதை நாங்கள் காண்கிறோம். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அசௌகரியங்களை தாங்கிக் கொண்டு வாழ்வதைக் அவதானிக்கின்றோம்.

இந்த வகையில் எமது நாட்டிலும் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் அதனைத் தொடர்ந்து சில பிரதேசங்களில் மண் சரிவும் இடம்பெற்று பல வீடுகள், கடைகள், பல ஏக்கர் வயல் நிலங்கள் மற்றும் பயிர் நிலங்கள் உள்ளிட்டவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இஸ்லாம் அனர்த்தத்தை எவ்வாறு நோக்குகின்றது? இதற்கான காரணம் என்ன? அனர்த்தங்களின் போது இஸ்லாம் கற்றுத்தரும் பாடம் என்ன? பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைப்பது பற்றி இஸ்லாமிய அணுகு முறை யாது? என்பது கூடுதல் கவனத்துடன் நோக்கப்படவேண்டிய விடயமாகும்.

 

இஸ்லாமும் அனர்த்தங்களும்:

இயற்கை அனர்த்தங்கள், சோதனைகள் ஏற்பட்டமைக்கு பலரும் பௌதீக ரீதியான பல அனுமானங்களை வைத்து காரணங்களைக் கூறலாம். இருப்பினும் இஸ்லாம் அனர்த்தங்களை மனித உலகிற்கான சோதனையாக பார்க்கிறது.

 

அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்பூட்டும் வசனங்கள்:

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ (2:155)

"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

 

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَ (2:286)

"எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (2:286)


அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்கும் ஹதீஸ்கள்:

عن أبي هُرَيْرَةَ رضي الله عنه يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ  (صحيح البخاري : 5645)    

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகிறான்”. (ஷஹீஹுல் புகாரி: 5645)

 

அனர்த்தங்களில் இறைவிசுவாசியின் நிலை பற்றி விபரிக்கும் அல்-குர்ஆன் வசனங்கள்:

الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ  (2:156)

"(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்." (2:156)

 

وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ۖ  (21:83)

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது. (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.” என்று பிரார்த்தித்தார்கள்." (21:83)

 

அனர்த்தங்களில் இறைவிசுவாசியின் நிலை பற்றி விபரிக்கும் ஹதீஸ்கள்:

عَنْ صُهَيْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ  (صحيح مسلم : 2999)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இந்தப் பாக்கியமானது அமைவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. (ஸஹீஹ் முஸ்லிம்: 2999)

 

அனர்த்தங்கள் ஏன் ஏற்படுகின்றன?

அனர்த்தங்கள் மற்றும் சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலமாக அல்லாஹ் தனது அடியார்களை பாவங்களிலிருந்து மீண்டு தன்பக்கம் நெருங்கச் செய்தல், பாவங்களிலிருந்து அவர்களை தவிர்ந்து கொள்ள வைத்தல், அவர்களது பாவங்களை மன்னித்து மனிதப் புனிதனாக மாற்றுவதற்கான உணர்ச்சியூட்டல், இதன் மூலமாக ஏனையவர்களுக்கு படிப்பினையினை உண்டாக்குதல் போன்ற பல விடயங்களை நாடுகிறான். இது தொடர்பாக நபியவர்களின் பின்வரும் ஹதீஸ்கள் விபரிக்கின்றன.

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: )مَا يُصِيبُ المُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ  (صحيح البخاري : 5641)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை”. (ஸஹீஹுல் புகாரி: 5641)

 

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا؟ قَالَ: (أَجَلْ، إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ» قُلْتُ: ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ؟ قَالَ: «أَجَلْ، ذَلِكَ كَذَلِكَ، مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى، شَوْكَةٌ فَمَا فَوْقَهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا سَيِّئَاتِهِ، كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا)  (صحيح البخاري : 5648)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!” என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘ஆம்! உங்களில் இரு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகின்றேன்” என்று சொன்னார்கள். நான் ‘‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘ஆம்! அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்த்து மன்னிக்காமல் விடுவதில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 5648)

 

ஏன் அனர்த்தங்கள் வேதனைகளாக மாறுகின்றன?

சில வேளை சோதனைகள் வேதனைகளாகவும் மாறும் என்றும் அதற்கு மனிதர்களின் தீய செயல்களும், பாவங்களும் காரணமாகும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இது தொடர்பாக பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ‏(30:41)

"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (30:41)

 

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌. وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا (4:79)

“உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது.)" (04:79)

மேற்கூறப்பட்ட இவ்வசனங்கள் உலகில் குழப்பங்கள், அழிவுகள், தீங்குகள் ஏற்பட மனிதனும் அவனது செயற்பாடுகளும் கூட காரணமாக உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

 

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை துடைப்போம்:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களது துக்கத்தில் பங்கு கொள்வது ஒவ்வொருவர் மீதுமுள்ள கடமையும், பொறுப்புமாகும். இது தொடர்பாக அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌. وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌. وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ‏ (05:02)

“இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்”. (05:02)

 

عن أبي هريرة رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : من نفس عن مؤمن كربة من كرب الدنيا ، نفس الله عنه كربة من كرب يوم القيامة ، ومن يسر على معسر ، يسر الله عليه في الدنيا والآخرة ، ومن ستر مسلما ، ستره الله في الدنيا والآخرة ، والله في عون العبد ، ما كان العبد في عون أخيه ، (صحيح مسلم:2699)

"யார் இந்த உலகில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறு உலகத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். 'யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய முன் வருகிறாரோ அவருக்கு அல்லாஹ் ஈருலகிலும் உதவி செய்கிறான். 'யார் ஒரு இறைநம்பிக்கையாளரின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் ஈருலகிலும் மறைக்கிறான். 'ஒருவர் தனது சகோதரருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டிருக்கிறான்”. (ஸஹீஹு முஸ்லிம்: 2699)

 

 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: (أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا، أَوْ تَقْضِيَ عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا) (طبراني: 6026)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுறைறா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'அமல்களில் மிகச் சிறந்தது நீங்கள் உங்களது முஃமினான சகோதரரின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகும். அல்லது அவருடைய கடனை நிறைவேற்றுவதாகும் அல்லது அவருக்கு ரொட்டியை உணவாகக் கொடுப்பதாகும்” (தபரானி: 6026 )

அந்தவகையில் இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு காரணமாக, பலர் அசாதாரணமான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடத்தியவர்கள் சிறு சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பிறர் தயவிலே வாழ்ந்து வந்த ஏழை எளியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஓர் அளவு தன்னிறைவாகவே வாழ்ந்தவர்கள் கூட நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து தேவையுடையோர்களுக்கு நிறைவாக செய்வதற்கு முன் வரவேண்டும். குறைந்த பட்சம் எமது உறவினர்களையும், அண்டை அயலவர்களையும் ஊர் மக்களையும் அரவணைக்கும் கடப்பாடு நம் அனைவருக்கும் இருக்கின்றது.

ஊர் மட்டங்களிலும் பலர் தேவையுள்ள மக்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்வானாக! இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புக்களுக்கு எல்லோரும் அந்தந்த பிரதேசங்களில் தமது பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.

அத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து பணிகளிலும் வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி செய்யும் விடயத்தில் அந்தந்த பிரதேசத்திலுள்ள ஜம்இய்யாவின் கிளைகள் உதவி புரிவோருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாவங்களிலிருந்து பாவமன்னிப்பு செய்து மீள்வதும், அதிகமதிகம் தான தர்மங்கள் செய்வதும், நல் அமல்களில், நற்பணிகளில் ஈடுபடுவதும் நாம் எதிர் கொண்டு இருக்கின்ற இந்தப் பேராபத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு காரணமாக அமையும். வல்ல நாயன் அல்லாஹு தஆலா அனர்த்தங்களிலிருந்து எம்மனைவரையும் பாதுகாப்பானாக!

 


அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப் ( (BIS (R), புகாரி
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 17 ஜனவரி 2024 11:10

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.